\
அமைச்சர் நிர்மல்குமார்
அமைச்சர் நிர்மல்குமார்pt

யூனிட் மின்சாரம் ரூ.35-க்கு கொள்முதல் ஏன்? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்!

ரூ.35-க்கு மின்சாரம் வாங்க தமிழக அரசு முடிவெடுத்துள்ள நிலையில், நிதிநிலை மோசமடையும் என எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. இதற்கு அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் கொடுத்துள்ளார்.
Published on: 
Summary

தமிழகத்தில் மின்சார தேவை அதிகரித்ததால், உச்ச நேரங்களில் பயன்பாட்டுக்காக 15 நாட்களுக்கு மட்டும் ரூ.35-க்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மின்வெட்டு தவிர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் அளித்தார். நீண்டகால ஒப்பந்தங்கள் மற்றும் லைவ் டேட்டா வசதிகள் விரைவில் செயல்படுத்தப்படும் எனவும் கூறினார்.

தமிழகத்தில் மின்பற்றாக்குறையைச் சமாளிக்க ஒரு யூனிட் மின்சாரத்தை சராசரியாக ரூ.35 விலையில் கொள்முதல் செய்ய மின்வாரியம் ஒப்பந்தம் செய்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், ஏற்கெனவே ரூ.2.47 லட்சம் கோடி கடனில் உள்ள மின்வாரியத்தின் நிதிநிலை மேலும் மோசமடையக்கூடும் என்றும், இதே நிலை நீடித்தால் மின்கட்டண உயர்வுக்கான சூழல் உருவாகலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. மேலும் திமுக ஆட்சியில் ரூ.5.40 முதல் ரூ.9.50 வரை விலையில் மட்டுமே மின்சாரம் கொள்முதல் செய்ததாகவும், தற்போது ஏன் இவ்வளவு விலையில் கொள்முதல் செய்யவேண்டும் என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.

மின்சாரம்
மின்சாரம்கோப்புப் புகைப்படம்

இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், “தமிழகத்தில் மின் கொள்முதல் தொடர்பாக தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர், மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையிலான உச்சபட்ச மின் தேவை நேரங்களில் (Peak Hours) பயன்படுத்துவதற்காக மின்சாரம் கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது. தீபவளி, கிறிஸ்துமஸ் பண்டிகை நாட்களில் மக்கள் எந்தவித சிரமத்தையும் அனுபவிக்கக் கூடாது என்பதற்காக அடுத்த 15 நாட்களுக்கு மட்டுமே கொள்முதல் செய்யப்படவிருக்கிறது. விரைவில் நீண்ட கால ஒப்பந்தம் செய்யப்படவிருக்கிறது. நீண்ட கால ஒப்பந்தம் திமுக காலத்தில் போடப்படவில்லை. தெளிவான நிர்வாகத்தையும் அவர்கள் செய்யவில்லை, எவ்வளவு உற்பத்தித்திறன் யாரிடம் இருந்து வருகிறது என்ற லைவ் டேட்டா விபரமும் இல்லை. விரைவில் லைவ் டேட்டா கொடுக்க வேண்டும் என அறிவிறுத்தியுள்ளோம். இதில் எந்த தவறும், முறைகேடும் நடக்கவில்லை, அப்படியான அரசும் இது இல்லை என கூறியுள்ளார்.

அமைச்சர் நிர்மல்குமார்
யாரும் செய்யாததை செய்த விஜய்.. 'ராகுல் - விஜய் - மோடி' சந்திப்பில் நடந்தது என்ன?

ஏன் அதிக விலையில் கொள்முதல்?

தொடர்ந்து பேசிய அவர், 3,500 மெகாவாட் மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்பட்டிருந்தாலும், 1,500 மெகாவாட் மின்சாரத்தை மட்டுமே பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் 16,000 மெகாவாட்டாக இருந்த மின் தேவை, இந்த ஆண்டு 21,000 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. வெயிலின் தாக்கம் குறையாததால் மின் தேவை அதிகரித்துள்ளது. நெய்வேலியில் (NLC) கிடைக்க வேண்டிய 1,800 மெகாவாட் மின்சாரம் கிடைக்கவில்லை, காற்றாலை மின்சாரம் மூலம் கிடைக்க வேண்டிய 3,000 மெகாவாட் மின்சாரமும் கிடைக்கவில்லை.

ஒன்றிய மின் தொகுப்பிலிருந்தும் போதிய மின்சாரம் கிடைக்காததால், அதிக விலை கொடுத்து மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே கிடைக்க வேண்டிய மின்சாரம் கிடைக்காத நிலையில், மின் தேவையும் அதிகரித்துள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கூடுதல் விலை கொடுத்து மின்சாரம் வாங்காவிட்டால் இரண்டு முதல் மூன்று மணி நேரம் வரை மின்வெட்டு ஏற்படுத்த வேண்டிய நிலை உருவாகும்.

அமைச்சர் நிர்மல்குமார்
பிரதமருடன் முதல்வர் விஜய் சந்திப்பு : அடுத்த நாளே நடந்த அரசியல் மாற்றம்!

அசாம் மாநில அரசிடமிருந்து கடந்த வாரம் 400 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டது, தேவையான பிற வழிகளில் மின்சாரம் வாங்கிய பின்னரே தற்போது 15 நாட்களுக்குக் கூடுதல் மின்சாரம் கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது மட்டும் இல்லாமல் தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகைக் காலங்களிலும் அதிகரிக்கும் மின் தேவையைச் சமாளிக்கக் கூடுதல் மின்சாரம் கொள்முதல் செய்யத் திட்டமிட்டுள்ளது, நீண்டகால மின்சாரக் கொள்முதல் ஒப்பந்தங்கள் மேற்கொள்வதற்கான பணிகளும் இந்த மாதம் தொடங்க உள்ளது.

கடந்த ஆட்சியில் நீண்ட கால கொள்முதல் செய்வதற்கான எந்த பணிகளும் நடைபெறவில்லை. ஆனால் தற்போது இதனை எல்லாம் சரி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம், இது மட்டும் இல்லாமல் சோலார் மூலம் யார் யாரிடம் இருந்து எவ்வளவு மின்சாரம் வாங்கப்படுகிறது என முறையான தகவல்கள் எதுவுமே இல்லாத நிலை உள்ளது. முழுமையாக ஆன்லைன் மூலம் இதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 4 மாதத்தில் யாருக்கும் புதிதாக ஒப்பந்தம் சோலார் முறையில் வழங்கப்படவில்லை.

தமிழகத்தில் தற்போது கூடுதலாக தேவையாகி உள்ள 4500 மெகா வாட் மின்சாரத்தையும் 35 ரூபாய்க்கு வாங்க வில்லை. 1500 மெகாவாட் மின்சாரம் மட்டுமே வாங்கப்படவிருக்கிறது. நம்மால் முடிந்த இடங்களில் எல்லாம் மின்சாரத்தை குறைந்த விலையில் வாங்கிவிட்டு தான் இந்த பணிகளை தொடங்கி உள்ளோம், 16 நாட்களுக்கு மட்டுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

அமைச்சர் நிர்மல்குமார்
யூனிட் மின்சாரம் ரூ.35-க்கு கொள்முதல்.. டி.ஆர்.பி. ராஜா, அன்புமணி, டிடிவி தினகரன் கண்டனம்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com