திருமண பந்தத்தில் தொடரும் கொலைகள், விபரீத முடிவுகள்.. நிபுணர்கள் கொடுக்கும் எச்சரிக்கை!
தமிழகத்தில் சமீபகாலமாக திருமணம் ஆன ஆண் அல்லது பெண் தனது துணையாலே கொலைச் செய்யப்பட்டார், அல்லது தற்கொலை செய்துக் கொண்டார் என செய்திகள் அதிகமாக வந்து கொண்டே இருக்கின்றன.. அதிலும் திருமணம் ஆகி ஒரு மாதத்திலேயே தற்கொலை செய்துக் கொள்ளும் மனைவி, மனைவியால் கொலை செய்யப்பட்ட கணவன் அல்லது விவாகரத்து என குறுகிய காலத்திலேயே தம்பதிகள் தங்களின் குடும்ப வாழ்க்கையை முடித்துக் கொள்கின்றனர்.. அந்த வகையில் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தொல்லையால் புதுபெண் ரிதன்யா தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம், சென்னையில் மனைவியை சந்தேகித்து அடித்து கொன்று குழி தோண்டி புதைத்த கணவர், மனைவி மீது உள்ள கோபத்தில் குழந்தையை கொன்ற தந்தை, மேகாலயாவில் கணவனை கொன்ற மனைவி என பட்டியல் நீண்டுக்கொண்டே இருக்கிறது..
இதற்கெல்லாம் என்ன காரணம்? ஏன் தொடர்ந்து திருமண வாழ்க்கையில் தற்கொலைகள் அல்லது கொலைகள் அத்துடன் விவாகரத்துக்கு பின்னும் மோதல்கள் என்பதை நோக்கி போகிறது? என்பது குறித்து சமூக செயல்பாட்டாளர் இர.முருகவேள், வழக்கறிஞர் கல்பனா, ஆகியோரிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது.. அதற்கு அவர்கள் என்ன பதில் அளித்திருக்கிறார்கள் என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..
இது குறித்து சமூக செயல்பாட்டாளர் இரா. முருகவேள் கூறுகையில், “ 2022 வரைக்கும் உள்ள புள்ளி விவரங்களின்படி பார்த்தால் வரதட்சணை கொலைகள் அதிகமான மாதிரி தெரியவில்லை. ஆனால் மீடியாக்களின் தலையீடு முன்பைவிட தற்போது அதிகமாக இருப்பதினால் இது போன்ற தற்கொலைகள் மற்றும் கொலைகள் அதிகமாக வெளியில் தெரிகிறது. அதுமட்டுமல்லாமல் தற்போதுள்ள கடுமையான சட்டத்திற்கு ஏற்ப இந்த டொமஸ்டிக் வயலன்ஸ் என்று சொல்லப்படும் வன்முறைகளும் கொலைகளும் குறைந்திருக்க வேண்டும்.. ஆனால் அது குறையவும் இல்லை.. பெண்களுக்கு இன்னும் கூட டொமஸ்டிக் வயலன்ஸ் நடப்பதற்கு காரணம் சட்டங்கள் குறித்த போதிய விழிப்புணார்வு இல்லாததுதான்.. அப்படியும் சில பெண்கள் போலீஸ் ஸ்டேஷன் சென்றால் காவல்துறையினர் அந்த பிரச்சனைகளை மேலும் தூண்டிவிடுவது போலதான் பேசுகிறார்கள்.
பொதுவான பெரியவர்கள் இல்லை; எங்குபோய் பிரச்சனையை சொல்வதென்று தெரியவில்லை!!
அதுமட்டுமல்லாமல் இது போன்ற பிரச்சனைகளுக்கு, குடும்பத்தில் பெரியவர்களின் தலையீடு இல்லாததே காரணம். தனி குடித்தனம் என்பது நல்ல விஷயம்தான் என்றாலும், ஒவ்வொரு குடும்பத்திலும் தம்பதிகளுக்கிடையே பிரச்சனை என்றால் அதை கேட்டு புரிந்து அவர்களை சமாதானம் செய்து வைப்பது போன்ற ஒரு உறவுமுறை இருக்கும்.. முக்கியமாக இது போன்ற விஷயங்கள் கிராமங்களில் அதிகமாக இருக்கும்.. வயதில் மூத்த ஒருவர் அந்த கிராமத்தில் கணவன் மனைவிக்கிடையே உள்ள சிக்கல்களை பேசி பஞ்சாயத்து செய்து வைப்பார்கள். இந்த விஷயங்கள் அங்கு சாதி மதங்களை கடந்து நடந்துக் கொண்டிருந்தது.. ஆனால் இப்போது கிராமத்திலும் இது போன்ற விஷயங்கள் குறைந்துவிட்டது. அதனால்தான் பெண்கள் குடும்ப வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படும் போது எங்கு சென்று யாரிடம் சொல்வது என்று தெரியாமல் தவறான முடிவுகள எடுத்து விடுகின்றனர்.
வரதட்சணை வாங்குவது போல கொடுப்பதும் தவறுதான்
பெற்றோர்கள் சற்று விழிப்புணார்வுடன் இருப்பது நல்லது. பெண்கள் குடும்பத்தில் சிக்கல் என்று வந்து நிற்கும்போது அந்த வீட்டில் அவளுக்கான இடம் அப்படியேதான் இருக்கிறது என்று சொல்லி அரவணைத்துக் கொள்ளுங்கள்.. அதை செய்யாமல் அவளை சமாதனம் செய்து மீண்டு அனுப்பி வைப்பது என்பது, அந்த பெண்ணுக்கு யாரும் இல்லை என்ற உணார்வை தந்துவிடும்.. அதுமட்டுமல்லமல் வரதட்சணை வாங்குவது போல கொடுப்பதும் தவறுதான்.. அதனால் பெற்றோர்கள் வரதட்சணையாக நகைகள், கார் மற்றும் பணத்தை கொடுப்பதற்கு பதிலாக அசையா சொத்துகளான வீடு மற்றும் நிலத்தில் பங்கு கொடுப்பது நல்லது.. அப்படி செய்வதினால் அவள் வீட்டில் அவளுக்கான இடம் அப்படியே இருக்கிறது என்ற நம்பிக்கை அவளுக்கு இருக்கும்.
லவ் பிரக் ஆப் போல தான் விவாகரத்தும்.. புதிய வாழ்க்கையை தொடங்கணும்..
அப்படி விவாகரத்து ஆன பெண்களுக்கு கொஞ்சம் கூட நேரம் கொடுக்காமல் பெற்றோர்கள் உடனே மறுமணம் செய்து வைத்து அனைத்தையும் சரிச்செய்து விட வேண்டும் என்றுதான் அவரசபடுகிறார்களே தவிர, அவர்களின் மனதில் என்ன இருக்கிறது என்று கேட்பதே இல்லை. கண்டிப்பாக மறுமணம் செய்துக் கொள்வதை நான் வரவேற்கிறேன். ஆனால் அது முழுக்க முழுக்க சம்பந்தப்பட்ட ஆண் அல்லது பெணின் முழு சமதத்துடன் நடக்க வேண்டும்.. லவ் பிரக் ஆப் ஆன பிறகும் எப்படி வாழ்க்கை இருக்கிறதோ அது போல முதலில் நடந்த திருமண வாழ்க்கை முடிந்து விட்டாலும் வாழ்க்கை இருக்கிறது.. விருப்பப்பட்டால் மீண்டும் மனதிற்கு பிடித்தவரை திருமணம் செய்துக் கொள்ளலாம். அதனை பெற்றோர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். ஆனால் இன்னும் கூட பழைய பாணியில் சில பெற்றோர்கள் இருந்துக் கொண்டு விழிப்புணார்வு இல்லாமல் பெண் பிள்ளைகளுக்கு ஆதரவாக இல்லாமல் இருக்கதான் செய்கிறார்கள்” என்றார்.
இது குறித்து வழகறிஞர் கல்பனா கூறுகையில்,
”பெண்களுக்கு பிரச்சனைகள் வரும்போது அவர்களின் பெற்றோர்கள் கூடவே நிற்க வேண்டும்.. அவர்களின் சப்போர்ட் இருந்தால் கண்டிப்பாக பெண்கள் தற்கொலைக்கு போக மாட்டார்கள்.. ஆனால் பெற்றோர்கள் தன்னுடைய பெண்ணுக்கு அதிகமாக நகைகள் மற்றும் கார் வாங்கி கொடுத்து ஆடம்பரமாக திருமணம் செய்து வைத்து விட்டேன்.. அதனால் அவள் அங்குதான் இருந்தாக வேண்டும் என்ற மனநிலையில் இருகிறார்கள்..
யோசித்து யோசித்து மனம் உடைந்து விடுகிறார்கள்..!!
என்னதான் படித்து தைரியமாக வளர்ந்த பெண்ணாக இருந்தாலும், புதிதாக வந்த குடும்ப உறவில் பிரச்சனை, பெற்றோர்கள் மன வருத்தம் அடைவார்கள் என பலவாராக அந்த பெண் யோசித்து யோசித்து மனம் உடைந்து விடுகிறாள்.. அதனாலேயே தற்கொலைக்கு தள்ளப்படுகிறாள்.
பெற்றோர் சரியாக வளர்ப்பதில்லை..!
இப்போது உள்ள பெற்றோர்கள் பிள்ளைகளை சிறு வயதில் இருந்தே சரியாக வளர்ப்பது இல்லை.. சின்ன பிரச்சனைகள் வந்தால் கூட அதனை எப்படி எதிர்க்கொள்வது, என எதை பற்றியும் சொல்லிக்கொடுப்பது இல்லை.. அவர்களை கடைசி வரைக்கும் குழந்தையாகவே வளர்த்து விடுகிறார்கள்.. அதுமட்டுமல்லாமல் தற்போது உள்ள ஸ்பீடான உலகில் கணவன் மற்றும் மனைவி இருவருமே வேலைக்கு செல்கின்றனர்.. அதனால் அவர்கள் இருவருமே பார்த்துக் கொள்வதே அரிதாகி விடுகிறது. அதன் காரணமாக ஒருவரை ஒருவர் நல்ல புரிதல் இல்லாமல் போகிறது. அதனால் வெளியே செல்லும் இடத்தில் தன்னுடன் அன்பாக பேசுபவர்களிடம் , திருமணத்தை மீறிய உறவு என்ற அடுத்த ஒரு வாழ்க்கை துணையை தேடி செல்கின்றனர்.. இதெல்லாமே இந்த கொலை மற்றும் தற்கொலைகளுக்கு காரணமாக அமைகிறது” என்றார்..