பெரம்பூரா?... திருச்சி கிழக்கா?... விஜய் ராஜினாமா செய்யும் தொகுதி எது ?
தமிழ்நாடு அரசியல் வரலாறு கடந்த 50 ஆண்டுகளாக திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளை மையமாக வைத்தே சுழன்று வந்தது. ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடிகர் விஜய்யால் உருவாக்கப்பட்ட தமிழக வெற்றிக்கழகம் இந்த இரு கட்சிகளுக்கும் கடும் போட்டியாக அமைந்தது.
தவெக தலைவர் விஜயின் நிகழ்ச்சிகளுக்கு வந்த கூட்டம் இந்தியாவையே அதிரவைத்த நிலையில், அக்கட்சி அதிக அளவிலான வாக்குகளை பெரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அக்கட்சி சார்பில் 233 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், தவெக தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார்.
தேர்தலுக்கு பின்னர் வெளியான பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் கூட திமுக மீண்டும் ஆட்சியமைக்கும் என்றும், தவெக 30 இடங்கள் வரை வெற்றிபெறும் என்றே கூறப்பட்டது. ஆனால் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், 108 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது.
இதில் தவெக தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் அபார வெற்றி பெற்றுள்ளார். இந்த சூழலில் அவர் 14 நாட்களுக்குள் ஒரு தொகுதி MLA பதவியை ராஜினாமா செய்யவேண்டிய நிலையில், அது எந்த தொகுதி என்ற கேள்வி எழுந்துள்ளது.
விஜய் திருச்சி கிழக்கை விட பெரம்பூர் தொகுதியிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அதே நேரம் திருச்சி கிழக்கு தமிழ்நாட்டின் மத்திய பகுதியில் உள்ளதால் அதுவும் முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த சூழலில் விஜய் எந்த தொகுதியை தேர்ந்தெடுப்பார் என்பது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் பெரம்பூர் தொகுதியில் அதிக வாக்குகள் பெற்றுள்ள நிலையில், அது திருச்சி கிழக்கை விட தவெகவுக்கு பாதுகாப்பான தொகுதியாக உள்ளது. இதனால் விஜய் பெரம்பூர் தொகுதியையே ராஜினாமா செய்து அந்த தொகுதியில் தனது கட்சியை சேர்ந்த முக்கிய நபரை வேட்பாளராக அறிவிப்பார் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

