”ஆன்மீகத்தில் மிகப் பெரிய ஆன்மீக புரட்சி செய்தவர்” - பங்காரு அடிகளார் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்!

ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனரும் ஆன்மீகவாதியமான மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பங்காரு அடிகளார்
பங்காரு அடிகளார்புதிய தலைமுறை

ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனரும் ஆன்மீகவாதியமான மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் இன்று (அக்.19) மாலை காலமானார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழிசை சவுந்தரராஜன், தெலங்கானா ஆளுநர்

பங்காரு அடிகளாரின் மறைவிற்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின், தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர்

”மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக பீடத்தின் தலைவர் திரு.பங்காரு அடிகளார் காலமனார் என்ற செய்தியறிந்து வருந்தினோம். கலைஞர் அவர்கள் மீதும் - கழகத்தலைவர் அவர்கள் மீதும் மிகுந்த அன்பு கொண்டவர்.

மகளிர் எல்லா நாளும் கோயிலுக்குள் செல்லலாம் என்ற முற்போக்கு தளத்தில் ஆன்மிகத்தை நிறுத்திய அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். அடிகளாரை பிரிந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் அவரை பின்பற்றும் லட்சோப லட்ச பொதுமக்கள் அனைவருக்கும் என் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்”.

தயாநிதி மாறன், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்

”மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவி அங்குள்ள கோவில் கருவறையில் அனைத்து நாட்களிலும் பெண்கள் பூஜை செய்யலாம் என்ற முறையை அமல்படுத்தி ஆன்மிகப் புரட்சி செய்தவரும், சித்தர் பீடம், கல்வி நிறுவனங்கள் மூலம் ஏராளமான சமூக சேவைகளை செய்தவருமான பத்மஸ்ரீ பங்காரு அடிகளார் அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றேன்.

அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், பக்தர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்”.

அண்ணாமலை, தமிழ்நாடு பாஜக தலைவர்

”மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர், தவத்திரு பங்காரு அடிகளார் அவர்கள் இறைவன் திருவடி அடைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். அவரது ஆன்மா சாந்தியடைய ஆதிபராசக்தி அம்மனை வேண்டிக் கொள்கிறேன். கோடிக்கணக்கான மக்களின் குருவாகவும், ஆன்மீக மற்றும் கல்விப் பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவரும், ஏழை, எளிய மக்களின் வழிகாட்டியாகவும் விளங்கிய பங்காரு அடிகளாரது மறைவு, நமது சமூகத்துக்குப் பேரிழப்பு.

அவரின் ஆன்மீக அன்பர்களுக்கும் பக்தர்களுக்கும் சார்பாக ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னையின் அவதாரமாக நம்மிடையே வாழ்ந்து முக்தியடந்த அவரது பிரிவைத் தாங்கும் சக்தியை அவரது குடும்பத்தினருக்கும், பக்தர்களுக்கும் அம்மன் வழங்கட்டும். ஓம் சாந்தி.

வானதி சீனிவாசன், பாஜக தேசிய மகளிர் அணி தலைவர், எம்.எல்.ஏ.

”மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனர் திரு.பங்காரு அடிகளார் அவர்கள் மறைந்த செய்தி கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், பக்தர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைய அன்னை ஆதிபராசக்தியை பிரார்த்திக்கிறேன். ஓம் ஷாந்தி.

டி.டி.வி.தினகரன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர்

”கருவறை அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்வதில் தொடங்கி அனைத்து விதமான ஆன்மீகப் பணிகளிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்கி ஆன்மீக குருவாக திகழ்ந்தவரும், பக்தர்களால் பாசமாக ‘அம்மா’ என அழைக்கப்படுபவருமான மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீட நிறுவனர் பத்மஸ்ரீ பங்காரு அடிகளார் அவர்கள் மறைந்தார் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது.

ஆன்மீகவாதிகளில் தனக்கென தனி இடத்தை வைத்திருந்த பங்காரு அடிகளார் அவர்களை இழந்து வாடும் உறவினர்களுக்கும் பக்தர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஆன்மீகப் பணிகளோடு, மாணவர்களை நற்பண்புகளுடன் வளர்க்கக்கூடிய கல்வி, பொருளாதாரத்தில் பின் தங்கிய பொதுமக்களுக்கு தேவையான உதவிகள் என பங்காரு அடிகளார் அவர்கள் ஆற்றிய ஏராளமான தொண்டுகள் அவரின் புகழை என்றென்றும் பாடிக் கொண்டே இருக்கும்.

ஜவாஹிருல்லா, மனிதநேய மக்கள் கட்சி தலைவர்

”மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் உடலநலக்குறைவால் நம்மை விட்டு பிரிந்தார் என்ற செய்தி அறிந்து வேதனை அடைந்தேன். ஆசிரியராக தனது வாழ்க்கையை தொடங்கியவர். ஆன்மீக சேவை மட்டுமின்றி கல்வி சேவை மற்றும் மருத்துவ சேவைகளையும் வழங்கி வந்தவர்.

தமது சேவைக்காக ஒன்றிய அரசின் பத்மஸ்ரீ விருதையும் பெற்றவர். ஆன்மீகத்தில் பெண்களுக்கான வழிபாட்டு உரிமையை நிலை நிறுத்தியவர். அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் ஆன்மீகத் தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்”.

ஓ.பன்னீர் செல்வம், முன்னாள் முதல்வர்

மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி சித்தர் பீடத்தை நிறுவியவரும், பக்தர்களால் அன்போடு ‘அம்மா’ என்றழைக்கப்பட்டவரும், ஆதி பராசக்தி தொண்டு மருத்துவக் கல்வி மற்றும் கலாச்சார அறக்கட்டளையின் தலைவரும், மிகச் சிறந்த ஆன்மீகவாதியுமான பங்காரு அடிகளார் அவர்கள் திடீரென மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். ஆதி பராசக்தி சித்தர் பீடத்தில் எவ்வித நிபந்தனையுமின்றி கருவறை வரை சென்று பெண்கள் பூஜை செய்யவும், வழிபடவும் அனுமதித்து மிகப் பெரிய ஆன்மீக புரட்சி செய்தவர் பங்காரு அடிகளார். உலக அளவில் சக்தி வழிபாட்டுத் தலங்களை உருவாக்கிய பெருமையும் இவருக்கு உண்டு. ஆன்மீக பணிகளோடு, பல சமூக நலப் பணிகளையும் சிறப்பாக ஆற்றிய பெருமைக்குரியவர் பங்காரு அடிகளார் அவர்கள். இவரது ஆன்மீகச் சேவையை பாராட்டி மத்திய அரசு ‘பத்ம ஸ்ரீ’ விருதினை இவருக்கு வழங்கியது. இந்திய நாடு ஒரு மிகச் சிறந்த ஆன்மீகவாதியை இழந்துவிட்டது.

இவருடைய இழப்பு இந்தியாவிற்கு, குறிப்பாக தமிழ்நாட்டிற்கு பேரிழப்பு ஆகும். இவர் விட்டுச் சென்ற இடத்தை இனி யாராலும் நிரப்ப முடியாது. பங்காரு அடிகளை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி சித்தர் பீட நிர்வாகிகளுக்கும், பக்தர்களுக்கும், ஆன்மீகவாதிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இரங்கல்

பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தனது இரங்கல் செய்தியில், “ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின் நிறுவனர் பத்மஸ்ரீ பங்காரு அடிகளார் காலமானார் என்பதை அறிந்து வேதனை அடைந்தேன்.

அம்மா என்று அன்புடன் அழைக்கப்பட்ட அவரது எளிமையும், மனித குல சேவையில் அயராத ஈடுபாடும் என்றென்றும் நினைவுகூரப்படும். துயரத்தின் இந்த நேரத்தில் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வேதனையைத் தாங்கும் சக்தியை எல்லாம் வல்ல இறைவன் அவர்களுக்குத் தருவானாக.

ஓம் சாந்தி” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com