தசரா | குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருவிழா: வரலாற்று சிறப்புகள் என்ன?
உலகப்புகழ் பெற்ற குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா வரும் 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தசரா திருவிழா குறித்து வரலாறு சொல்வது என்ன? விரிவாக பார்க்கலாம்...
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் அமைந்துள்ளது முத்தாரம்மன் கோயில். மைசூரில் நடைபெறும் தசரா திருவிழாவுக்கு அடுத்தபடியாக, குலசேகரன்பட்டினத்தில் நடைபெறும் தசரா திருவிழா மிகவும் பிரபலம். ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவில், லட்சக்கணக்கான பக்தர்கள் பல்வேறு வேடங்கள் அணிந்து, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.
கி.பி.1251ஆம் ஆண்டு, குலசேகரன்பட்டினத்தை ஆட்சி செய்த குலசேகர பாண்டியன் என்ற மன்னன் கேரள மன்னனை எதிர்த்து போரிட சென்றார். அப்போது அவரது கனவில் முத்தாரம்மன் தோன்றி அருளாசி வழங்கியதாகவும், போரில் வாகை சூடிய குலசேகர பாண்டியன் அம்மனின் உத்தரவுப்படி ஊரை சீர்படுத்தினார் என்கிறது வரலாறு. அம்மை நோயினை முத்து போட்டதாக கூறுவது மரபு. அப்படி அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களை, முத்தாரம்மன் பீடத்தை சுற்றி நீர் கட்ட செய்யும் போது, அம்மை குணமாகும் என்பது ஐதீகம். ஆரம்ப காலத்தில் சுயம்பு வடிவில் அம்மனை பக்தர்கள் வழிபட்டு வந்த நிலையில், அதன்பிறகு முத்தாரம்மன் அருகே ஒரே பீடத்தில் சுவாமி ஞானமூர்த்தீஸ்வரர் வீற்றிருப்பது இத்தலத்தின் பெருமையாகும்.
தவவலிமை மிக்க வரமுனி என்பவர், மகிஷாசுரனாக மாறிய நிலையில், அவரை அம்மன் வதம் செய்ததாக கூறுகிறது வரலாறு. அந்த நாள்தான் தசரா விழாவாக கொண்டாடப்படுகிறது. அதர்மத்தினை அழித்து தர்மத்தை நிலைநாட்டும் அற்புத திருவிழாதான் குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா. குலசேகரன்பட்டினத்தில் தசரா திருவிழா மொத்தம் 12 நாட்கள் நடைபெறும். 10ஆவது நாள் விஜயதசமி தினத்தன்று மகிஷாசுரனை முத்தாரம்மன் வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும். காளி, சிவன், பார்வதி, பிரம்மா, விஷ்ணு, விநாயகர் என பல்வேறு வேடங்கள் அணிந்து, ஊர் ஊராக சென்று அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். ஒவ்வொரு வேடமும் ஒவ்வொரு பலனை தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
காளி வேடம் போடுவோர் 41 நாட்கள் விரதம் இருப்பார்கள். பிற வேடங்களை தரிப்பவர்கள் தங்கள் வசதிக்கேற்ப 5 நாட்கள் முதல் 13 நாட்கள் வரை விரதம் இருக்கலாம். இந்தாண்டுக்கான தசரா திருவிழா வரும் 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. சிகர நிகழ்ச்சியாக அக்டோபர் 2ஆம் தேதி நள்ளிரவு, மகிஷாசுரனை அம்மன் வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.