தாமதமாக வந்த 5-க்கும் மேற்பட்ட பெண் தேர்வர்கள்.. அனுமதி மறுப்பால் தேர்வு மையத்தில் பரபரப்பு!!
தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் இன்று குரூப்-1 முதல்நிலைத் தேர்வு நடைபெற்று வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் 9 தேர்வு மையங்களில் மொத்தம் 2,250 தேர்வர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர்.
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள (ஸ்ரீ சாரதா) தனியார் மகளிர் கல்லூரி தேர்வு மையத்தில் 550 பேர் தேர்வு எழுதுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், 431 பேர் மட்டுமே தேர்வு எழுத வந்தனர். 119 பேர் தேர்வுக்கு வரவில்லை. இந்நிலையில், சாரதா மகளிர் கல்லூரிக்கு தனி பேருந்து நிறுத்தம் மற்றும் நேரடி பேருந்து வசதி இல்லாததால், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பல தேர்வர்கள் ஷேர் ஆட்டோக்கள் மூலம் தேர்வு மையத்திற்கு வந்துள்ளனர்.
தேர்வர்கள் காலை 9 மணிக்குள் தேர்வு அறைக்குள் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், போக்குவரத்து வசதி இல்லாததால் வெளி மாவட்டங்கள் மற்றும் மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளில் இருந்து வந்த 5-க்கும் மேற்பட்ட பெண் தேர்வர்கள் காலதாமதமாக தேர்வு மையத்தை வந்தடைந்ததாக கூறப்படுகிறது.
காலதாமதமாக வந்ததால் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்க காவலர்கள் மறுத்த நிலையில், தங்களை தேர்வு எழுத அனுமதிக்கக் கோரி தேர்வர்கள் காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே, தேர்வு மையத்தில் ஆய்வு மேற்கொண்ட பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரிடம் இதுகுறித்து கேட்டபோது, காலதாமதமாக வரும் தேர்வர்களை தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கக் கூடாது என தேர்வாணையம் திட்டவட்டமாக அறிவுறுத்தியுள்ளதாகவும், தேர்வர்கள் உரிய நேரத்திற்குள் தேர்வு மையங்களுக்கு வந்து சேர வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பிலும் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள கல்வி நிறுவனங்களுக்கு பேருந்து நிறுத்தம் அமைப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

