தமிழ்நாட்டில் தொங்கு சட்டப்பேரவை : TVK ஆட்சியமைக்க வாய்ப்புகள் என்ன ? குடியரசுத் தலைவர் ஆட்சியா ?
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற்ற நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று காலை முதல் எண்ணப்பட்டன. இதில் காலை தபால் வாக்குகள் எண்ணப்பட்டபோது, திமுக முன்னிலையில் இருந்தது.
அதன் பின்னர் வாக்குப்பெட்டியில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், தவெக படிப்படியாக முன்னிலை பெறத்தொடங்கியது. ஒரு கட்டத்தில் தவெக 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்றது. தொடர்ந்து தவெக பெரும்பான்மையை நோக்கி முன்னேறிய நிலையில், 118 என்ற மேஜிக் எண்ணை தவெகவால் நெருங்க முடியாமல் 108 இடங்களில் மட்டுமே வெற்றியை பெற்றுள்ளது.
திமுக கூட்டணி 73 இடங்களையும், அதிமுக கூட்டணி 53 இடங்களையும் மட்டுமே வென்றுள்ளன. எந்த கட்சியாலும் பெரும்பான்மை பெற முடியாத நிலையில், தமிழ்நாடு வரலாற்றில் முதல்முறையாக தொங்கு சட்டப்பேரவை அமைந்துள்ளது.
தனிப்பெரும் கட்சியாக தமிழக வெற்றிக் கழகம் உருவாகியுள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய் இரண்டு இடங்களில் வெற்றிபெற்றுள்ளார். இதனால் அவர் ஒரு இடத்தில் ராஜினாமா செய்யவேண்டியது கட்டாயமாகியுள்ள நிலையில், தவெகவின் பலம் 107 என குறைந்துள்ளது. இதனால் அக்கட்சி ஆட்சியை கைப்பற்ற இன்னும் 11 இடங்கள் தேவைபடுகிறது. இந்த சூழலில் திமுக, அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் ஆதரவு அளித்தால் மட்டுமே ஆட்சியை பிடிக்கமுடியும் என்ற இக்கட்டான நிலை தவெகவுக்கு ஏற்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் திமுக 59 இடங்களிலும், காங்கிரஸ் 5 இடங்களிலும், சிபிஐ, சிபிஐஎம், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், விசிக ஆகிய கட்சிகள் 2 இடங்களிலும், தேமுதிக ஒரு இடத்திலும் வெற்றிபெற்றுள்ளது.
அதே போல அதிமுக கூட்டணியில் அதிமுக 46 தொகுதிகளிலும், பாமக 4 இடங்களிலும், பாஜக, அமமுக ஆகிய கட்சிகள் தலா 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. இந்த சூழலில் திமுக அல்லது அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் வெற்றிபெற்றால் மட்டுமே ஆட்சியமைக்கும் என்ற நிலை தவெகவுக்கு ஏற்பட்டுள்ளது.
தவெகவை தவிர்த்து திமுக, அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒன்றிணைந்தாலும் ஆட்சியமைக்க முடியும் என்றாலும் அதற்கு கிட்டத்தட்ட வாய்ப்பு இல்லாத சூழலே நிலவுகிறது. தவெக ஏற்கனவே கூட்டணியில் வரும் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு கொடுப்பதாக கூறியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி ஏற்பட பிரகாசமான வாய்ப்பு உருவாகியுள்ளது.
ஒருவேளை தவெகவால் ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்பட்டு, பிற கட்சிகளும் ஆட்சியமைக்க முடியாவிட்டால் தமிழ்நாட்டில் மறுதேர்தல் நடத்த உத்தரவிட்டு, அதுவரை குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெறவும் வாய்ப்புள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

