விண்வெளி ஆராய்ச்சியில் புதிய மைல்கல்லை எட்டிய இஸ்ரோ; 100-வது ராக்கெட்டை செலுத்தி சாதனை!
விண்வெளி ஆராய்ச்சியில் பல சாதனைகளை படைத்துவரும் இஸ்ரோ, 100 ஆவது ராக்கெட்டை ஏவி புதிய மைல்கல்லை எட்டி இருக்கிறது.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, சந்திரயான், மங்கள்யான் உள்ளிட்ட திட்டங்களால் இந்தியாவின் பெருமையை உலகறியச் செய்திருக்கிறது. ஏற்கெனவே, ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து இதுவரை 99 ராக்கெட்டுகள் விண்ணில் ஏவப்பட்டுள்ள நிலையில், இன்று (ஜனவரி 29 ஆம் தேதி) காலை 6.23 மணி அளவில் 100 ஆவது ராக்கெட்டை விண்ணில் ஏவி உள்ளது இஸ்ரோ.
NVS 02 செயற்கைக் கோள்களுடன் ஜி.எஸ்.எல். வி எஃப்15 ராக்கெட்டை விண்ணில் செலுத்தியுள்ளது. புவி நில வரைபட வடிவமைப்பு மற்றும் நிகழ் நேர இடத்தரவுகளை பெறுவதற்காக இஸ்ரோ, NVS செயற்கைகோள்களை ஏவி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த செயற்கைக்கோளின் நோக்கம் நேவிகேஷனை துல்லியமாக கொடுப்பதுதான். இந்தியாவை விட்டு 1500 கி.மீ தொலைவில் நீங்கள் இருந்தால் கூட, எங்கு இருக்கிறீர்கள் என்பதை இந்த செயற்கைக்கோள் துல்லியமாக கண்டுபிடித்து சொல்லிவிடும்.
ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து முதல் முதலாக கடந்த 1979ம் ஆண்டு ஆக.10ம் தேதி முதல் ராக்கெட் ஏவப்பட்டது. நூறாவது ராக்கெட் 2025-ல், இன்று (ஜன 29) ஏவப்பட்டுள்ளது.
விண்ணில் ஏவப்பட்டுள்ள இந்த ராக்கெட் காலநிலை, தரை, கடல் மற்றும் வான்வெளி போக்குவரத்தை கண்காணிக்கும் என கூறப்பட்டுள்ளது.