கடும் வலி.. நண்பருக்காக மேடைக்கு வந்த Jr NTR.. Kantara Chapter 1 ப்ரீ ரிலீஸில் நெகிழ்ச்சி
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள படம் `காந்தாரா சாப்டர் 1'. இப்படம் அக்டோபர் 2ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ஜூனியர் என்டிஆர் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வில் பேசிய அவர் "எனக்கு 3 அல்லது 4 வயது இருக்கும் போது முதன்முறையாக என் பாட்டி என்னை உட்கார வைத்து குந்தாபுராதான் என் ஊர், சிறு வயதில் நாங்கள் சில கதைகளே கேட்டு வளர்ந்தோம் என சொல்லி எனக்கு அந்த கதைகளை கூறுவார். அப்போது இதெல்லாம் நிஜமாக நடந்திருக்குமா என்பது புரியாது. ஆனால் அக்கதைகள் பிடிக்கும். அவர் சொல்லும் போதெல்லாம் ஆர்வமாக கேட்பேன். ஒருமுறை அங்கு சென்று குளிகா, பஞ்சுருளி என்றால் என்ன என்பதை பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டேன். ஆனால் நான் கேட்ட அக்கதைகளை ஒரு இயக்குநர் படமாக கொடுப்பார் என ஒருபோதும் நினைத்ததே இல்லை. அது என் சகோதரன் ரிஷப் ஷெட்டி. நான் குழந்தையாக இருந்தபோது கேட்ட கதைகளை, திரையில் பார்த்த போது நான் வார்த்தைகளற்று போனேன். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. கதை தெரிந்த எனக்கே இப்படி ஆனது என்றால், இக்கதையை புதிதாக கேட்ட அனைவரும் என்ன ஆனார்கள் என்பதே காந்தாரா படத்தின் ரிசல்ட். ரிஷப் மிகவும் அரிதான நடிகர் மற்றும் இயக்குநர். இவரிடம் நடிகர் ஆதிக்கம் செலுத்துவாரா, இயக்குநர் ஆதிக்கம் செலுத்துவாரா என யோசித்தேன். ஆனால் சினிமாவின் 24 பிரிவுகளிலும் இவருக்கு அனுபவம் இருக்கிறது. ரிஷப் தவிர வேறு யாராலும் இப்படியான படத்தை கொடுக்க முடியாது.
எப்போதும் என் அம்மா தன்னை உடுப்பி கிருஷ்ணர் கோவிலுக்கு அழைத்து செல்ல சொல்லி கேட்டுக்கொண்டே இருந்தார். நான் அவரை அழைத்து சென்ற போது ரிஷப் இல்லாமல் போயிருந்தால், அந்த தரிசனம் கிடைத்திருக்காது. அவருடைய வேலைகளை விட்டு எங்கள் குடும்பத்தில் ஒருவராக, எங்களோடு பயணித்தார். இதற்கு நன்றி சொல்லி நமக்குள் ஒரு இடைவெளியை ஏற்படுத்த விரும்பவில்லை. ஐ லவ் யூ சார். அங்கு சென்ற போது காந்தாரா சாப்டர் 1-க்காக அவர் படும் கஷ்டங்களை பார்க்க நேரிட்டது. உண்மையாக சொல்கிறேன், காந்தாரா சாப்டர் 1ஐ உருவாக்குவது சுலபமானதல்ல. அவர் ஊரில் இருக்கும் ஒரு கோவிலுக்கு அழைத்து சென்றார். அந்த கோவிலுக்கு செல்ல வழியே இல்லை, இவர்களாக ஒரு பாதையை உருவாக்கிக் கொண்டனர். மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்ட ஒன்றை ரிஷப் இல்லாமல் சாத்தியப்படுத்தி இருக்க முடியாது." எனப் பேசினார்.
இந்நிகழ்வில் ஜூனியர் என்டிஆர் கலந்து கொண்டார் என்பதை விட, அவர் நிகழ்ச்சி முழுக்க கையை வயிற்றில் வைத்த படியே பேசிக் கொண்டிருந்தார். அதற்கான காரணம் ஹைதராபாத்தில் செப்டம்பர் 18ம் தேதி நடைபெற்ற ஒரு விளம்பர படப்பிடிப்பின் போது ஜூனியர் என்டிஆருக்கு அடிபட்டது. இது சிறிய அடிதான் ஜூனியர் என்டிஆர் நலமுடன் இருக்கிறார் எனவும், மருத்துவர்கள் 2 வாரங்கள் ஜூனியர் என்டிஆருக்கு ஓய்வு அவசியம் எனவும் அறிவுறுத்தி உள்ளனர் எனவும் அவரது தரப்பினர் தெரிவித்தார்கள். ஆனால் ஓய்வு காலத்தின் போதும், தன் நண்பர் ரிஷப் ஷெட்டியின் படத்தின் விழாவுக்கு நேரில் வந்து வாழ்த்தியதும், வலியுடன் மேடையில் நின்று பேசியதும் பலராலும் கவனிக்கப்பட்டது. உடல்நிலை சரி இல்லாத போதும் ரிஷப் ஷெட்டிக்காக வந்து நின்ற ஜூனியர் என்டிஆரின் நட்பு பற்றி பலரும் பாராட்டி வருகின்றனர்.