திருநங்கை அப்சரா ரெட்டி குறித்து அவதூறு - YouTuber ஜோ மைக்கேல் பிரவீனுக்கு ரூ. 50 லட்சம் அபராதம்!

திருநங்கை அப்சரா ரெட்டி குறித்து அவதூறு பரப்பியதற்காக, யூடியூபர் ஜோ மைக்கேல் பிரவீன் 50 லட்ச ரூபாயை இழப்பீடாக செலுத்த வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
திருநங்கை அப்சரா ரெட்டி - YouTuber ஜோ மைக்கேல் பிரவீன்
திருநங்கை அப்சரா ரெட்டி - YouTuber ஜோ மைக்கேல் பிரவீன்புதிய தலைமுறை

செய்தியாளர் முகேஷ்

அதிமுக செய்தி தொடர்பாளரான திருநங்கை அப்சரா ரெட்டி குறித்து அவதூறு பரப்பியதற்காக, 50 லட்ச ரூபாயை இழப்பீடாக செலுத்த வேண்டுமென யூடியூபர் ஜோ மைக்கேல் பிரவீனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இதுபோன்ற (அவதூறு) தகவலை பதிவேற்றம் செய்வதற்கு முன்பாக ஆய்வு செய்ய வேண்டிய நடவடிக்கையை எடுக்கும்படி கூகுள் நிறுவனத்திற்கும் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக தன்னை பற்றி 10க்கும் மேற்பட்ட அவதூறான கருத்துக்களுடன் கூடிய வீடியோக்களை பதிவேற்றம் செய்து தன் நற்பெயருக்கு ஜோ மைக்கேல் பிரவீன் களங்கம் ஏற்படுத்திவிட்டார் என்றும், அதற்காக ஒரு கோடியே 25 லட்ச ரூபாயை இழப்பீடாக வழங்க அவருக்கு உத்தரவிடவேண்டும் என்றும் கூறி வழக்குத் தொடர்ந்திருந்தார் அப்சரா ரெட்டி.

மேலும் இது குறித்து மனுவில் அப்சரா ரெட்டி, “எனது எதிர்ப்பையடுத்து அவற்றை (வீடியோக்களை) கூகுள் நிறுவனம் இதுதொடர்பானவற்றை நீக்கிவிட்டது. ப்ரோவோக் இதழில் ஆசிரியராக நான் இருந்தபோது, ஜோ மைக்கேல் பிரவீனுடன் இணைந்து நிகழ்ச்சிகளை நடத்த மறுத்திருந்தேன். அதை மனதில் வைத்துக்கொண்டு, எனக்கு எதிராக என்னை குறிவைத்து தொடர்ந்து ஜோ மைக்கேல் பிரவீன் செயல்பட்டு வருகிறார்” என்று தெரிவித்துள்ளார். மேலும் இவ்விஷயத்தில் பிரவீனிடமே வீடியோக்களை நீக்கும்படி தான் கோரிக்கை வைத்ததாகவும் அதை அவர் நிராகரித்ததுடன், அதன்பின்னரும் தன்னைப்பற்றி அவதூறாகப் பரப்புவதாக குற்றம்சாட்டி உள்ளார்.

இந்த வழக்கில் நீதிபதி என்.சதீஷ் குமார் பிறப்பித்துள்ள உத்தரவில் கூகுள் நிறுவனத்திற்கு, ’ஒரு தனிப்பட்ட நபரின் குணாதிசயம், செயல்பாடு, வாழ்க்கை முறை ஆகியவற்றில் தலையிட்டு, சமூக ஊடகங்களில் கருத்துக்கள் பகிரப்படும்போது, அது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

திருநங்கை அப்சரா ரெட்டி - YouTuber ஜோ மைக்கேல் பிரவீன்
பொங்கல் பண்டிகை: சிறப்புப் பேருந்துகள் புறப்படும் இடங்களுக்கான பயண வழிகாட்டி!
நீதிபதி என்.சதீஷ் குமார்
நீதிபதி என்.சதீஷ் குமார்சென்னை உயர்நீதிமன்றம்

உயர்மட்ட தலைவர்களுடனான அரசியல் தொடர்பு, சமூக சாதனைகளைத் தாண்டி, திருநங்கைகள் மற்றும் பாலின சமத்துவத்திற்கான அப்சரா ரெட்டியின் பணிகளை நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது. யூடியூப்பில் பதிவிட ஒவ்வொருவருக்கும் உரிமை இருந்தாலும், அது வரம்பை மீறக்கூடாது. மற்றவர்களின் தனியுரிமையில் யாரும் தலையிட முடியாது. அந்த உரிமைகள் அனைத்துமே நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது. எதிர்காலத்திலாவது இதுபோன்ற உள்ளடக்கங்களை கொண்ட வீடியோக்களை ஆய்வு செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்” என அறிவுறுத்தி உள்ளார்.

தொடர்ந்து அப்சரா ரெட்டி தொடர்ந்த வழக்கில் பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பியும் ஜோ மைக்கேல் பிரவீன் தரப்பில் யாரும் ஆஜராகாததால், "Ex-Parte order" என்று சொல்லக்கூடிய "சம்பந்தப்பட்ட தரப்பு ஆஜராகி விளக்கம் அளிக்காத நிலையில் பிறப்பிக்கப்படும் உத்தரவாக", ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்கும்படி யூடியூபர் ஜோ மைக்கேல் பிரவீனுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அப்சரா ரெட்டி
அப்சரா ரெட்டி

அப்சரா ரெட்டிக்கு எதிரான பதிவுகளை நீக்க கூகுள் நிறுவனத்திற்கு உத்தரவிடும்படி அப்சரா ரெட்டி வழக்கு தொடர்ந்திருந்தாலும், அப்சரா ரெட்டி தெரிவித்த ஆட்சேபத்தை அடுத்து குறிப்பிட்ட வீடியோக்களை கூகுள் நிறுவனம் நீக்கிவிட்டது. இந்நிலையில் திருநங்கைகளை குறிவைத்து சமூக வலைதளங்களில் நடக்கும் தாக்குதல்களுக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பிக்கும் முதல் உத்தரவாக, மிகக்கடுமையான உத்தரவாக இதுபார்க்கப்படுகிறது. இனியாவது யூ-ட்யூபர்கள் விழிப்புடனும் சமூக பொறுப்புடனும் செயல்பட வேண்டும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com