விசாரணை முதல் ஓமந்தூரார் வரை... அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் இதுவரை நடந்தவை!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசியல் பின்னணி என்ன?
1994 ஆம் ஆண்டு மதிமுக-வில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கிய செந்தில் பாலாஜி 1996-ல் திமுக-வில் இணைந்தார். இதையடுத்த 4 ஆண்டுகளுக்கு பின் 2000-ல் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். இதைத் தொடர்ந்து 2006, 2011, 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்நிலையில், கடந்த 2011 - 2015 வரை அதிமுக அமைச்சரவையில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தார். கரூர் மாவட்ட அதிமுக செயலாளர் உள்ளிட்ட பல முக்கிய கட்சிப் பொறுப்புகளை வகித்து வந்த அவர், 2015ஆம் ஆண்டு, அப்போதையை முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவால் அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கப்பட்டார்
இதையடுத்து ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செந்தில் பாலாஜி செயல்பட்டு வந்தார். 2017ஆம் ஆண்டு சபாநாயகரால் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏ-க்களில் ஒருவராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இதைத் தொடர்ந்து 2018ல் திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜி அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் வெற்றிபெற்று எம்எல்ஏ ஆனார்.
இந்நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் கரூர் தொகுதியில் வெற்றி பெற்ற செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி வழங்கியதோடு மின்துறை இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு: நேற்று காலை முதல் இன்று அதிகாலை வரை... நடந்தவை என்ன?
இந்நிலையில், நேற்று காலை (ஜூன் 13) 9 மணிக்கு அமைச்சர் செந்தில் பாலாஜியின் சென்னை இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொள்ளத் தொடங்கினர். அப்போது, நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி 'பொறுத்திருந்து பார்ப்போம்' என பேட்டியளித்தார். அச்சமயத்தில் அவர் பேசியவற்றை, கீழுள்ள லிங்க்-ல் அறியலாம்:
இந்நிலையில் ஜூன் 13 காலை 9.15 மணியளவில் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய உறவினர்கள் இடங்களிலும் சோதனை நடந்தது.
இதையடுத்து மாலை 5 மணிக்கு, புறவாசல் வழியாக அச்சுறுத்தப் பார்க்கும் பாஜகவின் அரசியல் செல்லுபடியாகாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.
தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதற்கு சரத்பவார், மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால், மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.
தொடர்ந்து இரவு 11 மணிவரை, கிட்டதட்ட 10 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்தது சோதனை. இன்று ஜூன் 14 நள்ளிரவு 2 மணியளவில் தலைமைச்செயலகத்தில் சோதனை யாவும் நிறைவடைந்த நிலையில், நள்ளிரவு 2 மணிக்கு அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை காரில் அழைத்துச் சென்றனர். அப்போது முகத்தை மூடியபடி நெஞ்சை பிடித்துக் கொண்டு அமைச்சர் செந்தில் பாலாஜி கதறி அழுதார்.
தொடர்ந்து நள்ளிரவு 2.15 மணியளவில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், சென்னை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் அவர். நள்ளிரவு 2.30 மணிக்கு செந்தில் பாலாஜியை பார்க்க திமுக எம்.பி என்.ஆர். இளங்கோ சென்றார். ஆனால் அப்போது அவரை பார்ப்பதற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என திமுக எம்.பி. என்.ஆர். இளங்கோ பேட்டியளித்தார்.
இதையடுத்து நள்ளிரவு 2.45 மணிக்கு உதயநிதி ஸ்டாலின், ரகுபதி உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு விரைந்தனர். தொடர்ந்து அதிகாலை 5.00 மணிக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி சுயநினைவின்றி காணப்பட்டார்; காது பக்கத்தில் வீக்கம் இருந்ததாக அமைச்சர் சேகர்பாபு பேட்டியளித்தார்.