உலகமே எதிர்பார்த்த சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் இன்று (ஆகஸ்ட் 23) தரையிறங்கியது. இதன்மூலம் சந்திரனின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் விண்கலம் என்ற பெருமையை சந்திரயான் 3 பெற்றுள்ளது. அதனை சாதித்துக் காட்டிய முதல் நாடு என்ற பெருமையும் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.
விண்வெளி சாதனைகளுக்கு வித்திட்டவர் விக்ரம் சாராபாய் இந்திய விஞ்ஞானி விக்ரம் சாராபாய் நினைவாக சந்திரயான்-3 திட்டத்திற்கான லேண்டருக்கு விக்ரம் என்று பெயர் சூட்டப்பட்டது.
கடந்த ஜூலை 14ஆம் தேதி சந்திரயான் 3 விண்கலம், ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவாண் விண்வெளி மையத்தில் இருந்து, பிற்பகல் 2.35 மணிக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டது.
சந்திரயான் 3 விண்கலம், ஏவப்பட்ட 16வது நிமிடத்தில், ராக்கெட்டில் இருந்து வெற்றிகரமாக தனியாகப் பிரிந்தது.
கடந்த ஜூலை 15ஆம் தேதி, குறைந்தபட்சம் 173 கி.மீ. மற்றும் அதிகபட்சம் 41,762 கி.மீ. தொலைவு கொண்ட புவிவட்டப் பாதைக்கு விண்கலம் கொண்டு செல்லப்பட்டது.
அதைத் தொடர்ந்து ஜூலை 17ஆம் தேதி விண்கலம் பயணிக்கும் புவிவட்டப் பாதையின் தொலைவு 41,603 கி.மீட்டராக அதிகரிக்கப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி, புவி ஈா்ப்பு விசையிலிருந்து விலக்கப்பட்டு சந்திரயான் 3, நிலவை நோக்கிய புதிய பயணத்தைத் தொடங்கியது.
அடுத்து ஆகஸ்ட் 5ஆம் தேதி, நிலவின் ஈா்ப்பு விசைக்குள் நுழைந்த விண்கலம், குறைந்தபட்சம் 164 கி.மீ. மற்றும் அதிகபட்சம் 18,074 கி.மீ. தொலைவு கொண்ட சுற்றுவட்டப் பாதைக்குள் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல், 14ஆம் தேதி வரை சந்திரயான் 3 விண்கலத்தின் சுற்றி வரும் நிலவு வட்ட பாதையின் தொலைவு படிப்படியாகக் குறைக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி சந்திரயான்3 உந்துகலனில் இருந்து லேண்டா் வெற்றிகரமாக விடுவிக்கப்பட்டது.
பின்னர் ஆகஸ்ட் 20ஆம் தேதி, சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து சென்ற விக்ரம் லேண்டர் 25 கிமீ x 134 கிமீ என்ற நீள்வட்டப் பாதையில் நிலாவை தற்போது சுற்றிக் கொண்டிருக்கிறது என இஸ்ரோ அறிவித்தது.
அதே நாளில், மென்மையான தரையிறக்கத்தை உறுதிசெய்வதற்காக தரையிறங்கும் நேரத்தில் சிறிது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக ஆகஸ்ட் 23ஆம் தேதி மாலை 5.45 மணிக்கு தரையிறங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதேநாளில், மாலை 6.04 மணிக்கு லேண்டர் நிலவில் இறங்கும் என இஸ்ரோ தெரிவித்திருந்தது.
ஆகஸ்ட் 21ஆம் தேதி சந்திரயான்-2 மூலம் அனுப்பப்பட்ட ஆா்பிட்டா் மற்றும் சந்திரயான்-3 ‘விக்ரம்’ லேண்டா் இடையே தகவல் தொடா்பு வெற்றிகரமாக ஒருங்கிணைக்கப்பட்டது.
தொடர்ந்து அதே நாளில், சந்திரயான் -3 விக்ரம் லேண்டரால் (LPCD என்ற தொழில்நுட்பம்)எடுக்கப்பட்ட நிலவின் சமீபத்திய படங்கள் இஸ்ரோவால் வெளியிடப்பட்டன. கூடுதலாக Lander Imager Camera என்ற கேமரா எடுத்துள்ள நிலாவின் மேற்பரப்பின் புகைப்படங்களையும் இஸ்ரோ வெளியிட்டிருந்தது.
ஆகஸ்ட் 23ஆம் தேதியான இன்று, லேண்டரைத் தரையிறக்கும் பணி, சரியாக 5.44 மணி முதல் தொடங்கும் என இஸ்ரோ அறிவித்திருந்தது. அதன்படி, 15 நிமிடங்களுக்கு முன்பாக தரையிறக்கும் பணிகள் தொடங்கியது.
திட்டமிட்டபடி வெற்றிகரமாக மாலை 6.04 மணிக்கு சந்திரயான் 3-ல் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கியது. இதை உலகமே இன்று கொண்டாடி வருகிறது.