’RSS-காரர்கள் கால்டுவெல்லை திட்ட காரணம் என்ன?’-ஆளுநர் பேச்சின் பின்னணி குறித்து பேராசிரியர் வீ.அரசு!

”அவர்களது மொழிதான் பெரிது, அதிலிருந்துதான் எல்லாம் வந்தது என்று சொல்லக்கூடிய மனநிலை இருக்கிறது அல்லவா அதற்கு அறிவியல் பூர்வமாக ஆணித்தரமாக ஆப்பு வைத்தவர் கால்டுவெல” பேராசிரியர் வீ.அரசு
வீ.அரசு
வீ.அரசுpt web

அய்யா வைகுண்ட சுவாமியின் 192வது அவதார தின விழா மற்றும் ‘மகாவிஷ்ணுவின் அவதாரம் வைகுண்டசுவாமி அருளிய சனாதான வரலாறு’ புத்தக வெளியீட்டு விழா, சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு, நூலினை வெளியிட்டு நிகழ்ச்சியில் உரையாற்றினார்.

ஆளுநர் பேசியது என்ன?

அப்போது பேசிய அவர், “பள்ளி படிப்பை முடிக்காத கால்டுவெல், ஜி யூ போப் ஆகியோர் இந்தியாவிற்கு வந்தனர். மெட்ராஸ் மகாணத்தில் மக்களை கிறித்தவ மதமாற்றத்திற்கு உட்படுத்தினர். இப்படி எல்லாம் சொல்வதால் எனக்கு கிறித்தவ மதத்தின் மீது, இயேசுவின் மீது எவ்வித வெறுப்பும் கிடையாது. ஏசுவை எனக்கு பிடிக்கும். 1839ம் ஆண்டு 90 ஆயிரம் மெட்ராஸ் மகாண மக்கள் கஜூலு லஷ்ஜி நரசிம்மர் என்பவர் தலைமையில் கையெழுத்திட்டு, குழந்தைகளை கிறித்தவ மதமாற்றம் மேற்கொள்வதற்கும் கிறித்தவத்திற்கு மதமாறினால் தான் பள்ளிகளில் இடம் கிடைக்கும் என்னும் பிரிட்டிஷ் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கால்டுவெல் திராவிட மொழிகள் குறித்து எழுதிய புத்தகம் போலியானது. இன்று பாரதம் விழிப்படைந்து பொருளாதார கலாச்சாரம் வழிகளில் முன்னேறி வருகிறது” என தெரிவித்திருந்தார்.

கால்டுவெல், ஜியுபோப் போன்ற அறிஞர்கள் குறித்த விமர்சனங்கள் மீண்டும் மீண்டும் பாஜகவினர் உள்ளிட்ட வலதுசாரிகள் தரப்பில் முன்வைக்கப்படுகிறது. அப்போதெல்லாம் அவர்கள் குறித்தான விஷயங்களும், அவர்கள் ஏற்படுத்திய தாக்கங்களும் மீண்டும் விவாதத்திற்கு உட்படுத்தப்படும். இந்நிலையில் ஆளுநர் கூறிய கருத்துக்குப் பின் கால்டுவெல் மீண்டும் பேசுபொருளாகியுள்ளார்.

கால்டுவெல்

தமிழை தாய்மொழியாகக் கொள்ளாவிடினும், சமயப் பணிகளுக்காக தமிழ்நாட்டிற்கு வந்து பிறகு தமிழ் மொழியின் மீது தீராத காதல்கொண்டு அயராது தொண்டு செய்த மூவர் எப்போதும் நினைவு கூறத்தகுந்தவர்கள். இத்தாலியில் பிறந்து, தமிழகத்தில் தமிழ்சேவை ஆற்றிய பெஸ்கி எனும் வீரமாமுனிவர், உலகப்பொதுமறை திருக்குறளையும் நாலடியாரையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததோடு, தனது கல்லறையில், ‘தான் ஒரு தமிழ் மாணவர்’ என எழுதி வைத்த ஜி.யு.போப் வரிசையில் தமிழர்களின் நெஞ்சில் நிலைத்திருப்பவர் ராபர்ட் கால்டுவெல்.

“நான் அயர்லாந்தில் பிறந்தேன், ஸ்காட்லாந்தில் வளர்ந்தேன், ஆங்கில நூல்களில் ஆழ்ந்தேன் என்றாலும் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய பெருநாடும் அந்நாட்டு மக்களுமே என் கருத்தை முழுமையாக கவர்ந்ததால் நான் அவர்களில் ஒருவரானேன்” தனது மறைவுக்கு சில தினங்களுக்கு முன் கால்டுவெல் கூறிய வார்த்தைகள் இவை.

இந்திய மொழிகள் எல்லாம் சமஸ்கிருதத்தில் இருந்து பிறந்தவை என்றும் அம்மொழியின் இலக்கணமே பிற மொழிகளுக்கும் இலக்கணங்களாக ஏற்கப்பட்டன எனும் கருத்தை சுக்குநூறாக உடைத்தெறிந்தவர் கால்டுவெல். அவரது ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ எனும் நூல் இதைச் செய்தது. திராவிட மொழிக்குடும்பத்தின் தாய்மொழி தமிழ். “தென்னிந்திய மொழிகள் சமஸ்கிருதத்தில் இருந்து நேரெதிர் தன்மை கொண்டவை, வடமொழி சொற்களை தமிழில் இருந்து எடுத்தாலும், தங்குதடையின்றி தனித்து இயங்கும் தமிழ்” என உலக அரங்கில் உரத்துச் சொன்னவர் கால்டுவெல்.

திருநெல்வேலியில் சமயப்பணி ஆற்றுவது என முடிவு செய்யப்பட்ட நிலையில், தமிழ் மக்களின் வாழ்வியல், பண்பாடு, மொழி முதலியவற்றை அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக நடந்தே சென்றார். இடையன்குடியில் தங்கி இருந்த போது தமிழ் இலக்கியங்களின் பக்கம் கால்டுவெல்லின் கவனம் திரும்பியது. திருக்குறள், சீவக சிந்தாமணி, நன்னூல் போன்ற நூல்களைக் கற்றார். தன்னை ஏற்றுக்கொண்ட திருநெல்வேலி மக்களுக்கு நன்றி செலுத்த விரும்பிய அவர், மாவட்ட வரலாறை ஆய்வு செய்து புத்தகமாக வெளியிட்டார். ’திருநெல்வேலி சரித்திரம்’ எனும் பெயரில் படைக்கப்பட்ட நூல், போர்த்துக்கீசிய, டச்சு, பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேயர்கள் தமிழ்நாட்டில் நிலைகொண்டு வாழ செய்த முயற்சிகளை துல்லியமாக பதிவு செய்துள்ளது.

கால்டுவெல் குறித்து எழுத்தாளரும், ஓய்வு பெற்ற தமிழ் பேராசிரியரும், சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை முன்னாள் தலைவருமான வீ.அரசுவை தொடர்பு கொண்டு இதுகுறித்து கேட்டோம். அவர் கூறியதாவது, “கால்டுவெல் கூறியதெல்லாம் பொய் என ஆளுநர் கூறியதன் அடிப்படை காரணம் என்ன என்பது தான் முக்கியம். இந்தியாவில் இருக்கும் எல்லா மொழிகளும் சமஸ்கிருத மொழியில் இருந்து தான் உருவானது என சொல்லிக்கொண்டு இருந்தார்கள். வில்லியம் ஜோன்ஸ், சமஸ்கிருத மொழி தான் இந்திய மொழிகளுக்கு எல்லாம் மூலம் என்றார். இது எல்லா தரப்பிலும் பரவலாக பேசப்பட்டது. 1500 ஆண்டுகளுக்கும் மேலாக இதுவே எதார்த்தமாக அனைவராலும் கருதப்பட்டது. வெள்ளைக்காரர்களில் இருந்து நம்மூர் ஆட்கள் வரை இதைத்தான் கூறி வந்தனர்.

சமஸ்கிருதத்தில் இருந்தா தென்னிந்திய மொழிகள் வந்தது?

இது ஒருபுறமிருக்க, 1812 ஆம் ஆண்டு மெட்ராஸ் கல்லூரியை எல்லீஸ் தொடங்கினார். இங்கு வரும் ஆங்கில அதிகாரிகளுக்கு நம்மூர் மொழி, பண்பாடு, போன்றவற்றை சொல்லித்தர வேண்டும் என்பதற்காகத் தொடங்கினார்கள். தொடர்ந்து உள்ளூர் தமிழ் தொடர்பாக ஆராய்ச்சிகளை மேற்கொள்ளத் தொடங்கினர். இதன் விளைவு தெலுங்கு மொழிக்கான இலக்கணம் குறித்த நூலில் இவர் எழுதிய முன்னுரையில், “இந்தியாவில் சமஸ்கிருத மொழிக்கு தொடர்பில்லாத, வேறு சில, ஆறேழு மொழிகள் தென்இந்தியாவில் இருக்கிறது” என எழுதினார். அதுதொடர்பாக பல ஆராய்ச்சிகள் நடந்தன. இதன்விளைவு 1856ல் கால்டுவெல் போன்றோர் தென்னிந்திய மொழிக்குடும்பத்திற்கு திராவிட மொழிக்குடும்பம் என்றும், சமஸ்கிருத மொழிக்குடும்பத்திற்கு இந்தோ ஆரிய மொழிக்குடும்பம் என்றும் மொத்தம் 4 மொழிக்குடும்பம் இந்தியாவில் இருக்கிறது என மொழியியல் அறிஞர்கள் உறுதிப்படுத்தி எழுதினார்கள்.

கால்டுவெல் மொழியியலைப் (philology) படித்தவர். கல்லூரிப்படிப்பு, ஆராய்ச்சி பட்டம் எல்லாமே மொழிகளைப் பற்றித் தான். அதனால் அவருக்கு கிரேக்கம், ரோமானியம், ஜெர்மன் போன்ற மொழிகள் எல்லாம் நன்றாக தெரியும். இந்தியாவிற்கு வரும்போது இந்திய மொழிகளைக் கற்றுக்கொள்கிறார். இதன் பின்பான ஆராய்ச்சியின் விளைவாக “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” எனும் நூலை எழுதுகிறார். முதலில் 12 திராவிட மொழிகள் இருக்கிறது என எழுதினார். பின் இரண்டாவது பதிப்பாக அதை விரிவாக்கி எழுதுகையில் 15 மொழிகள் இருக்கிறது என எழுதுகிறார். இதுமாதிரியான புத்தகம் வந்ததன் காரணமாக, சமஸ்கிருதத்தில் இருந்து அனைத்து மொழிகளும் வந்தது என்ற கருத்து உடைந்துபோகிறது.

ஆராய்ச்சியில் விரிவடைந்த திராவிட மொழிகள்

பின் ஐரோப்பாவில் இருந்து, அமெரிக்காவில் இருந்தெல்லாம் அறிஞர்கள் வந்து ஆராய்ச்சி செய்தார்கள். எமெனோ, தாமஸ் பர்ரோ போன்ற மிகப்பெரும் மொழியியல் அறிஞர்கள் இணைந்து திராவிட மொழிகளின் வேர்ச்சொல் அகராதியை dravidian etymological dictionary எனும் புத்தகத்தை 1962 ஆம் ஆண்டு கொண்டு வந்தார்கள். இவர்கள் 32 திராவிட மொழிகள் இருக்கிறது என்றார்கள். பின் இரண்டாம் பதிப்பு வந்தபோது 38 திராவிட மொழிகள் இருக்கிறது என ஆராய்ச்சியில் கண்டுபிடித்து சொன்னார்கள். இதன்மூலம் திராவிட மொழிகளும், சமஸ்கிருதத்தைச் சார்ந்த ஆரிய மொழிகளும் வேறு வேறானவை என்பது உலகம் முழுவதும் அறியப்பட்ட உண்மையாக மாறிவிட்டது. இதற்கெல்லாம் மூலமாக அமைந்தவர் கால்டுவெல்.

சிந்து சமவெளி நாகரீகம் - திராவிட நாகரீகம்

ஆர்.எஸ்.எஸ். காரர்கள் தான் கால்டுவெல்லை திட்ட ஆரம்பித்தார்கள். ஏனென்றால் சமஸ்கிருதத்தில் இருந்துதான் எல்லாம் வந்தது என்பது இல்லை என தெரிந்துவிட்டதல்லவா. பின் சிந்துசமவெளி நாகரீகம் கண்டுபிடிக்கப்பட்டபோது அது திராவிட நாகரீகம் தான் என பெரும்பான்மையான அறிஞர்கள் சொல்கிறார்கள். இவர்கள் ஆரிய நாகரீகம் என நிறுவ செய்த முயற்சிகளெல்லாம் தோற்றுவிட்டது. எதும் நிற்கவில்லை. அவர்களது மொழிதான் பெரிது, அதிலிருந்துதான் எல்லாம் வந்தது என்று சொல்லக்கூடிய மனநிலை இருக்கிறது அல்லவா அதற்கு அறிவியல் பூர்வமாக ஆணித்தரமாக ஆப்பு வைத்தவர் கால்டுவெல். அதைக்கண்டுதான் ரவி போன்றவர்கள் எல்லாம் இன்று துடிக்கிறார்கள். இந்த துடிப்பில்தான் கால்டுவெல் சொன்னது பொய், அவர் படிக்காதவர் என்பது போன்ற அடிப்படை இல்லாத பொய்களை மிகப்பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசிக்கொண்டு உள்ளார்கள்.

கட்சிப்பேச்சாளர்கள், எதிர்க்கட்சியைப் பற்றி என்ன பேசமுடியுமோ எல்லாம் பேசுவார்கள். அதுபோல் தான் எதிர்க்கட்சியினரும். இப்போது பாஜக ஆர் எஸ் எஸ் சார்ந்தவர்கள் என்னவெல்லாம் பொய்சொல்கிறார்களோ, அதையெல்லாம் இவரும் சேர்ந்து சொல்கிறார்.

உலகில் இருக்கும் மொழியியல் அறிஞர்கள் எல்லாம் ஒத்துக்கொண்டு, அதைப்பற்றிய நூற்றுக்கணக்கான ஆராய்ச்சிகள் வந்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில் இவர்கள் இப்படி பேசுவது கொச்சைத்தனமானது. இது கொச்சையான ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரம்” என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com