ஆனந்த் முன்னிலையில் வெடித்த மோதல்.. கொந்தளித்த நிர்வாகி.. பதாகையோடு முழக்கம்.. என்ன காரணம்?
தனது கட்சிப் பதவி பறிக்கப்பட்டதாக கூறி, தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் கலந்துகொண்ட கூட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட நிர்வாகியால் பரபரப்பான சூழல் நிலவியது. “கழகமே நீதிவேண்டும், குறைகளை கேட்க வேண்டும், செஞ்சி தொகுதி நிர்வாகிகளின் பிரச்சினையை கேள்" என்று பதாகைகளை ஏந்தி வந்ததால் கூட்டத்தில் குழப்பம் நிலவியது.. திடீர் போர்க்கொடிக்கு காரணம் என்ன? விரிவாக பார்க்கலாம்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் உரையாற்றிய பொதுச்செயலாளர் ஆனந்த், இறுதியாக பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது அங்கு வந்த மேல்மலையனூர் ஒன்றிய துணை செயலாளராக இருந்த சரண்ராஜ், தன்னுடைய பதவி பறிக்கப்பட்டதற்கு நீதிவேண்டும் என கேட்டு "கழகமே நீதிவேண்டும், குறைகளை கேட்க வேண்டும், செஞ்சி தொகுதி நிர்வாகிகளின் பிரச்சினையை கேள்" என்ற வாசகம் அடங்கிய பாதகைகள் மற்றும் பேனர்களுடன் முழக்கமிட்டார்.
அப்போது, அங்கிருந்த மேல்மலையனூர் ஒன்றிய செயலாளர் திருமலை மற்றும் அவரது ஆதரவாளர்கள், சரண்ராஜ் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களை தடுத்து பதாகைகள் மற்றும் பேனர்களை பிடிங்கி எரிந்தனர். அபோது, விஜய் படத்துடன் இருந்த அந்த பதாகையை, தவெக தொண்டர்கள் சிலர் காலால் மிதித்து தங்கள் எதிர்ப்பை காண்பித்தனர்.
இதனால் இரு தரப்புக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஏற்பட்ட குழப்பத்தால், நலத்திட்ட உதவிகளை முழுமையாக கொடுக்கமால் பாதியிலேயே புறப்பட்டுச் சென்றார் பொதுச்செயலாளர் ஆனந்த்.
ஒரு மாத்திற்குள் பொதுக்கூட்டங்களை நடத்தி முடித்து மாநாட்டை நடத்த தவெக திட்டமிட்டு வரும் நிலையில், செஞ்சியில் உட்கட்சி பூசல் வெளிப்படையான மோதலாக மாறியிருக்கிறது.