“தமிழகத்திற்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும்” - தமிழ்நாடு முதல்வரிடம் பிரதமர் உறுதி!
ஃபெஞ்சல் புயலில் மழையால் சேதமான பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட நிவாரண நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பிரதமர் மோடி தொலைபேசி மூலம் கேட்டறிந்துள்ளார்.
தென்மேற்கு வங்கக் கடலில் கடந்த 29ம் தேதி உருவான ஃபெஞ்சல் புயலால், கடந்த 3 நாட்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் அதிகனமழை பெய்தது. இது எண்ணமுடியாத துக்கத்தையும் இழப்பையும் தமிழக மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திண்டிவனம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள மக்கள் உணவின்றியும், இருப்பிடங்களை இழந்தும் கண்ணீர் மழையில் தவிக்கின்றனர். இவர்களுக்கு தமிழக அரசு சார்பாகவும் தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பாகவும் பல மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், “ஃபெஞ்சல் புயலால் தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களில் இதுவரை கண்டிராத அளவில் பல பாதிப்புகளை சந்தித்துள்ளது. பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் சேதங்களை சரிசெய்ய ரூ.2000 கோடி நிவாரணம் வேண்டும்” எனக் பிரதமருக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். நேற்று முதல்வர் கடிதம் எழுதிய நிலையில் இன்று, தமிழக வெள்ள பாதிப்பு தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினிடம் கேட்டறிந்துள்ளார் பிரதமர் மோடி.
பிரதமர் வழியாக அனுப்பப்பட்ட செய்தி குறிப்பில்..
பிரதமர் மோடி முதல்வர் ஸ்டாலினிடம் இன்று காலை தொலைப்பேசி வழியாக பேசியபோது, தமிழகத்தில் எந்தெந்த பகுதிகள் அதிகமாக பாதிக்கப்பட்டு இருக்கிறது, 4 நாட்களுக்கு மேலாகிறது தற்போது சூழல் என்ன, எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள், பாதிக்கப்பட்ட விவசாய நிலங்கள் என்னென்ன போன்றவற்றை கேட்டறிந்ததாக பிரதமரின் அலுவலகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்றும், ஏற்கனவே தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் களமிறங்கி இருக்கும் பட்சத்தில், தேவைப்பட்டால் கூடுதலாக மீட்பு பணியினரை இயக்குவதற்கும் தயார் என்றும் பிரதமர் மோடி முதலமைச்சர் ஸ்டாலினிடம் உறுதியளித்துள்ளார்.
பிரதமர் கேட்டது என்ன - முதலமைச்சர் விளக்கம்!
இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவிக்கையில்,
“தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார். ஒன்றியக் குழுவை அனுப்பி சேதங்களை மதிப்பீடு செய்ய வேண்டும் என பிரதமரிடம் மீண்டும் வலியுறுத்தினேன். தமிழ்நாட்டின் கோரிக்கையை பிரதமர் உடனடியாக நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
முதற்கட்ட நடவடிக்கையாக, தமிழகத்தின் நிலை குறித்தும் மீட்பு நடவடிக்கை குறித்தும் கேட்கப்பட்டுள்ள சூழலில், இதன் பின்னர் மத்திய குழு தமிழகம் விரைந்து இதுத்தொடர்பாக ஆய்வு செய்வர் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.