28 வயதுதான்! கார் விபத்தில் கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா மரணம்.. திருமணமான 10 நாளில் சோகம்!
கால்பந்து உலகில் முன்கள வீரராக தன்னுடைய அசாத்தியமான டிரிப்ளிங் திறமையாலும், களத்தில் வேகம் மற்றும் சிறந்த ஃபினிஸிங் திறமையாலும் கவனம் பெற்றவர் லிவர்பூல் மற்றும் போர்ச்சுக்கல் அணியின் கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா.
சமீபத்தில் போர்ச்சுகல் அணிக்காக ரோனால்டோ உடன் இணைந்து நேஷன்ஸ் லீக் கால்பந்து கோப்பையை இரண்டாவது முறையாக வென்று சாதனைபடைத்த டியோகோ ஜோட்டா, இறந்துவிட்டார் என்ற செய்தி கால்பந்து உலகையே அதிர்ச்சிக்குள் தள்ளியுள்ளது.
முதலில் இந்தசெய்தி பொய்யாக இருக்கக்கூடாதா என்றே எல்லோரும் நினைத்திருந்த வேளையில், காலையில் லிவர்பூல் கிளப்பானது டியோகோவின் மரணத்தை உறுதிசெய்தது. போர்ச்சுக்கல் கால்பந்து கூட்டமைப்பும் வீரரின் இழப்பை வருத்தத்துடன் அறிவித்தது.
இதன்மூலம் திருமணமான பத்தே நாளில் கணவர் டியோகோவை அவருடைய மனைவி இழந்துள்ளார். அத்தோடு அவருடைய 3 குழந்தைகளும் தங்களுடைய தந்தையை இழந்துள்ளனர். லிவர்பூல் கால்பந்து கிளப் தன்னுடைய வளர்ப்பு மகனை இழந்தது. சகவீரர்கள் நல்ல நண்பரை இழந்தனர், கால்பந்து ரசிகர்கள் தங்களுடைய அபிமான நம்பிக்கை நாயகனை இழந்துள்ளனர்.
28 வயதில் அணைத்துக்கொண்ட மரணம்..
ஸ்பெயினில் உள்ள ஜமோரா நகர் அருகே நடந்த கார் விபத்தில், டியோகோ ஜோட்டோவும் அவருடைய சகோதரர் ஆண்ட்ரே சில்வாவும் உயிரிழந்ததாக போலீஸார் உறுதிசெய்தனர். 28 வயதேயான டியோகோ மற்றும் 26 வயதான சகோதரர் ஆண்ட்ரே இருவரும் சாலை விபத்தில் சிக்கிய அவர்களுடைய கார் பற்றி எரிந்ததில் சம்பவ இடத்திலேயே இருவரும் மரணமடைந்தனர்.
டியோகோ ஜோட்டா கடந்த ஜுன் 28-ம் தேதிதான் தன்னுடைய நீண்டகால காதலியான ரூட் கார்டோசோவை திருமணம் செய்துகொண்டார். அவருக்கு 3 குழந்தைகள் உள்ளன. 28 வயதில் நல்ல ஆரோக்கியத்துடனும், தொழில்முறை கால்பந்தில் உச்சம் தொட்டு மகிழ்ச்சியில் திளைத்த டியோகோ, எல்லாம் கைக்கூடிய நேரத்தில் மரணித்திருப்பது கால்பந்து உலகையே வேதனையில் தள்ளியுள்ளது.
டியோகோவின் மரணத்தை உறுதிசெய்த லிவர்பூர்ல் கிளப், “எங்களின் அபிமான வீரர் டியோகோ ஜோட்டா உயிரிழந்ததாக தகவல் கிடைத்தது. அவரின் குடும்பத்திற்கு எப்போதும் நாங்கள் ஆதரவாக இருப்போம், அவருடைய மரணம் குறித்து வேறுஎதுவும் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை, அதேநேரம் டியோகோ ஜோட்டாவின் குடும்பத்தாரின் பிரைவசிக்கு ரசிகர்கள் மதிப்பளிக்க வேண்டும்” என்று வருத்தத்துடன் தெரிவித்தது.
டியோகோவின் மரணம் குறித்து பேசிய போர்ச்சுக்கல் கால்பந்து கூட்டமைப்பு, “இரண்டு சாம்பியன்களை இழந்துவிட்டோம். டியோகோ மற்றும் ஆண்ட்ரே சில்வாவின் மறைவு போர்த்துகீசிய கால்பந்துக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு” என்று தெரிவித்தது.
டியோகோவின் மரணம் குறித்து வேதனை தெரிவித்திருக்கும் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ”இப்போதுதான் நாங்கள் தேசிய அணியில் ஒன்றாக இருந்தோம், நாங்கள் அனைவரும் உங்களை மிஸ் செய்வோம்” என்று விரக்தியில் கூறியுள்ளார்.
டியோகோவின் தொழில்முறை பயணம்..
கால்பந்து விளையாட்டை பொறுத்தவரையில் சில வீரர்கள் சில இடங்களில் மட்டுமே விளையாட பிரத்யேகமாக தயாராவார்கள், ஆனால் டியோகோவை பொறுத்தவரையில் எந்த இடத்தில் விளையாடினாலும் சிறப்பாக செயல்படக்கூடியவர். ஆரம்பத்தில் ஃபார்வர்டு மற்றும் லெஃப்ட் விங்கர் பொஷிசனில் தன்னை தயார்படுத்திக்கொண்ட டியோகோ, லிவர்பூல் சென்று ஃபார்வர்டு பொஷிசனில் உச்சம் பெற்றார்.
1996-ல் பிறந்த டியோகோ ஜோட்டா போர்ச்சுக்கல் அணிக்காக யு-19, யு-21 மற்றும் யு-23 என அனைத்து லெவலிலும் தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தினார். ஆரம்பத்தில் தொழில்முறை கால்பந்தில் வாய்ப்புக்காக போராடிய டியோகோ, நிரந்தர இடத்திற்காக எங்கு வாய்ப்பு கிடைத்தாலும் சென்று விளையாட தொடங்கினார்.
போர்ச்சுக்கலின் போர்டோவில் பிறந்த ஜோட்டா, தனது கால்பந்து பயணத்தை பகோஸ் ஃபெரீராவின் இளைஞர் அணிகள் மூலம் தொடங்கினார், பின்னர் 2016-ல் ஸ்பெய்ன் கிளப்பான அட்லெடிகோ மாட்ரிட்டுக்கு சென்ற அவர், FC போர்டோவில் இணைய மீண்டும் நாட்டிற்கே திரும்பினார். பின்னர் 2017/18 பிரீமியர் லீக்கில் வால்வர்ஹாம்ப்டனில் தன்னை இணைத்துக்கொண்டார்.
வாய்ப்புக்காகவும், காயத்தாலும் நீண்ட போராட்டத்தை நடத்திய டியோகோ ’லிவர்பூல் கால்பந்து கிளப்பில்’ தான் தன்னுடைய கிளப் வாழ்க்கையின் உச்சத்தை அடைந்தார். ஜூர்கன் க்ளப்பின் கீழ் விளையாடிய அவர், FA கோப்பை மற்றும் லீக் கோப்பை இரண்டையும் வென்று மகுடம் சூடினார். அவரின் அசாத்திய திறமைக்கு மதிப்பளித்த லிவர்பூல் தங்கள் அணியில் நிரந்தர இடத்தை டியோகோவிற்கு ஒதுக்கியது.
தொடர்ந்து 2024/25 சீசனில், புதிய மேலாளர் ஆர்னே ஸ்லாட்டின் கீழ் லிவர்பூல் பிரீமியர் லீக் பட்டத்தை வெல்ல ஜோட்டா முக்கிய பங்கு வகித்தபோது, அவரது கால்பந்து வாழ்க்கை புதிய உயரங்களை எட்டியது.
கிளப் மட்டுமில்லாமல் சர்வதேச அரங்கிலும் அவரது சாதனைகள் விரிவடைந்தன, போர்ச்சுக்கல்லுக்காக விளையாடிய டியோகோ 2019 மற்றும் 2025 UEFA நேஷன்ஸ் லீக் கோப்பையை இரண்டுமுறை வெல்ல போர்ச்சுக்கல் அணியில் ஒரு பகுதியாக இருந்தார்.
டியோகோ தனது தொழில்முறை கிளப் வாழ்க்கையில், மொத்தம் 448 போட்டிகளில் விளையாடி, 150 கோல்களை அடித்ததோடு 77 கோல்கள் அடிக்க உதவியும் செய்திருக்கிறார்.
28 வயதில் நிலையான இடத்திற்காகவும், திறமைக்கான அங்கீகாரத்திற்காகவும் போராடிய டியோகோ, அனைத்தும் கைக்கூடும் நேரத்தில் மரணத்திருப்பது கால்பந்து உலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதுமட்டுமில்லாமல் புத்திசாலித்தனமான நிலைப்படுத்தல் மற்றும் அழுத்தமான நேரத்தில் முக்கியமான கோல்களை அடிப்பதில் திறமை கொண்ட வீரர் என அறியப்பட்ட டியோகோ, வெறும் 28 வயதிலேயே போர்ச்சுகலின் மிகவும் நம்பகமான முன்னோடிகளில் ஒருவராக நற்பெயரைப் பெற்றார் என்பது பெருமைக்குரியது.
உங்கள் பெயரும் புகழும் காலம் உள்ளவரை நிலைத்திருக்கட்டும் டியோகோ ஜோட்டா! விடைபெறுங்கள்..!