அமைச்சர் பொன்முடியிடம் 6 மணி நேர விசாரணை! அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடந்தது என்ன? வெளிவந்த தகவல்!
அமைச்சர் பொன்முடி 2006 முதல் 2011 வரை அமைச்சராக இருந்த காலத்தில் செம்மண் குவாரிகள் நடத்துவதற்கு முறைகேடாக அனுமதி அளித்து, அதன் மூலமாக தமிழக அரசுக்கு 28 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக கடந்த 2007-ம் ஆண்டு புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 17ஆம் தேதி அவருக்கு சொந்தமான ஏழு இடங்களில் சோதனை நடத்தினர்.
இதில் அமைச்சரின் சைதாப்பேட்டை இல்லம், சென்னை கே.கே.நகரில் இருக்கும் தனியார் மருத்துவமனை உட்பட பல இடங்களில் கிட்டத்தட்ட 19 மணி நேரம் சோதனை நடைபெற்றது. சோதனை முடிந்து அன்று இரவு அமைச்சர் பொன்முடி விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த விசாரணை மறுநாளான ஜூலை 18, 2023 அதிகாலை 3 மணி வரை நடந்தது.

அதன் பின்னர் 18 ஆம் தேதி மாலையும் அமைச்சர் பொன்முடி விசாரணைக்கு வர சம்மன் அனுப்பப்பட்டது. இதைத்தொடர்ந்து அமைச்சர் பொன்முடி மற்றும் எம்.பி. கெளதம சிகாமணி இருவரும் நேற்று (ஜூலை 18) மாலை 4 மணியளவில் விசாரணைக்கு ஆஜரானர். இவர்களுடன் திமுக வழக்கறிஞர் சரவணனும் ஒரு மருத்துவரும் உடன் வந்திருந்தார்கள்.
இந்நிலையில் அமைச்சர் மற்றும் அவர் மகன் தொடர்பான இடங்களில் செய்த சோதனையின் போது பல்வேறு குற்ற ஆவணங்கள், ரூ.81.7 லட்சம் பணம், ரூ.13 லட்சம் மதிக்கத்தக்க வெளிநாட்டு நாணயம் (பிரிட்டிஷ் பவுண்டுகள்) ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாகவும் ரூ.41.9 கோடி நிலையான வைப்பு நிதி முடக்கப்பட்டதாகவும் அமலாக்கதுறை தெரிவித்தது.
இதன் அடிப்படையில் முறைகேடாக குவாரிகளுக்கு உரிமம் வழங்கியதன் மூலம் கிடைக்கப்பெற்ற பணம், அதன் மூலம் வாங்கிய சொத்துக்கள் தொடர்பாக அமலாக்கத்துறை கேள்வி எழுப்பியதாக தெரிகிறது. தொடர்ந்து கைப்பற்றப்பட்ட பணத்தின் மூலதனம் எங்கிருந்து கிடைத்தது உள்ளிட்டவை குறித்தும் அதிகாரிகள் கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.

அதேபோல் கெளதம சிகாமணியின் அந்நிய செலாவணி வழக்கு, இந்தோனேசியா மற்றும் அரபு நாடுகளில் செய்யப்பட்ட முதலீடுகள் தொடர்பாகவும் கேள்வி எழுப்பி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சோதனை நடந்தபோது யாரையும் உள்ளே அனுமதிக்காத வகையில் தமிழக காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து 6 மணி நேரம் நடந்த விசாரணை இரவு 10.30 மணியளவில் முடிவுக்கு வந்தது. இதன் பின்பு அமைச்சர் பொன்முடி மற்றும் கெளதம சிகாமணி வீடு திரும்பினர். விசாரணை தொடர்பாக அமைச்சர் பொன்முடி தரப்பில் கேட்டபோது அடுத்த விசாரணை தொடர்பாக எந்த சம்மனையும் அமலாக்கதுறை அதிகாரிகள் வழங்கவில்லை என தெரிவித்தனர்.