பக்தர்களால் ‘அம்மா’ என்றழைக்கப்படும் பங்காரு அடிகளார்.. யார் இவர்.. ஆன்மிகத்தில் செய்தது என்ன?

ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனரும் ஆன்மீகவாதியமான மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் இன்று (அக்.19) மாலை காலமானார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பங்காரு அடிகளார்
பங்காரு அடிகளார்புதிய தலைமுறை

ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனரும் ஆன்மீகவாதியமான மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் இன்று (அக்.19) மாலை காலமானார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் இறுதி நிகழ்வு அரசு மரியாதையுடன் நடைபெறும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மதுராந்தகத்தில் விடுமுறை

பங்காரு அடிகளார் மறைவையொட்டி மதுராந்தகம் கோட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்

யார் இந்த பங்காரு அடிகளார்

செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூர் கிராமத்தில் 1941ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் தேதி கோபால் மற்றும் மீனாம்பிகை தம்பதிக்கு மகனாக பிறந்தவர் பங்காரு அடிகளார். இவரது இயற்பெயர் சுப்பிரமணி. பங்காரு என்றால் தெலுங்கு மொழியில் ‘தங்கம்’ என்று பொருள். செங்கல்பட்டு பகுதியில் உள்ள அரசு ஆசிரியர் பயிற்சி மையத்தில் படித்து அச்சரப்பாக்கம் பகுதியில் ஆசிரியராக தனது பணியைத் தொடங்கினார்.

ஆசிரியர் பணியில் இருந்தபோது உத்தரமேரூரைச் சோ்ந்த பள்ளி ஆசிரியையான லட்சுமி என்பவரை திருமணம் செய்துகொண்டாா். 1970களின் தொடக்கம் முதல் மேல்மருவத்தூரில் சக்தி பீடத்தை நிறுவி, பக்தர்களுக்கு அருள்வாக்கு சொல்லிவந்தார்.

ஆன்மிகத்துடன் சமுதாய தொண்டையும் செய்துவந்தார். பங்காரு அடிகளாரை பின்பற்றுபவர்களும் ஆதிபராசக்தி கோயிலின் பக்தர்களும் அவரை 'அம்மா' என்று அழைத்துவந்தனர். மேல்மருத்துவத்தூரில் இவர் தொடங்கிய அறக்கட்டளை பல கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறது. ஆதிபராசக்தி கோயிலில் அனைத்து நாட்களிலும் பெண்கள் வழிபடலாம் என்று கடவுள் வழிபாட்டில் புரட்சி செய்தவர் பங்காரு அடிகளார். அவர், ஆற்றிய சேவைக்காக மத்திய அரசு அவருக்கு 2019ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பங்காரு அடிகளார்
”ஆன்மீகத்தில் மிகப் பெரிய ஆன்மீக புரட்சி செய்தவர்” - பங்காரு அடிகளார் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்!

அமித்ஷா இரங்கல்

”மேல்மருவத்தூர் சித்தர் பீடத்தின் தலைவர் பத்மஸ்ரீ பங்காரு அடிகளார் அவர்களின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. அடிகளார் அவர்கள் ஆன்மீக நுண்ணறிவுகளுக்காக நன்கு அறியப்பட்டவர், அவரது ஆன்மீகம், சடங்கு நடைமுறைகளுக்கு அப்பாற்பட்ட ஒன்று.

இந்த துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் பக்தர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தன்னுடைய இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ஜெ.பி.நட்டா இரங்கல்

”ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின் நிறுவனர் பத்மஸ்ரீ பங்காரு அடிகளார் காலமானார் என்பதை அறிந்து வேதனை அடைந்தேன்.

அம்மா என்று அன்புடன் அழைக்கப்பட்ட அவரது எளிமையும், மனித குல சேவையில் அயராத ஈடுபாடும் என்றென்றும் நினைவுகூரப்படும். துயரத்தின் இந்த நேரத்தில் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வேதனையைத் தாங்கும் சக்தியை எல்லாம் வல்ல இறைவன் அவர்களுக்குத் தருவானாக.

ஓம் சாந்தி” என்று பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் ரவி இரங்கல்

”'அம்மா' பங்காரு அடிகளாரின் மறைவால் வருத்தமடைந்தேன். பண்பட்ட ஆன்மா & சிறந்த ஆன்மிக குரு அவர். கல்வி, சுகாதாரம், சமூக சீர்திருத்தங்களுக்கான அவரது பங்களிப்புகள் என்றும் நம்மை ஊக்குவிக்கும். அவரது குடும்பத்தினருக்கும் பக்தர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

ஓம் சாந்தி!” என்று ஆளுநர் ரவி தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

L.முருகன் இரங்கல்

”மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக பீடத்தின் நிறுவனர் அம்மா #பங்காரு_அடிகளார் அவர்கள் உடல் நல குறைவால் தனது 82-ஆம் வயதில் காலமானார், நம் ஆன்மீக பாரத தேசத்திற்கு இது பெரும் இழப்பு. அனைவருக்கும் ஆன்மீக குருவாய் இருந்து, அனைவரது வளர்ச்சிக்கும் குருவாய் வழிகாட்டியவர் அம்மா பங்காரு அடிகளார் அவர்கள். நம் பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி ஜி அவர்களின் உள்ளத்திலும் அம்மா அவர்கள் நீங்கா இடம் பெற்றுள்ளார்.

ஆன்மீகத்தில் மட்டுமின்றி கல்வி வேலை வாய்ப்பு என பல நற்பணிகளை தன் வாழ்நாள் முழுவதும் ஏழை எளியோர்களுக்காக அர்ப்பணித்துள்ளார். அம்மா அவர்களது ஆன்மீக சேவையை பாராட்டி 2019-ஆம் ஆண்டில் பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜி அரசு அம்மா அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவப்படுத்தியது.

அவரது குடும்பத்தாருக்கும் பக்தர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்து பக்த கோடிகளுக்கும் இனி அவர் சூட்சம வடிவத்தில் இருந்து வழிநடத்துவார். ஓம் சாந்தி..!” என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

பொன்.ராதாகிருஷ்ணன் இரங்கல்

”தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடக மாநில மக்களுக்கும் அன்னை ஆதிபராசக்தியின் அருள் கிடைத்திட பலருக்கும் குருவாக இருந்து வழிகாட்டிய பூஜைக்குரிய பங்காரு அடிகளார் அன்னையின் பாதம் அடைந்தார்.

ஆன்மிகப்பணி மட்டுமன்றி பல்வேறு அறப்பணிகள் மூலம் எளிய மக்களின் வாழ்க்கையில் நம்பிக்கை ஒளியை பாய்ச்சியவர்.

சாதாரண மக்களின் ஆன்மிகத் தேடலுக்கு வழிகாட்டும் அன்னையான பங்காரு அடிகளாரின் ஆன்மா தொடர்ந்து நல்வழிகாட்டும் ஜோதியாக விளங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

அன்னையின் பாதம் பணிகிறேன்” என்று பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com