1967,1977 தேர்தலில் நடந்தது என்ன?
1967,1977 தேர்தலில் நடந்தது என்ன? முகநூல்

அண்ணா.. எம்ஜிஆர் வரிசையில் விஜய்? 1967,1977 தேர்தலில் நடந்தது என்ன? வரலாறு சொல்வது என்ன?

கட்சியின் உறுப்பினர் சேர்க்கைக்காக புதிய செயலியை தொடங்கி வைத்திருக்கும் தவெக தலைவர் விஜய், 1967 மற்றும் 1977 தேர்தல்களைப் போலவே 2026 தேர்தல் அமையப்போகிறது என்று பேசியிருக்கிறார்..
Published on

இதற்குப் பின் மக்களுடன்தான் வாழ்க்கை என்று கூறி இருக்கும் விஜய், 2026ல் என்ன கணக்கை வைத்திருக்கிறார். அவர் சொல்லும் 1967 மற்றும் 1977 தேர்தல்களில் நடந்தது என்ன என்று விரிவாக பார்க்கலாம்.

2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள ஏதுவாக நடவடிக்கைகளை முடுக்கி விட்டிருக்கிறார் தவெக தலைவர் விஜய். அதன் ஒரு பகுதியாக, ஊருக்கு ஊர்.. வீதிக்கு வீதி.. வீட்டுக்கு வீடு.. வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு என்ற பிரச்சாரத்தை கையில் எடுத்து, MY TVK என்ற உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை தொடங்கி வைத்திருக்கிறார். அதன்படி, 5 கோடி பேர் குறிக்கோள்.. 2 கோடி பேர் இலக்கு என்று 2 கோடி உறுப்பினர்களை அடுத்த 3 மாதங்களில் கட்சியில் இணைக்க உத்தரவிட்டிருக்கிறார் விஜய். செயலி அறிமுகத்தைத் தொடர்ந்து, நிகழ்ச்சி மேடையில் உரையாற்றிய விஜய், அண்ணா வழியில் செல்வோம் என்று கூறி, 1967 மற்றும் 1977 தேர்தல்களைப் போன்றுதான் 2026 சட்டமன்ற தேர்தல் அமையப்போகிறது என்று பேசியிருக்கிறார். அதாவது, 1967ல் காங்கிரஸை வீழ்த்தி திமுகவும், 1977ல் திமுகவை வீழ்த்தி அதிமுகவும் ஆட்சியைப் பிடித்தது போல, 2026ல் தவெக ஆட்சி அமைக்கும் என்று கூறி இருக்கிறார் விஜய்.

MYTVK செயலி
MYTVK செயலிpt

இந்த நேரத்தில், 1967ல் திமுக ஆட்சியை பிடித்த பின்னணியை பார்க்கலாம்.

விஜய் மேற்கோள்காட்டும் களம் 1967... அண்ணா ஆட்சியமைத்த கதை!

பெரியார் தொடங்கிய திராவிடர் கழகத்தில், அவருக்கு தளபதியாக நின்று, பிறகு அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக, 1949ம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார் பேரறிஞர் அண்ணா. மாறி மாறி ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருக்கும் திமுக, உண்மையில் துவங்கப்பட்டபோது தேர்தல் அரசியலில் கால்வைக்கவில்லை. 8 ஆண்டுகளுக்குப் பிறகே 1957ம் ஆண்டு முதல்முறையாக தேர்தலில் கால் வைத்தது திமுக.

பேரறிஞர் அண்ணா
பேரறிஞர் அண்ணா

போட்டியிட்ட களத்தில் திமுக மொத்தமாக 15 இடங்களில் வென்றது. மாநில சுயாட்சி.. இந்தி திணிப்பு போராட்டம் என்று தீவிரமாக களமாடிய அண்ணா தலைமயிலான திமுக, 1962 தேர்தலில் 50 இடங்களைக் கைப்பற்றி காங்கிரஸுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது. தொடர்ந்து, தமிழ்நாட்டில் இந்தி திணிப்புக்கு எதிரான போர் 1965ல் உச்சம் தொட்டபோது, அதற்கு திமுக செய்த போராட்டம் இன்றளவும் மொழிப்போர் போராட்டக்களத்தில் முக்கிய அங்கமாக இருக்கிறது. அதே நேரம், 1953ம் ஆண்டுக்குப் பிறகு காங்கிரஸில் இருந்து திமுகவில் இணைந்த எம்.ஜி.ஆர் திமுகவுக்கு பிரச்சார பீரங்கியாக செயல்பட்டார்.

தொடர்ந்து, நடைபெற்ற 1967 தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்திய திமுக, தமிழ்நாட்டில் ஆட்சியை அமைத்தது. மொழிப்போர்.. அண்ணாவின் தனித்தமிழ்நாடு உள்ளிட்ட பரப்புரைகள் மேலோங்கி இருந்தாலும், அன்றைக்கும் எம்ஜிஆரின் பரப்புரை தேர்தல் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியது. குறிப்பாக, எம்.ஆர் ராதாவால் எம்ஜிஆர் சுடப்பட்டபோது, கழுத்தில் போஸ்டரோடு எம்ஜிஆரின் போஸ்டர் ஊரெங்கும் ஒட்டப்பட்டன. கண்டடிக்கு சிகிச்சைபெற்றவாரா, கையெடுத்து கும்பிட்டபடி போஸ்டர் மூலமே பரப்புரை செய்தது எம்ஜிஆரின் புகைப்படம். இப்படியாக, வெற்றித் தோல்விகளுக்குப் பிறகே 1967ல் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தார் சி.என் அண்ணாதுரை. அந்த தேர்தலில், சுதந்திரா கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், முஸ்லீம் லீக் மற்றும் திமுக ஆதரவு சுயேட்சைகள் என தனி கூட்டணியை உருவாக்கி ஆட்சியை பிடித்தார் அண்ணா. அப்போது, திமுக கூட்டணி வென்ற தொகுதிகள் 179.

 1967,1977 தேர்தலில் நடந்தது என்ன?
” விஜய் செய்யும் வேலை போதாது": பத்திரிக்கையாளர் சுவாமிநாதன்!

அடுத்ததாக விஜய் மேற்கோள்காட்டும் களம் 1977 களம்.. எம்ஜிஆர் வென்ற கதை!

எம்ஜிஆர், அண்ணாதுரை
எம்ஜிஆர், அண்ணாதுரை

காங்கிரஸில் இருந்து விலகி திமுகவில் சுமார் 20 ஆண்டுகளுக்கு பயணித்த எம்.ஜி.ஆர் 1972ம் ஆண்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். திமுகவில் அண்ணாவின் தளபதிகளில் முக்கிய முகமாக, கலைஞர் கருணாநிதிக்கு உற்ற நண்பனாக இருந்த எம்ஜிஆர், கட்சியில் இருந்து நீக்கப்பட்டபோது, திமுகவில் ஒரு செங்குத்து பிளவு ஏற்பட்டது. நிர்வாகிகள் மத்தியில் அந்த பிளவு ஏற்படவில்லை.. மாறாக, எம்ஜிஆர் அனுதாபிகளாக இருந்தவர்கள் அனைவரும், அதிமுகவுக்கு வர, 1973ல் நடந்த திண்டுக்கல் மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தலில், இரட்டை இலை சின்னத்தோடு களமிறங்கியது ஆறு மாத குழந்தையான அதிமுக. அந்த தேர்தலில் அசுர வெற்றிபெற்று திமுகவிற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து, அரசியல் களத்தில் வெற்றிக்கணக்கை தொடங்கினார் எம்.ஜி.ஆர்

தொடர்ந்து, 1977 சட்டமன்ற தேர்தலில் 144 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தார் எம்.ஜி.ஆர். அந்த தேர்தலில் சிபிஎம், ஃபார்வர்டு ப்ளாக் உள்ளிட்ட கட்சிகள் அதிமுகவோடு கூட்டணி வைத்தன. களத்தில் எம்ஜிஆர் ஒன் மேன் ஆர்மியாக இருந்தபோதும், தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே ஆட்சியைக் கைப்பற்றி திமுகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார். அதுமுதல் எம்ஜிஆர் மறையும் வரை அவரே தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தார். எம்ஜிஆரின் வெற்றிக்குப்பின்னால், மாபெரும் உச்ச நட்சத்திரம் என்ற ஸ்டார்டம் இருந்தாலும், காங்கிரஸ், திமுகவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து, பல தேர்தல்களில் திமுகவுக்கு பிரச்சாரம் செய்து பாடம் கற்றிருந்தார். அந்த பாடமும் 1977 வெற்றிக்கு முக்கிய காரணம்..

அந்த வரிசையில், 2024ம் ஆண்டு புதிதாக கட்சி தொடங்கிய நடிகர் விஜய், 2026 தேர்தலை எதிர்கொள்ள தீவிரம் காட்டி வருகிறார். 1967 மற்றும் 1977 தேர்தல்களைப் போன்று 2026ல் அரசியல் மாற்றம் நிகழுவும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com