காவல்துறை அத்துமீறலில் சாதி ஆதிக்க மனநிலையா? தரவுகள் சொல்லும் உண்மை இதுதான்!
திருப்புவனம் அஜித்குமார் காவல் மரணம் தமிழ்நாட்டை உலுக்கிக்கொண்டிருக்கும் சூழலில் தமிழ்நாட்டிலும் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் காவல் மரணங்கள் தொடர்பாக காவல் துறையினர் யாரும் கைது செய்யப்படுவதே இல்லை என்ற அதிர்ச்சிகர தரவுகள் வெளியாகியுள்ளன. இது குறித்த விரிவான அலசலை இன்றைய பெருஞ்செய்தியாகப் பார்க்கலாம்.
2016-17ஆம் ஆண்டிலிருந்து 2021-22ஆம் ஆண்டுவரை இந்தியா முழுவதும் 11,656 காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ளன. உத்தர பிரதேசத்தில் 2,630 காவல் மரணங்கள் நடந்துள்ளன. 490 காவல் மரணங்களுடன் தமிழ்நாடு தென்னிந்தியாவில் முதல் இடம் வகிக்கிறது. 2017இலிருந்து 2022வரையிலான காலகட்டத்தில் காவல் மரணங்களை விசாரிக்க 345 நீதிபதி விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 123 காவல் துறை அதிகாரிகள் விசாரணைக்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 79 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இவர்களில் ஒருவர் கூட நீதிமன்றத்தால் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டதில்லை.
காவல் மரணங்கள் மட்டுமல்ல தடுப்புக் காவலில் உள்ளவர்கள் மற்றும் விசாரணைக் கைதிகளிடம் காவல் துறை அதிகாரிகள் நிகழ்த்திய பல்வேறு மனித உரிமை மீறல்கள் தொடர்பான வழக்குகளிலும் கிட்டத்தட்ட இதே நிலைதான். சட்டவிரோதமாக காவலில் வைத்திருந்தது, துன்புறுத்தல், சித்திரவதை, காயங்கள் ஏற்படுத்துதல் போன்ற குற்றங்கள் தொடர்பாக 2017 முதல் 2022 வரை 74 வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த வழக்குகளில் மூன்று அதிகாரிகள் மட்டுமே குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளனர்.
2022ஆம் ஆண்டு கணக்குப்படி தமிழ்நாட்டில் 2,129 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 38.5 விழுக்காட்டினர் பட்டியல் சாதியினர். தமிழ்நாடு மக்கள்தொகையில் அவர்களின் பங்கு 20 விழுக்காடுதான். காவல் துறை அத்துமீறல்களில் சாதி ஆதிக்க மனநிலையும் பங்கு வகிக்கும் அவலத்தை இது அம்பலப்படுத்துகிறது.