வங்கக்கடலில் உருவாகும் அடுத்த புயல்? தமிழ்நாட்டுக்கு பாதிப்பு உண்டா ? வானிலை மையம் வெளியிட்ட UPDATE!
வங்கக்கடலில் ஆண்டுதொடரும் செப்டம்பர் முதல் நவம்பர் மாதங்களில் அடிக்கடி புயல்கள் உருவாகும். அந்த வகையில் இந்த ஆண்டு வங்கக்கடலில் அர்னாப் புயல் உருவாகி அது அதிதீவிர புயலாக மாறி ஆந்திராவை தாக்கியது. இதில் 26 பேர் உயிரிழந்த நிலையில், ஆந்திரா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் பெரும் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து வங்கக்கடலில் முரசு புயல் உருவாகி, அது தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழ்நாடு ஆகிய பகுதிகளை ஒட்டி கரையை கடந்தது. அர்னாப் புயலை போல இது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும் ஆந்திராவின் பல இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.
இந்த நிலையில், தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல சுழற்சி இன்று காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும், இது தொடர்ந்து வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், தொடர்ந்து புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
அப்படி இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, புயலாக உருப்பெற்றால் அதற்கு ஈரான் பரிந்துரைத்த 'அக்வான்' என பெயரிடப்படும். பொதுவாக தெற்கு அந்தமான் கடலில் உருவாகும் புயல்கள் பெரும்பாலும் தமிழக பகுதிகளை நோக்கி நகரும் நிலையில், இந்த புயல் சின்னமும் அப்படி நகர வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக வரும் நாட்களில் தமிழ்நாட்டுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் பார்க்கப்படுகிறது
இதுபோல மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவிவரும் நிலையில், இதன் காரணமாக தமிழ்நாட்டின் சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

