சிசு பிறந்த பின் ரத்தப்போக்கால் தாய் மரணம்.. பயிற்சி மருத்துவர்கள் காரணமா? கரூரில் அதிர்ச்சி!
பிரசவத்திற்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி, அறுவை சிகிச்சை முடிந்த பிறகு உயிரிழந்த சோகம்.. குழந்தை பிறந்த ஓரிரு நாட்களுக்கு ரத்தப்போக்கு நீடித்து தாய் மரணித்த நிலையில், பயிற்சி மருத்துவர் அறுவை சிகிச்சை மேற்கொண்டதாலே தாய் மரணம் என்று குற்றம் சாட்டும் உறவினர்கள்..
கரூர் மாவட்டம் கடவூர் முத்தக்கவுண்டன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்தான் சுரேஷ்.. கோவையில் வெல்டராக வேலை பார்த்து வரும் இவர், யோகப் ப்ரியா என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்துள்ளார். இதில் கருவுற்று இருந்த யோகப் பிரியா, கடந்த 2ம் தேதி பிரசவத்திற்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து, கடந்த 5ம் தேதி அவருக்கு அறுவை சிகிச்சை முறையில் ஆண் குழந்தை பிறந்த நிலையில், சில மணி நேரத்திற்குப் பிறகும் ரத்தம் அதிக அளவில் வெளியேறியுள்ளது. இதனால், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டும், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
தகவலறிந்து அங்கு வந்த உறவினர்கள், பயிற்சி மருத்துவர்கள் மூலம் அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டதாலே கர்ப்பிணி யோகப்பிரியா மரணித்ததாகவும், இந்த விவகாரத்தில் வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று பசுபதிபாளையம் காவல் நிலையப் போலீஸார் உறுதியளித்ததன் பேரில், உறவினர்கள் கலைந்து சென்றனர்.