”விசிக மீது அதிக பாசம் வைத்திருந்தோம்.." - விமர்சனம் குறித்து ஆ.ராசா விளக்கம்!
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு பின் தவெக ஆட்சியில் விசிக முதல் முறையாக அமைச்சரவை இடம் பெற்றது அரசியல் சர்ச்சையை கிளப்பியது. விசிக திமுக கூட்டணியிலிருந்து விலகாது, தவெக அமைச்சரவையில் சேராது என்ற எதிர்ப்பார்ப்பை மீறியபோது ஆ.ராசா கடுமையாக விமர்சித்தார். பின்னர் எழுந்த எதிர்ப்புகளுக்கு மத்தியில், விசிக மீது பாசம் அதிகம் என்பதால் தான் கோபமும் அதிகம் என அவர் விளக்கம் அளித்தார்.
2026 சட்டமன்ற தேர்தலில் திமுக உடன் கூட்டணி வைத்து களம்கண்ட காங்கிரஸ், விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள், தேர்தலுக்கு பின் தனிம்பெருங்கட்சியான தவெக ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்ததோடு தற்போது தவெகவின் அமைச்சரவையிலும் இடம்பெற்றுள்ளன.
விசிகவின் வன்னி அரசு தவெக அமைச்சரவையில் சமூக நீதித்துறை அமைச்சராக பதவியேற்றுக்கொண்ட நிலையில், தமிழக அரசியலில் முதல் முறையாக அதிகாரத்தில் சென்று அமர்ந்துள்ளது விசிக.
இந்நிலையில் விசிக, திமுக கூட்டணியிலிருந்து பிரிந்து செல்லாது, தவெக அமைச்சரவையில் இடம்பெறாது என்று சொல்லப்பட்ட நிலையில், தவெகவின் அமைச்சரவையில் இடம்பெற்ற விசிகவை கடுமையான முறையில் விமர்சித்திருந்தார் ஆ.ராசா.
எம்.பியும், திமுக துணைப்பொதுச்செயலாளராருமான ஆ.ராசா தனது எக்ஸ் சமூகவலைத்தளத்தில், முன் ‘ஏற’ தரப்பட்ட ‘ஏணியும்’, மூட சாதியை நொறுக்க வேண்டிய சிறுத்தையும் வெறும் விசில் சத்தத்திற்கு ஆதரவாகிவிட்டதாக கூறியதோடு தவறான வார்த்தை பிரயோகத்தை பயன்படுத்தியும் விமர்சித்திருந்தார். அவரின் இந்த கருத்துக்கு கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், அந்த பதிவை அவர் பின்னர் நீக்கினார்.
இந்தசூழலில் விசிக மீதான கடுமையான விமர்சனம் குறித்து செய்தியாளர்களிடம் பதிலளித்த அவர், “விசிக மீது அதிக பாசம் வைத்திருந்தோம். யார் மீது அதிகம் பாசம் வைத்திருந்தோமோ அவர்கள் மீதுதான் கோபம் வரும். காங்கிரஸ் மீது நாங்கள் அதிக பாசம் வைக்கவில்லை, சித்தாந்தம் ரீதியாக திமுகவும், விசிகவும் ஒத்த கருத்துடையவர்கள். அவர் எங்கண்ணன், நான் தம்பி, எதிர்ப்பார்த்த நம்பிக்கை அவரிடம் இல்லை எனும்போது கோபம் வரும். அன்றைய கோபத்தில் நானும் பேசினேன், அவர்களும் பேசியிருப்பார்கள் இதில் ஒன்றும் இல்லை. திமுக, விசிக இடையே இருப்பது சகோதர முரண்பாடு தான், இது நிரந்தரமானது இல்லை” என்று பேசியுள்ளார்.

