எரிக்சன் - சென்னை ஐஐடி கூட்டணி.. AI மூலம் இயங்கும் 5G மற்றும் 6G தொழில்நுட்ப ஆராய்ச்சி தீவிரம்!
உலகின் முன்னனி தொலைத்தொடர்பு நிறுவனமான எரிக்சன், இந்தியாவில் தனது தொழில்நுட்பப் பங்களிப்பை அதிகரிக்க சென்னை ஐஐடி-யுடன் இணைந்து புதிய ஆராய்ச்சித் திட்டங்களைத் தொடங்கியுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எதிர்காலத் தொலைத்தொடர்புத் துறையை மேம்படுத்துவதே இக்கூட்டணியின் முக்கிய நோக்கமாகும்.
AI மற்றும் 6G ஆராய்ச்சியின் மூலம் 5G தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதோடு, அடுத்த தலைமுறைத் தொழில்நுட்பமான 6G-க்கான அடிப்படை ஆராய்ச்சிகளை எரிக்சன் மற்றும் சென்னை ஐஐடி இணைந்து மேற்கொள்ளும். நெட்வொர்க் டிராஃபிக்கைக் கையாளுதல், மின் நுகர்வைக் குறைத்தல் மற்றும் இணைப்பின் வேகத்தை அதிகரித்தல் போன்ற பணிகளில் AI-ஐ எவ்வாறு திறம்படப் பயன்படுத்தலாம் என்பது குறித்து ஆய்வுகள் நடத்தப்படும்.
மேலும், சென்னை ஐஐடி வளாகத்தில் எரிக்சன் இதற்கென பிரத்யேக ஆராய்ச்சி மையங்களை வலுப்படுத்தும். அதில், இந்தியாவிலிருந்து உலக நாடுகளுக்கான புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதற்கு உதவும். இக்கூட்டணி மூலம் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த தொலைத்தொடர்புத் தொழில்நுட்பங்களில் நேரடிப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி வாய்ப்புகள் கிடைக்கும். தொடர்ந்து, இந்திய அரசு 2030-க்குள் 6G தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், எரிக்சன் போன்ற நிறுவனங்களின் R&D முதலீடுகள் இந்த இலக்கை அடைய உதவும்.
'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ், இந்தியாவில் உருவாக்கப்படும் மென்பொருள் மற்றும் தொழில்நுட்ப தீர்வுகளைச் சர்வதேசச் சந்தைக்குக் கொண்டு செல்ல இது ஒரு பாலமாக அமையும். இந்நிலையில், இந்தியாவின் மனிதவளம் மற்றும் சென்னை ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களின் தரம் ஆகியவை உலகளாவிய தொலைத்தொடர்புப் புரட்சியில் இந்தியாவை ஒரு மையப்புள்ளியாக மாற்றும் என்று எரிக்சன் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

