பொன்முடிமீது சேற்றைவாரி இறைப்பு.. பின்னணியில் பாஜக பெண் நிர்வாகி! என்ன நடந்தது? முழுப் பின்னணி!
தமிழக வனத்துறை அமைச்சரும் திமுகவின் துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவருமான பொன்முடி மீது இன்று சேற்றை வாரி அடித்த சம்பவம் பரபரப்பை பற்றவைத்தது. விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்ட மக்களை சமாதானப்படுத்தச் சென்றபோது இந்தச் சம்பவம் அரங்கேறியது.
இந்தநிலையில், இந்தச் சம்பவத்துக்குப் பின்னால் மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் இருப்பதாக அதிரடியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருக்கிறார், தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு.. நடந்தது என்ன விரிவாகப் பார்ப்போம்..
என்ன நடந்தது?
ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டின் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திண்டிவனம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்ட மகக்ள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்..
இந்நிலையில் விழுப்புரம் அருகேயுள்ள அரசூர், இருவேல்பட்டு உள்ளிட்ட ஐந்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு அப்பகுதியில் வசித்தவர்களின் வீடுகளில் புகுந்து பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. இரண்டு தளம் உள்ள வீடுகளின் மாடியில் ஏறி அப்பகுதியினர் தங்களின் உயிர்களைக் காப்பாற்றி கொண்ட நிலையில், அங்கிருந்து மீட்கபட்டவர்கள் விழுப்புரம் திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் தங்கினர்.
மீட்கப்பட்டவர்களுக்கு உணவு, தண்ணீர் போன்ற அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காமல் ஆத்திரமடைந்த மக்கள் இருவேல்பட்டு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மறியலின் போது போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் கலைந்து செல்லாததால் அப்பகுதிக்கு வனத்துறை அமைச்சர் பொன்முடி ஆய்வுக்குச் சென்றார். அப்போதுதான், அமைச்சர் பொன்முடி மீது சேற்றைவாரி அடிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி தேவையான உணவு குடிநீர் வழங்கநடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்து அங்கிருந்து புறபட்டார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
திட்டமிட்டு சேற்றை வீசியுள்ளனர்..
இந்தநிலையில், இன்று மதியம் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு,``அரசூர், இருவேல்பட்டு பகுதி மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் ஆறுதல் கூறவும் அமைச்சர் பொன்முடி அங்கு சென்றார்.., அரசூர் ஊராட்சியைச் சேர்ந்த குறிப்பிட்ட கட்சியைச் சார்ந்த விஜயராணி மற்றும் அவரின் உறவினர் அமைச்சர் மீது சேற்றைவாரி இறைத்திருக்கின்றனர்.. மக்கள் பணியில் ஈடுபடுவர்களை இதுபோன்ற செயல்கள் மூலம் அச்சுறுத்துகிறார்கள்... ஆனால், இதுபோன்ற அச்சுறுத்தல்களைக் கண்டு அஞ்சாமல் மக்கள் பணி செய்கிற இயக்கம் திமுக’’ எனக் கருத்துத் தெரிவித்தார்.
இதுகுறித்து அந்த வட்டாரத்தில் விசாரித்தபோது, அமைச்சர் சேகர்பாபு குறிப்பிட்ட விஜயராணி என்பவர் பாஜகவைச் சேர்ந்தவர் என்று சொல்லப்படுகிறது..,
இதுகுறித்து விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கலிவர்தனிடம் பேசினோம். அப்போது பேசிய அவர்,``பாஜகவைச் சார்ந்தவர்கள் யாரும் ஒழுங்கீனமாக நடந்துகொள்ள மாட்டார்கள்..,பாஜகவின் பெயரைக் கெடுப்பதற்காக, திமுகதான் இதுபோன்ற செய்திகளைப் பரப்புகிறது..,பாஜகவினருக்கும் இந்தச் சம்பவத்துக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது’’ என்றார்.