திமுக உடன் பாமக சேர்ந்தால் ஏற்பீர்களா..? - திடமாக திருமாவளவன் சொன்ன பதில்!
திருமாவளவன், திமுக கூட்டணியில் பாமக இணையும் வாய்ப்பு குறித்து கருத்து தெரிவித்தார். பாமக குறித்து 14 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு செய்ததாகவும், அதில் மாற்றம் இல்லை என்றும் கூறினார். தேசிய அளவில் ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும் எனவும், அதிமுகவின் நிலை கவலை அளிக்கிறது எனவும் தெரிவித்தார்.
2026ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள சூழலில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் முழுவீச்சாக ஈடுபட்டு வருகின்றன.
ஒருபக்கம் கட்சிக் கூட்டணி குறித்த அறிவிப்பு, மறுபக்கம் தேர்தல் அறிக்கைகள் சார்ந்த அறிவிப்பு என தமிழக அரசியல் களம் சூடிபிடித்திருக்கும் நிலையில், அதிமுக-பாஜக அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணியில், அன்புமணி தலைமையிலான பாமகவும், டிடிவி தினகரன் தலைமையிலான அமமுகவும் இணைந்துள்ளது. நாதக, தவெக போன்ற கட்சிகள் தனித்துப்போட்டியிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்தசூழலில் திமுக கூட்டணியில் என்ன நிகழும், யார் புதியதாக சேரப்போகிறார்கள், ஏற்கனவே இருக்கும் கூட்டணி கட்சிகள் தொகுதிப் பங்கீட்டுகள் என்ன கோரிக்கையை முன்வைக்கப்போகின்றனர் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.
இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இம்முறை எவ்வளவு தொகுதிகளை கேட்கும் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், தங்களுக்கு அதிக தொகுதிகள் தேவையில்லை என மேடைகளில் பேசிவருகிறார் திருமாவளவன். இந்த நேரத்தில் திமுக உடன் ராமதாஸ் தலைமையிலான பாமக இணையும் என்ற பேச்சு எழுந்தநிலையில், அதுகுறித்து விசிகவின் நிலைப்பாடு என்ன என்பதை தெரிவித்துள்ளார் திருமாவளவன்.
பாமக இருக்கும் அணியில் இடம்பெற மாட்டோம்..
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், தேசிய அளவில் ஜனநாயக சக்திகள் தங்களுடைய மொழியையும், கலாச்சாரத்தையும் காக்க ஒன்றிணைய வேண்டிய அவசியம் இருக்கிறது. இரட்டை எஞ்சின் ஆட்சி என பிரதமர் கூறுவது டெல்லியில் ஒரு எஞ்சின், தமிழ்நாட்டில் ஒரு எஞ்சின் என்பதா? அல்லது தமிழ்நாட்டில் இரட்டை எஞ்சினா என தெரியவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணி அதிமுக தலைமையில் இயங்குகிறது என கூற முடியாத நிலை தான் உள்ளது. அது அதிமுகவிற்கு மிகப்பெரிய பின்னடைவை தான் ஏற்படுத்தும்.
தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி மலரும் என பேசக்கூடிய நிலை இல்லாமல் போய்விட்டது கவலை அளிக்கிறது. அதிமுகவின் நிலையை எண்ணி கவலைப்படுகிறோம். திராவிட இயக்கம் சனாதனத்தின் பிடியில் சிக்கி உள்ளது கவலையளிக்கிறது.
பா.ம.க வின் ஒரு அணி தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து விட்டது. மற்றொரு அணியை திமுக கூட்டணியில் இணைப்பது குறித்து திமுகவின் தலைமை தான் முடிவு செய்ய வேண்டும். பாஜக, பாமக அங்கம் வைக்கும் கூட்டணியில் விசிக இடம்பெறாது. பாமக குறித்து 14 ஆண்டுகளுக்கு முன்பே விசிக முடிவு எடுத்து விட்டது. அதில் எந்தமாற்றமும் இல்லை” என தெரிவித்தார்.
மேலும் விஜய் குறித்து பேசிய அவர், த.வெ.க தலைவர் விஜய் பா.ஜ.க குறித்து என்ன நிலைப்பாட்டில் இருக்கிறார் என்பதை யூகித்து கூற முடியவில்லை. அவர் இதுவரை பா.ஜ.க குறித்தோ, பா.ஜ.கவின் செயல்பாடு குறித்தோ விமர்சிக்கவில்லை. விமர்சனம் செய்ய வேண்டிய நேரத்தில் கூட விமர்சிக்காமல் இருக்கிறார். விஜய் இந்த தேர்தலில் தனித்து ஒரு அணியை உருவாக்குவார் அல்லது தனித்து போட்டியிடுவார் என கருதுகிறேன்” என தெரிவித்தார்.

