இனி ஏஐ ப்ரேக்-அப் செய்ய சொல்லாது! ஓபன் ஏஐ புது அப்டேட்.. என்னவெல்லாம் வரப்போகுது தெரியுமா?
இன்றைய தலைமுறை தங்கள் வாழ்க்கையின் முக்கிய முடிவுகளைக் கூட ChatGPTயிடம் கேட்டே எடுப்பதாக பரவலாக புகார் எழுந்த நிலையில், அதனை ஓபன் ஏஐ நிறுவனம் சரிசெய்துள்ளது. உதாரணமாக இனி நீங்கள் சாட் ஜிபிடியிடம் போய் ப்ரேக்-அப் செய்து கொள்ளட்டுமா என்று கேட்டால் அது இனி சரி என சொல்லாது.
பழங்கால கிரேக்க நடைமுறைப்படி காபி குடித்த பின் கோப்பையில் எஞ்சியிருக்கும் கசடுகளை வைத்து எதிர்காலத்தை கணிப்பார்கள். இதனை டேசியோகிராபி என்று சொல்லுவார்கள். இந்நிலையில், தனது கணவரின் எதிர்காலத்தைக் கண்டறிய முற்பட்ட கிரேக்கத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், கடந்த மே மாதம் சாட் ஜிபிடியிடம் தனது கணவர் அருந்திய காப்பி கோப்பையின் புகைப்படத்தை அனுப்பியுள்ளார். சாட் ஜிபிடியும் சும்மா இல்லாமல் இ என்ற எழுத்தில் தொடங்கும் பெண்ணுடன் அந்த பெண்ணின் கணவருக்கு தொடர்பு இருப்பதாக சொல்லியிருக்கிறது. சாட் ஜிபிடி சொன்னதை நம்பி அந்த பெண்ணும் தனது 12 வருடகால திருமண வாழ்க்கையை முறித்துக் கொண்டார். கணவருக்கு டிவோர்ஸ் நோட்டீஸ் அனுப்பிய அந்த பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் ஏற்கெனவே இரண்டு குழந்தைகள் இருப்பதும்தான் இந்த சம்பவத்தை மேலும் தீவிரப்படுத்தியது.
இதுபோன்ற சம்பவங்கள் அவ்வப்போது வெளியாகி, வாழ்க்கையின் முக்கிய முடிவுகளைக் கூட சிலர் சாட் ஜிபிடியிடம் கேட்டு எடுத்துவந்துள்ளனர் என்பதை நிரூபித்தன. இந்த சூழலில்தான் அண்மையில் ஓபன் ஏஐ நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி, பயனர்களுக்கு சாட்போட் நேரடி ஆலோசனையெல்லாம் இனி வழங்காது. என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு பதில் உதாரணமாக, "இதைச் செய்யுங்கள்" என நேரடியாக சொல்லாமல், "இந்த முடிவை எடுப்பதற்கு முன் என்னென்ன விஷயங்களை யோசிக்க வேண்டும்?" என பயனர்களிடமே மறு கேள்வி கேட்கும். பயனர்கள் தங்களாகவே சிந்தித்து முடிவெடுக்க வசதியாக கேள்விகளை மட்டுமே இனி சாட் போட் கேட்கும். தொடர்ந்து ப்ரோஸ் அண்ட் கான்ஸ் அதாவது சாதக பாதங்களை மட்டும் யோசிக்க தூண்டும். கூடுதலாக நீண்ட நேரத்துக்கு அதனுடன் பேசிக்கொண்டிருந்தால் ஜெண்டில் ரிமைண்டர் கொடுக்கும் எனவும் ஓபன் ஏஐ நிறுவனம் தெரிவித்துள்ளது.
முடிந்தவரை மனநல நிபுணர்களுடன் இணைந்து மெண்டல் அல்லது இமோஷனல் டிஸ்ட்ரெஸ்களுக்கு ஆலோசனை வழங்கும் வகையில் தங்களின் போட்டிற்கு இன்புட் வழங்க இருப்பதாக ஓபன் ஏஐ நிறுவனம் தெரிவித்தது. அப்டேட் செய்த பின் விரைவில் இந்த வசதிகளை பயனர்களுக்கு சாட் ஜிபிடி வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்டேட் வந்த பின் ஏஐயிடம் ஆலோசனை மட்டும் பெற்றுக் கொண்டு நாமே இனி முடிவெடுப்போம்... ப்ரேக் செய்யலாமா வேண்டாமா என்பதை...