\
Why Is CM Vijay Shifting His Office?
CM Vijayx page

புதிய இடத்துக்கு மாறும் முதல்வர் விஜய் அலுவலகம்.. காரணம் என்ன?

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தை வேறு இடத்துக்கு மாற்ற அரசு பரிசீலித்து வருவதாகக் கூறப்படும் நிலையில், முதல்வர் விஜயின் அலுவலகமும் தற்போது மாற்றப்பட இருக்கிறது.
Published on

தமிழகத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில், அதிக இடங்களைப் பெற்ற தவெக, பிற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது. தவிர, ஆதரவு தெரிவித்த கம்யூனிஸ்ட் கட்சிகளைத் தவிர்த்து மற்ற கட்சிகளுக்கு (விசிக, காங்கிரஸ், ஐ.யூ.எம்.எல்.) அமைச்சரவையிலும் பங்கு கொடுத்தது. புதிய அரசு பொறுப்பேற்று இரண்டு மாதங்களைக் கடந்துள்ள நிலையில், தமிழக அரசியலில் நாள்தோறும் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்தவண்ணம் உள்ளன. அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் பலரும் தவெகவுக்குப் படையெடுத்து வருகின்றனர். தவிர, திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளில் சில, தவெகவில் ஐக்கியமாகியுள்ளன. தற்போது, மதிமுகவும் அக்கூட்டணியில் போய் இணைந்துள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தை வேறு இடத்துக்கு மாற்ற அரசு பரிசீலித்து வருவதாகக் கூறப்படும் நிலையில், முதல்வர் விஜயின் அலுவலகம் தற்போது தலைமைச் செயலகம் இயங்கிவரும் புனித ஜார்ஜ்கோட்டை வளாகத்துக்குள் வேறு இடத்துக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. கோட்டை வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10ஆவது தளத்துக்கு முதல்வரின் அலுவலகம் மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது இந்த இடம் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் எஸ்பிக்கள் போன்ற அதிகாரிகளுடனான கூட்டங்களை நடத்தப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போதுள்ள முதல்வர் அலுவலகத்தில் நிலவும் இடநெருக்கடியே இந்த இடமாற்றத்திற்கு முதன்மைக் காரணமாகக் கூறப்படுகிறது. இடமாற்றத்துக்குப் பிறகும் முதன்மைப் பகுதியில் உள்ள அறையையும் முதல்வர் அவ்வப்போது பயன்படுத்துவார் என்றும் கூறப்படுகிறது. அதேநேரத்தில், சில ஊடகங்களில் இந்த மாற்றம் வாஸ்து அல்லது ஜோதிட ஆலோசனையால் மேற்கொள்ளப்படுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், இதுகுறித்து தமிழக அரசு எந்த அதிகாரப்பூர்வ விளக்கத்தையும் வெளியிடவில்லை. தற்போது வெளியாகியுள்ள தகவல்களின் அடிப்படையில், அலுவலக மாற்றத்திற்கான அதிகாரப்பூர்வ காரணம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இட வசதி மற்றும் நிர்வாக செயல்திறனை மேம்படுத்தும் நோக்கமே முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com