\
அண்ணாமலை
அண்ணாமலைpt web

பாஜகவுக்கு Bye Bye.. அதிர்ச்சி கொடுத்த அண்ணாமலை! விலகலுக்கு இதுதான் காரணமா?

பாஜகவிலிருந்து விலகுவதாக அண்ணாமலை எடுத்திருக்கும் முடிவு தமிழக அரசியலில் கவனிக்கவைக்கும் நகர்வாக பார்க்கப்படுகிறது.
Published on
Summary

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை, 2020ல் பாஜகவில் இணைந்து விரைவில் தமிழக மாநிலத் தலைவராக உயர்ந்தார். திராவிடக் கட்சிகளை கடுமையாக விமர்சித்து, 2024 லோக்சபா தேர்தலை தனி அணியாக சந்தித்து பாஜகவின் முன்னேற்றத்திற்கு முக்கிய காரணமாக திகழந்தார். ஆனால் 2026 சட்டமன்றத் தேர்தலை அதிமுக கூட்டணியுடன் சந்திக்க வேண்டும் என்ற பாஜக மேலிட முடிவு மற்றும் கட்சியில் அவருக்கான முக்கியத்துவம் மறுக்கப்பட்டது அவரை கட்சியிலிருந்து விலகும் நிலைக்கு தள்ளியதாக தகவல் வெளியாகியுள்ளது.

கரூர் மாவட்டத்தை சேர்ந்த அண்ணாமலை 2011-ஆம் ஆண்டில் சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றார் . ஐபிஎஸ் அதிகாரியாக கர்நாடகாவின் உடுப்பி மாவட்ட காவல்துறை துணைக் கண்காணிப்பாளராகப் அண்ணாமலை தனது பணியைத் தொடங்கினார். காவல்துறை பணியில் தனது அதிரடி செயல்பாடுகள் காரணமாக பரவலான ஊடக கவனத்தை அண்ணாமலை ஈர்த்த நிலையில், 2019-ல் தனது ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்தார்.

முதலில் அவர் ரஜினி தொடங்கவுள்ள கட்சியில் இணைவார் என்று பரபரப்பான செய்திகள் வெளியாகின. ஆனால், ரஜினி கட்சித் தொடங்காத நிலையில், 2020-ஆம் ஆண்டு அண்ணாமலை அதிகாரப்பூர்வமாக பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார். பாஜகவில் இணைந்த அவருக்கு உடனடியாக மாநிலத் துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது.

அண்ணாமலை
அண்ணாமலைPt web

அதனைத் தொடர்ந்து ஒரு வருடத்துக்குள் அதாவது 2021-ம் ஆண்டு தமிழக பாஜகவின் மாநில தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார். திராவிட கட்சிகளை அவர் கடுமையாக விமர்சித்த நிலையில், அது கட்சிக்குள் அவருக்கு ஒரு பெயரை பெற்றுத்தந்தது.

அவர் தலைமையில் 2024 நாடாளுமன்றத் தேர்தலை பாஜக தனியாக கூட்டணி அமைத்து சந்தித்தது. அந்த தேர்தலில் ஒரு இடத்திலும் பாஜக கூட்டணி வெற்றிபெறவில்லை என்றாலும் மாநிலம் முழுவதும் பாஜக கூட்டணி 18.28 சதவீத வாக்குகளை பெற்று கவனம் ஈர்த்தது.

அண்ணாமலை
”விசிக மீது அதிக பாசம் வைத்திருந்தோம்.." - விமர்சனம் குறித்து ஆ.ராசா விளக்கம்!

பாஜகவில் இருந்து விலக என்ன காரணம்..?

இந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் பாஜக மேலிடம் 2026 சட்டமன்றத் தேர்தலை அதிமுக கூட்டணியில் இணைந்து சந்திக்க விரும்பியது. ஆனால் அதிமுக கூட்டணியில் சேர அண்ணாமலை விரும்பவில்லை என்று கூறப்பட்டது. அதோடு அண்ணாமலை மாநில தலைவராக இருந்தால் பாஜக கூட்டணியில் இணையமாட்டோம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாகவும் செய்திகள் வெளியானது.

இப்படிப்பட்ட நிலையில், கடந்த 2025-ம் ஆண்டு பாஜக மாநில தலைவர் பொறுப்பில் இருந்து அண்ணாமலை விடுவிக்கப்பட்டு, அந்த இடத்துக்கு நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார். அதோடு கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்து அண்ணாமலையின் ஆதரவாளர்கள் நீக்கப்பட்டதாகவும் விமர்சனம் எழுந்தது.

அண்ணாமலை
அண்ணாமலைஎக்ஸ்

அதிமுக கூட்டணியில் 2026 சட்டமன்றத் தேர்தலில் கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு தொகுதியில் அண்ணாமலை போட்டியிட விருப்பம் தெரிவித்ததாகவும், ஆனால் அதனை பாஜக ஏற்கவில்லை என்றும் கூறப்பட்டது. இதனால் அண்ணாமலை பாஜக மேலிடம் மீது அதிருப்தியில் இருந்ததாக தொடர்ந்து செய்திகள் வெளியான நிலையில், அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. டெல்லியில் பாஜக தேசிய தலைவர் நிதின் நபினை சந்தித்து அண்ணாமலை தனது பதவி விலகல் கடிதத்தை அளித்ததாகவும், இதனைத் தொடர்ந்து அமித் ஷாவை சந்தித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து அண்ணாமலை பாஜக மேலிடத்துக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும், விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. அண்ணாமலை தரப்பிலோ, பாஜக தரப்பிலோ இதுகுறித்து உறுதிபடுத்தப்பட்ட தகவல்கள் அறிவிக்கப்படாத நிலையில், நாளை அவரது பிறந்தநாளில் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில் அவர் தனது புதிய கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

அண்ணாமலை
அண்ணாமலை ராஜினாமா கடிதம் ஏற்க மறுப்பு.? நயினார் நாகேந்திரன் டெல்லி பயணம்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com