”யாரும் என்னை பார்க்க வர வேணாம்..” - ஏமாற்றத்தில் மூத்த நிர்வாகிகள்! ராமதாஸ் சொல்லும் கணக்கு என்ன?
பாமகவின் தலைவராக இருந்த அன்புமணியை அதிரடியாக நீக்கிய ராமதாஸ், சமாதானம் பேச வரும் முன்னணி நிர்வாகிகளுக்கு நேரம் கொடுக்காமல் அமைதி காத்து வருகிறார். தைலாபுரம் இல்லத்தில் நிர்வாகிகள் பலர் காத்திருக்க, தன்னை யாரும் சந்திக்க வரவேண்டாம் என்றும் கூறி முடித்திருக்கிறார். குறிப்பாக, தனது மகள்களிடம் முக்கிய விடயத்தையும் சொல்லி அனுப்பி இருக்கிறார். நடப்பதை விரிவாக பார்க்கலாம்.
பாமக தலைவராக இருந்த அன்புமணி ராமதாஸை செயல்தலைவராக மாற்றி அக்கட்சியின் நிறுவனரும், தந்தையுமான ராமதாஸ் அறிவித்திருந்தார். பாமகவின் தலைவர் பதவியை அவரே எடுத்துக்கொண்ட நிலையில், அன்புமணியின் பதவி பறிப்புக்கு உட்கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு கிளம்பியது. தந்தை மகனுக்கான மோதல் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி, குழப்பத்தை உண்டாக்கியுள்ளது.
இதனால் மீண்டும் பாமகவின் தலைவராக அன்புமணி ராமதாஸை நியமிக்க கோரி, ராமதாஸிடம் அவரது மகள்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் தன் முடிவிலிருந்து பின்வாங்க போவதில்லை என ராமதாஸ் உறுதியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் சென்னையிலுள்ள அண்புமணி ராமதாஸை, அவரது இல்லத்தில் வைத்து சந்தித்த பாமக நிர்வாகிகள் வழக்கறிஞர் பாலு, முன்னாள் எம்.பி செந்தில்குமார், வன்னியர் சங்க மாநில செயலாளர் சேலம் கார்த்திக், பசுமை தாயம் அருள் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். நேற்று காலை அன்புமணியிடம் பேசிவிட்டு, மாலை நேரத்தில் தைலாபுரம் இல்லத்தில் ராமதாஸை சந்திக்க புறப்பட்டனர். மாலை 5.20 மணியளவில் தைலாபுரம் இல்லத்திற்கு வருகை புரிந்த நிர்வாகிகள், வீட்டின் வாயிலில் காத்திருந்த நிலையில், அவர்களை சந்தித்து பேச ராமதாஸ் மறுத்துவிட்டர்.
மூன்றரை மணி நேரமாக காத்திருந்தும், ராமதாஸ் நேரம் கொடுக்காததால், தைலாபுரம் இல்லத்திலிருந்து வெளியே வந்தவர்கள் செய்தியாளர்களை சந்திகாமலையே ஏமாற்றத்தோடு காரில் ஏறி புறபட்டுச் சென்றனர். அதன் பின்னர் மூத்த மகள் காந்தி, தலைமை நிலை செயலாளர் அன்பழகன் ஆகியோரை அழைத்துப் பேசிய ராமதாஸ், தனது முடிவில் இருந்து பின் வாங்கப்போவதில்லை என்று உறுதிபட கூறிவிட்டாராம். அத்தோடு, பாமக தலைவர் நீக்கம் தொடர்பாக யாரும் தன்னை சந்திக்க வரவேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.