ஆவின் பாலில் நீந்திய வெள்ளை புழுக்கள்? டீ கடைக்காரரின் புகாரும், ஆவின் நிர்வாகத்தின் எச்சரிக்கையும்!

உதகையில் டீ கடை உரிமையாளர் வாங்கிய ஆவின் பாலில் புழுக்கள் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலையில் தேநீர்க் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது, இந்த கடையின் உரிமையாளர் இன்று, உழவர் சந்தை அருகே உள்ள ஒரு கடையிலிருந்து ஆவின் பால் பாக்கெட்டை வாங்கி வந்துள்ளார். கடைக்கு வந்து பாலை சூடு செய்வதற்காகப் பாத்திரத்தில் பாக்கெட்டை பிரித்துக் கொட்டியுள்ளார். அப்பொழுது பால் முழுவதும் வெள்ளை புழுக்கள் நீந்தியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து, உடனடியாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்குத் தகவல் அளித்தார். தகவலின் பேரில் அங்கு விரைந்து வந்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பால் பாக்கெட் மற்றும் பாலில் உள்ள புழுக்கள் பற்றி ஆய்வு செய்தனர். தொடர்ந்து அந்த பாக்கெட்டை சோதனை செய்ததில், பால் பாக்கெட் இன்றைய தேதியில் கடைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது.

ஆவின் பொது மேலாளர் ஜெயராமன்
ஆவின் பொது மேலாளர் ஜெயராமன்

இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்த ஆவின் பொது மேலாளர் ஜெயராமன், "இன்று உதகை முழுவதும் 18,000 பால் பாக்கெட் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஆவின் பாலகத்தின் நற்பெயரைக் கெடுக்கும் விதமாக இன்று தேனீர் கடை பணியாளர் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்குப் புழுக்கள் இருப்பதாகப் புகார் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் வாங்கிய மூன்று ஆவின் பால் பாக்கெட்டுகளில் மட்டும் புழுக்கள் எவ்வாறு வரும். மீதமுள்ள ஆவின் பால் பாக்கெட்களில் எவ்வித குற்றச்சாட்டும் இதுவரை வரவில்லை.

இந்த தேநீர்க் கடை கடந்த மூன்று நாட்களாகத் திறக்கப்படாமல் இருந்தது. இன்று பால் பாத்திரம் கழுவாமல் ஆவின் பாக்கெட்டை உடைத்து பாலை ஊற்றியதால் புழுக்கள் மிதந்ததற்குக் காரணம். ஆவின் பாலகத்தின் நற்பெயரைக் கெடுக்கும் விதமாகச் செயல்பட்ட தேநீர்க் கடை உரிமையாளர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளோம்" என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com