
எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை சொந்தமாக்கியதில் இருந்து அதில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். முதலில் ட்விட்டர் லோகோவை மாற்றிய அவர் அதன் பிறகு ட்விட்டருக்கு எக்ஸ் என பெயர் மாற்றம் செய்தார். எலான் மஸ்க் எப்போது எந்த மாற்றத்தை கொண்டு வருவாரோ என அதன் பயனாளிகள் குழப்பத்திலேயே இருந்தனர். இந்நிலையில் மஸ்க் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மற்ற தகவல் பரிமாற்ற செயலிகளான ஃபேஸ்புக், இன்ஸ்டா, வாட்ஸ் அப், டெலிகிராம் போன்றவை போட்டிப்போட்டுக் கொண்டு வாடிக்கையாளர்களை கவர்ந்து வரும் நிலையில், எக்ஸையும் களத்தில் இறக்கியுள்ளார், மஸ்க். புதிய அம்சங்களை அறிமுகம் செய்யவிருப்பதாக கடந்த மே மாதமே அறிவித்திருந்த அவர் தற்போது அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஆடியோ மற்றும் வீடியோ கால் செய்யும் வசதி எக்ஸ் தளத்திலும் வர இருப்பதாக தெரிவித்துள்ளார். ஐஓஎஸ், ஆண்ட்ராய்டு, மேக் மற்றும் கணினியில் செயல்படும் என தெரிவித்துள்ள அவர் இதற்கு போன் நம்பர் எதுவும் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார். எக்ஸ் தளம் உலகளாவிய முகவரிகளுக்கான பயனுள்ள தொகுப்பு என தெரிவித்துள்ள மஸ்க் இவைகள் யாவும் தனித்துவமானது என்றும் தெரிவித்துள்ளார்.