கன்னியாகுமரி: மழை வெள்ளத்தில் கூண்டுக்குள் சிக்கிய பறவைகளை உயிருடன் மீட்ட இளைஞர்கள்
மழை வெள்ளத்தில் கூண்டுக்குள் சிக்கிய பறவைகளை உயிருடன் மீட்ட இளைஞர்களுக்கு சமூக ஊடகங்களிலும் மக்களிடமும் பாராட்டை பெற்றுவருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மூன்று நாட்களாக கனமழை பெய்து வருவதால், அணைகள் நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி விட்டன. உபரிநீர் சாலைகளில் ஓடுவதால் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகம் அவர்களுக்கான அடிப்படை தேவைகளை ஏற்பாடு செய்து வருகிறது. இந்நிலையில் வைகை அணையில் இருந்து நீர் வரத்து பெறும் பொன்னங்குளத்தில் உடைப்பு ஏற்பட்டது. செண்பகராமன்புதூர் பகுதியிலிருந்து லாய விளக்கு செல்லும் சாலையில் மக்கள் குடியிருப்பு பகுதியில் திடீர் வெள்ளம் சூழ்ந்தது. குளத்தில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக வெள்ள நீரின் வேகம் அதிகரித்தது இதனால் வீடுகளில் இருந்து மக்கள் பாதுகாப்பான முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்த நிலையில் ஒரு வீட்டின் உள் வளாகத்தில் லவ் பேர்ட்ஸ் எனப்படும் பறவைகளை கூண்டுக்குள் வைத்து வளர்த்து வந்துள்ளனர்.
மழை வெள்ளம் காரணமாக வீட்டில் இருந்த மக்கள் பாதுகாப்பாக முகாமுக்கு சென்று நிலையில் பறவைகள் கூண்டுக்குள் சிக்கி வெள்ளத்தில் மாட்டிக்கொண்டது. கூண்டு பாதி உயரம் வரை தண்ணீருக்குள் மூழ்கிய நிலையில் அங்கு மீட்பு பணியில் இருந்த இளைஞர்களிடம் இது குறித்து நாம் தெரிவித்தோம். உடனடியாக அடித்துச் செல்லும் வெள்ள நீரில் ரிஸ்க் எடுத்த இளைஞர்கள் ஒருவருக்கொருவர் கைகோர்த்து பறவை கூண்டு இருக்கும் வீட்டு வளாகத்திற்குள் நுழைந்தனர்.
கூண்டின் மேற்பகுதியை மெல்ல உடைத்து லாவகமாக பறவைகளை மிகவும் பாதுகாப்பாக ஒன்றன்பின் ஒன்றாக மீட்டனர். குளிரிலும் மழையிலும் நனைந்து இருந்த பறவைகள் மிகவும் பயந்து காணப்பட்டன. ஒரு சில பறவைகளை பறக்க விட்டனர். மற்ற பறவைகளை பத்திரமாக பாதுகாப்பாக கொண்டு சென்றனர்.