தமிழகத்தின் அடுத்த டிஜிபி யார் தெரியுமா? பட்டியலில் இருக்கும் மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் இவர்கள்தான்!
- Hajirabanu
தமிழக காவல் துறை தலைவர் சங்கர் ஜிவாலின் பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில், அடுத்த டிஜிபி யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அடுத்த டிஜிபியை நியமிப்பதற்கான பட்டியலை தமிழக அரசு பரிந்துரைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
டிஜிபி பொறுப்பிற்கு நியமிக்கப்படுபவர்கள் தகுதி, வயது மற்றும் பணிக்காலம் உள்ளிட்ட பல முக்கிய அம்சங்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். அதன்படி தகுதியுள்ள காவல் துறை அதிகாரிகளின் பெயரை தமிழக அரசு மத்திய பணியாளர் தேர்வாணையத்துக்கு பரிந்துரைக்கும். புதிய டிஜிபியைத் தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் யுபிஎஸ்சி தலைவர் தலைமையில் நடைபெறும். அதில் தமிழக அரசின் சார்பில் தலைமைச் செயலர், உள்துறைச் செயலர் என 3 செயலர்கள் பங்கேற்பர். அதில் டிஜிபி பதவிக்கு 3 பேர் இறுதி செய்யப்பட்டு ஒருவர் தேர்வு செய்யப்படுவார்.
அதன்படி, தற்போது உள்ள டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு 60 வயதாகும் நிலையில், அடுத்த மாதத்தோடு அவர் ஓய்வுபெற உள்ளார். ஆகஸ்ட் 30ஆம் தேதியோடு அவரது பணிக்காலம் நிறைவடையும் நிலையில், மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் சிலர் அடுத்த டிஜிபிக்கான பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். அதன்படி, சீமா அகர்வால், ராஜீவ் குமார், சந்தீப் ராய் ரத்தோர், கே. வன்னியபெருமாள், மகேஷ் குமார் அகர்வால், ஜி. வெங்கடராமன், வினித் தேவ் வாங்கடே, சஞ்சய் மாத்தூர் உள்ளிட்ட மூத்த காவல் துறை அதிகாரிகள் 19 பேரின் பெயர்கள் மத்திய பணியாளர் தேர்வாணையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில், டிஜிபி சங்கர் ஜிவாலின் பதவிக்காலம் நீட்டிப்பு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் பரவும் நிலையில், அதுகுறித்து காவல்துறை முன்னாள் அதிகாரி ரவி ஐபிஎஸ்சிடம் பேசினோம். அப்போது, ஏற்கெனவே பொறுப்பில் உள்ள டிஜிபி சங்கர் ஜிவாலின் பதவிக்காலத்தை நீட்டிக்க வாய்ப்பு இருக்காது என அவர் கூறினார். நீதிமன்ற வழிகாட்டுதலின்படி டிஜிபியாக பதவிக்கு வருவவோர் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் என்றும் தேவைப்பட்டால் ஓய்வுபெறும்வரை பணியில் நீடிக்கலாம் என்றும் ரவி ஐபிஎஸ் விளக்கமளித்தார்.
தமிழக அரசு பரிந்துரைத்திருப்பதாகச் சொல்லப்படும் 19 அதிகாரிகளில் யார் புதிய டிஜிபியாக பதவியேற்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு காவல்துறை வட்டாரங்களின் பல்சை அதிகரித்துள்ளது.