கட்டாய கல்வி | “தமிழகத்திற்கான நிதியை ஏன் வழங்கவில்லை?” - மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டிய நிதி குறித்த விவரங்களை சமர்ப்பிக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத இடஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு இதுவரை தொடங்கப்படவில்லை எனக் கூறி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமிநாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், கல்வி உரிமைச் சட்டத்தில் தமிழகத்திற்கான நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.
அப்போது மத்திய அரசு ஏன் நிதி ஒதுக்கவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு மத்திய அரசு தரப்பில், சில காரணங்களால் தமிழகத்துக்கு நிதி வழங்கப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டது. என்ன காரணத்துக்காக நிதி ஒதுக்கப்படவில்லை என நீதிபதிகள் வினவியபோது, தமிழக அரசுத் தரப்பில், மத்தியில் ஆளும் கட்சிக்கு தமிழகத்தில் ஒரு எம்பி கூட இல்லை என்பதால் நிதி ஒதுக்கவில்லை என்று கூறப்பட்டது.
இதையடுத்து கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீத இடஒதுக்கீடு இடங்களுக்காக தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டிய நிதி குறித்த விவரங்களை சமர்ப்பிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.