ஆட்சியை நிர்ணயிக்கும் அதிகாரம்.. கொறடா என்பவர் யார்? அவரது பணிகளும், அதிகாரமும் என்ன?
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நடந்துமுடிந்த நிலையில், எந்த கட்சிக்கும் ஆட்சியமைக்க பெரும்பான்மை இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. தனிப்பெரும் கட்சியாக விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்றுள்ள நிலையில், காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்துள்ளது.
தவெக சிறுபான்மை அரசாக பதவியில் உள்ள நிலையில், கட்சிகளின் சட்டமன்ற கொறடாவுக்கு முன்னெப்போதும் இல்லாத அளவு முக்கியத்துவம் ஏற்பட்டுள்ளது. இதனால் அனைத்துக் கட்சிகளும் தங்கள் சட்டமன்ற கொறடாவை கவனமுடன் தேர்வு செய்து வருகின்றன.
கொறடா என்பவர் சட்டமன்றம் அல்லது நாடாளுமன்றத்தில் ஒரு கட்சியின் உறுப்பினர்களைக் கட்டுப்படுத்தும் அதிகார மையமாகச் செயல்படுவார். ஒரு கொறடாவை அக்கட்சியின் தலைமையே நேரடியாக நியமனம் செய்யும். சட்டமன்றத்தில் அல்லது நாடாளுமன்றத்தில் நடக்கும் வாக்கெடுப்பில் ஒரு கட்சியின் கொறடா பிறப்பிக்கும் உத்தரவு மிக உயர்ந்த அதிகாரமாகக் கருதப்படுகிறது.
அவையில் ஒரு மசோதா கொண்டுவரப்படும்போதும் அல்லது அரசின் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின்போதும், அனைத்து உறுப்பினர்களும் கண்டிப்பாக அவையில் இருக்க வேண்டும் என்றும், கட்சி சொல்லும் பக்கமே வாக்களிக்க வேண்டும் என்றும் கட்சியின் கொறடா உத்தரவிடுவார்.
ஒரு கட்சியின் உறுப்பினர் அக்கட்சி கொறடாவின் உத்தரவை மீறி வாக்களித்தாலோ அல்லது அவைக்கு வராமல் இருந்தாலோ, அவர் மீது 'கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்' (Anti-Defection Law) கீழ் நடவடிக்கை எடுக்க கொறடாவுக்கு அதிகாரம் உள்ளது. அப்படி ஓர் உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சபாநாயகருக்கு ஒரு கட்சியின் கொறடா பரிந்துரை செய்தால், அந்த உறுப்பினரின் பதவியே பறிக்கப்படவும் வாய்ப்புள்ளது.
இது தவிர, சட்டமன்றம் அல்லது நாடாளுமன்றத்தில் ஒரு விவாதம் நடைபெறும்போது, கட்சியின் சார்பில் யார்யார் பேச வேண்டும், எவ்வளவு நேரம் பேச வேண்டும் என்பதை முடிவுசெய்யும் அதிகாரமும் இவருக்கு உண்டு. அதேநேரம், ஆளும் கட்சி சார்பில் நியமிக்கப்படும் கொறடா, அரசு கொறடா என்று அழைக்கப்படுவார். இவருக்கு அமைச்சருக்குரிய சம்பளம், அரசு இல்லம், வாகன வசதி ஆகியவை வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

