வடகிழக்குப் பருவமழையின் முதல் புயல் ‘மோந்தா’.. அக்.27 உருவாக வாய்ப்பு?
வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தெற்கு அந்தமான் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி கடந்த 2 நாட்களாக நிலவி வந்தது. இதன்காரணமாக இன்று காலை 5.30 மணிக்கு அந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருவானது. வங்கக் கடலில் இன்று உருவாகியிருக்கும் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அக்டோபர் 26ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் அக்டோபர் 27ஆம் தேதி புயலாகவும் வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்குப் பருவமழையின் முதல் புயலாக உருவாகவிருக்கும் இந்த புயல் சின்னத்துக்கு மோந்தா (Montha) என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையானது, வரும் 27ஆம் தேதி காலை புயலாக வலுப்பெறும். அதாவது, 27ஆம் தேதி காலை தென்மேற்கு, மேற்கு மத்திய வங்கக் கடலில் புயலாக வலுப்பெறும் வாய்ப்பு உள்ளது. இது ஆந்திரம் நோக்கிச் சென்றாலும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும், ஆங்காங்கே மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளதாக இந்திய வானிலைஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, வடமாவட்டங்களான சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக அக்டோபர் 26ஆம் தேதி ஆறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, விழுப்புரத்தில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 27ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டையில் மிக கனமழை பெய்யும் என்றும், அக்டோபர் 28ஆம் தேதி திருவள்ளூர், ராணிபேட்டையில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறைக்காற்று வீசுவதால், வரும் 28ஆம் தேதி வரை மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

