ED ரெய்டு வந்தால் ஓடிப்போய் மோடியை பார்த்து விடுகிறார் முதல்வர் - சீமான் விமர்சனம்
செய்தியாளர்: வி.சார்லஸ்
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1350வது சதய விழாவையொட்டி திருச்சி ஒத்தக்கடையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சீமான் கூறுகையில்...
பெரும்பிடுகு முத்தரையரின் 1350வது சதய விழா:
படை பல கொண்டு, களம் பல கண்டு, பகை பல வென்று, புறநானூற்று பெருமாவீரன் வள்ளல்கோன் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1350 வது பிறந்தநாளில் எங்களுடைய புகழ் வணக்கத்தை செலுத்தி வீரத்தையும், தீரத்தையும் போற்றுவதில், பெருமையும் திமிரும் கொள்கிறோம். ஊழல், லஞ்சம், கொலை, கொள்ளை, பசி, பட்டினி, இருட்டு, திருட்டு, முறையற்ற நிர்வாகம், மணல் கொள்ளை போன்றவற்றையே திமுக அதிமுக கொள்கையாகக் கொண்டுள்ளது. இரண்டுக்கும் வேறுபாடு இல்லை.
பேரிடர் காலங்களில் கூட மத்திய அரசு நிதி வழங்கவில்லை:
அதேபோல பாஜகவுக்கும் காங்கிரஸ்-க்கும் கொடிகளில்தான் வேறுபாடாக உள்ளது. கொள்கை வேறுபாடு இல்லை. இவர்களுக்கு மாற்று என அவர்களை கூறுவது சரியல்ல, இதை நம்பி ஏமாறுவதுதான் பெருத்த ஏமாற்று. நம்முடைய எல்லா வரியையும் எடுத்துக கொண்டு பேரிடர் காலங்களில் கூட மத்திய அரசு நிதி வழங்கவில்லை என்பதனை தேர்தல் நேரத்தில் மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும்,
ஈடி ரெய்டு வந்தால் ஓடிப் போய் மோடியை பார்த்து விடுகிறார் முதல்வர்:
மூன்று முறை நிதி ஆயோக் கூட்டத்திற்குச் செல்லாத முதல்வர் எதற்காக தற்போது செல்கிறார், ஈடி ரெய்டு வந்தால் ஓடிப் போய் மோடியை பார்த்து விடுகிறார் அப்புறம் என்ன சொல்வது அவரைப் பற்றி. பயம் அவர்களுக்கு. ஆனால் எங்களுக்கு பயமில்லை. இந்த நாட்டை நிர்வாகம் செய்வது சட்டமன்றமா பாராளமன்றமா அல்லது நீதிமன்றமா என கேள்வி எழுகிறது, எல்லா முடிவையும் நீதிமன்றம் எடுக்குமேயானால் சட்டமன்றம், பாராளுமன்றத்தை கலைத்துவிடலாம் என்று சீமான் தெரிவித்தார்.