தொடரும் பரிதாபம் | 16,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த அமேசான்.. இந்தியாவிலும் பலர் பாதிப்பு!
இணைய வர்த்தக உலகில் முன்னணி நிறுவனமாக இருக்கும் அமேசான், 16,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இதனால், இந்தியாவிலும் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது நடைபெற்று வரும் பணிநீக்கங்கள், நிறுவனம் செயல்படும் விதத்தை எளிமையாக்கும் நோக்கில் பரந்த நிறுவன மறுசீரமைப்பின் ஒரு பகுதியாகும் என அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இணைய வர்த்தக உலகில் முன்னணி நிறுவனமாக இருக்கும் அமேசான், கொரோனா பொது முடக்கத்திற்குப் பிறகு, தனது பணியாளர்களைத் தொடர்ந்து பணி நீக்கம் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போதும் புதிய அளவிலான பணிநீக்கங்களை உறுதி செய்துள்ளது. இந்தியா உட்பட உலகளவில் சுமார் 16,000 பேர்களைப் பணி நீக்கம் செய்துள்ளது. தொழில்நுட்பம், சில்லறை விற்பனை, அமேசான் வலை சேவைகள் (AWS), பிரைம் வீடியோ, ஊடகம் மற்றும் மனித வளத் துறையில் உள்ள ஊழியர்களை அது நீக்கியுள்ளது. இதில், பெரும்பாலான பணிநீக்கங்கள் அமெரிக்காவில் நடந்திருந்தாலும், இந்தியாவில் பெங்களூரு, சென்னை மற்றும் ஹைதராபாத் போன்ற நகரங்களில் உள்ள பல குழுக்களில் உள்ள நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அமேசான் நிறுவனம் தனது தலைமை மக்கள் அதிகாரி பெத் கலெட்டியின் வலைப்பதிவு இடுகையின் மூலம் ஜனவரி 28 அன்று பணிநீக்கங்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்த அறிவிப்பில், நிறுவனம் மேலும் பல ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் முடிவை உறுதிப்படுத்தியது. அமேசானின் சமீபத்திய பணிநீக்கங்கள் சுமார் 30,000 ஊழியர்களைக் கொண்டுள்ளது. இது 2023இல் அறிவிக்கப்பட்ட 27,000 பணிநீக்கங்களைவிட அதிகமானது. தற்போது நடைபெற்று வரும் பணிநீக்கங்கள், நிறுவனம் செயல்படும் விதத்தை எளிமையாக்கும் நோக்கில் பரந்த நிறுவன மறுசீரமைப்பின் ஒரு பகுதியாகும் என அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க அமேசான் முடிவு செய்திருந்தாலும், அதன் நீண்டகால வளர்ச்சிக்கு முக்கியமான பகுதிகளில், செயற்கை நுண்ணறிவு உட்பட, தேர்ந்தெடுக்கப்பட்ட பணியாளர்களை தொடர்ந்து பணியமர்த்தப் போவதாகத் தெரிவித்துள்ளது.

