யுனெஸ்கோவின் 14 ஆவது பொதுக்குழு ஆண்டுதோறும் செப்டம்பர் 8 ஆம் தேதியை சர்வதேச எழுத்தறிவு தினமாக கொண்டாட வேண்டும் என பிரகடனம் செய்தது. அதன்படி 1966 ஆம் ஆண்டு முதல் எழுத்தறிவு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒருவர் எழுத்தறிவு பெற்றவர் என்பதற்கான வரையறை காலப்போக்கில் மாற்றம் கண்டு வந்துள்ளது எனலாம்.
ஆனால் அடிப்படையில், எழுத்தறிவு என்பது குறிப்பிட்ட ஒரு மொழியைப் படிக்கவும், எழுதவும், கேட்டு புரிந்து கொண்டு அதற்கேற்ற தொடர்பு கொள்ளும் சக்தியையும் பெற்றிருப்பதே எழுத்தறிவு எனப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருப்பொருளை மையமாகக் கொண்டு இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
அரசும், சில தன்னார்வ அமைப்புகளும் பொதுமக்களுக்கு எழுத்தறிவை ஏற்படுத்திட வேண்டும் என பல்வேறு புதிய புதிய முயற்சிகளை மேற்கொண்டு செயல்படுத்தியும் வருகின்றனர். 1976 ஆம் ஆண்டு முதலே தமிழ்நாடு அரசு, பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் மூலம் எழுத்தறிவுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
கடந்த ஆண்டு கூட இந்த இயக்ககத்தின் கீழ் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் 2022 - 2027 தொடங்கப்பட்டுள்ளது. ஐந்தாண்டு திட்டமான இது மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதி பங்களிப்புடன் பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இதில் 15 வயதிற்கு மேற்பட்ட, முற்றிலும் எழுத படிக்க தெரியாதவர்களுக்கு, அடிப்படை எழுத்தறிவு, எண்ணறிவு மற்றும் வாழ்வியல் திறன் சார்ந்த கல்வியை வழங்கும் வகையில் கற்பிக்கப்படுகிறது.
அதேபோல் அறிவொளி இயக்கத்தின் பங்கு, மிக முக்கியமானதாகும். சாலை வசதிகள் அல்லாத, மின் விளக்குகள் வசதிகள் அல்லாத கிராமங்களுக்கு கூட அறிவொளி இயக்கத்தினர் சென்று அங்கிருக்கும் மக்களுக்கும் குழந்தைகளுக்கும் கல்வியின் முக்கியத்துவத்தை சொல்லி அவர்களுக்கு கல்வியின் மேல் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
அறிவொளி இயக்கம் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாக, இந்தியாவின் எழுத்தறிவு விகிதம் பெருமளவு அதிகரித்தது. 1991 ஆம் ஆண்டு 52.1% ஆக இருந்த எழுத்தறிவு விகிதம், 65.4% ஆக அதிகரித்தது. அதிலும், கிராமப்புற எழுத்தறிவு விகிதம் 14.7% அதிகரித்தது.
2019 மற்றும் 2021க்கு இடையில் இந்தியாவில் பெண்கள் மற்றும் ஆண்களின் எழுத்தறிவு விகிதம்: ஆண்கள்: 89.6%, பெண்கள்: 83%.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி எழுத்தறிவு விகிதத்தில் 94 சதவிகித புள்ளிகளைப் பெற்று கேரள மாநிலம் முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து டெல்லி (86.2), சண்டிகர்(86) முதல் மூன்று இடங்களில் உள்ளன. இந்த பட்டியலில் தமிழ்நாடு 80.1% புள்ளிகளைப் பெற்று ஆறாவது இடத்தில் உள்ளது.
இளைஞர்களையும் குழந்தைகளையும் அதிகளவு கொண்டுள்ள இந்தியா, இன்னும் எழுத்தறிவில் முழுமை பெறவில்லை என்பது சோகமான ஒன்றாகும். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளைக் கடந்த நிலையில் 100% எழுத்தறிவு பெற்ற நாடாக இந்தியா வேகமாக உயர வேண்டும். அதற்கான முயற்சியில் ஈடுபடுவோம்.