உலக தாய்ப்பால் வாரம்: திருப்பூர் அரசு மருத்துவனையில் துவங்கப்பட்ட தாய்ப்பால் வங்கி
உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு, திருப்பூர் அரசு மருத்துவமனையில் நோய் குறைபாடுடைய பச்சிளங் குழந்தைகளை காக்கும் வகையில் தாய்ப்பால் வங்கி துவங்கப்பட்டுள்ளது.
உலக தாய்ப்பால் வாரவிழா, ஆகஸ்ட் முதல் வாரம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக திருப்பூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில், தாய்ப்பால் வங்கி துவக்கவிழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் மருத்துவக்கல்லூரி முதல்வர் முருகேசன் கலந்து கொண்டு தாய்ப்பால் வங்கியை துவக்கி வைத்தார். இதைத்தொடர்ந்து செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகளின் தாய்ப்பால் விழிப்புணர்வு குறித்த கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
தாய்ப்பால் வங்கி குறித்து அரசு மருத்துவர்கள் கூறுகையில்... தாய்ப்பால் வங்கி பத்து லட்சம் மதிப்பிலான புதிய உபகரணங்களுடன் துவக்கப்பட்டுள்ளது. தானமாக வரும் தாய்ப்பாலை சுத்திகரிப்பு செய்த பின்னரே எடை மற்றும் நோய் குறைபாடுடைய குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. மேலும் தாய்ப்பாலை தானமாக தர விரும்பும் தாய்மார்கள் அரசு மருத்துவமனையை தொடர்பு கொண்டு உபரி தாய்ப்பாலை தானமாக தரலாம் என்றும் தெரிவித்தனர்.
அவிநாசி கிழக்கு ரோட்டரி சங்கம் மற்றும் அச்சிந்தியா தாய்ப்பால் சேகரிப்பு மையம் அமைப்புகள் இணைந்து, மாவட்டத்தின் பிற பகுதிகளில் தாய்மார்கள் தானமாக தரும் தாய்ப்பாலை சேகரித்து மருத்துவமனையில் வழங்கும் சேவையை செய்து வருகின்றனர் எனவும் தெரிவித்தனர்.