கள்ளக்குறிச்சி பெண் ஆட்சியருக்கு நடந்தது துன்புறுத்தல் இல்லையா..? நீதிபதி கேள்வி!
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு எம்எல்ஏ ஆபாச தகவல் அனுப்பிய விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு உத்தரவிட்டது. மாநில அரசு இதுவரை நடவடிக்கை எடுக்காததை உயர்நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கௌரி கேள்வி எழுப்பியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜா அவர்களிடம், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சி. அருள் விக்னேஷ் அவர்கள் ஆபாசமான வாட்ஸ்அப் செய்திகள் அனுப்பியதாகவும், முறையற்ற வகையில் நடந்துகொண்டு துன்புறுத்தியதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியானது. இவ்விவகாரம் குறித்து சம்மந்தப்பட்ட பெண் ஆட்சியர் மூத்த அதிகாரிகளிடம் தெரிவித்ததாகவும், மாவட்ட ஆட்சியரின் கணவர் புகார் அளித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதுவரை இவ்விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஒருபக்கம் எதிர்கட்சி தலைவர்களும் கண்டனம் எழுப்பினாலும் தவெக அரசு மௌனம் காத்துவருகிறது.
இந்தசூழலில் தான் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் தான் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருக்கும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி விக்டோரியா கௌரி, இவ்விவகாரம் தொடர்பாக பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.
உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அலுவலர்களுக்கு பாலின உணர்திறன் மற்றும் உள்ளக புகார் குழு சார்பில், பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மதுரை லேடி டோக் கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய நீதிபதி விக்டோரியா கௌரி, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு எம்.எல்.ஏ., ஒருவர் ஆபாசமான தகவல் அனுப்பிய விவகாரத்தில், அது பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல் இல்லையா? ஆனால், இதுவரை மாநில அரசின் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கேள்வியை எழுப்பியுள்ளார்

