கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ விவகாரம்.. உண்மை கண்டறியும் குழு அமைக்க மனு!
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ சி. அருள் விக்னேஷ் மீது ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக புகார். தேசிய மகளிர் ஆணையம் உண்மை கண்டறியும் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என மனு அளிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜா அவர்களிடம், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சி. அருள் விக்னேஷ் அவர்கள் ஆபாசமான வாட்ஸ்அப் செய்திகள் அனுப்பியதாகவும், முறையற்ற வகையில் நடந்துகொண்டு துன்புறுத்தியதாகவும் ஊடகங்களில் வெளியான செய்திகள் குறித்து, தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவரிடம் வழக்கறிஞர் அ. ராஜராஜன் அவர்கள் இன்று மனு அளித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோரின் கவனத்திற்கும் புகார்கள் கொண்டு செல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படாதது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, ஆளுங்கட்சியின் பெரும்பான்மைக்கு சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினரின் ஆதரவு தேவைப்படும் அரசியல் சூழலில், அரசியல் அழுத்தம் அல்லது வெளிப்புற தலையீடு காரணமாக நடவடிக்கை தடுக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகமும் எழுகிறது. எனவே, மாநில அரசு விசாரணை செய்வதை மட்டும் நம்பியிருக்காமல், தேசிய மகளிர் ஆணையமே சுதந்திரமான உண்மை கண்டறியும் குழுவை அமைத்து நேரடியாக விசாரணை நடத்த வேண்டும் என்றும், நிர்வாக ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படாததற்கான காரணங்களையும் கண்டறிந்து, பொறுப்பானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

