விஜய்யின் 5 அஸ்திரங்கள்.. டிசம்பர் வரை பக்கா ப்ளான்.. செயற்குழுவில் என்ன நடந்தது?
விஜய்யின் மக்கள் சந்திப்பு எப்போது? சுற்றுப்பயண திட்டம் என்ன? என்று பல்வேறு கேள்விகள் எழுந்துவந்த நிலையில், அத்தனை கேள்விகளுக்கும் இன்றைய தவெக செயற்குழு கூட்டத்தில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள, 5 முக்கிய அஸ்திரங்களை கையில் எடுத்திருக்கிறார் தவெக தலைவர் விஜய். அதன்படி, டிசம்பர் வரை போட்ட திட்டம் என்ன என்று விரிவாக பார்க்கலாம்.
தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டம், சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கட்சித் தலைவர் விஜய் தலைமையில் கூடிய இந்த செயற்குழுவில், மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். முன்னதாகவே, இந்த கூட்டத்தில் பல முக்கிய விஷயங்கள் ஆலோசிக்கப்படும் என்று கூறப்பட்டது.
அதன்படியே, காலை 11 மணியளவில் அலுவலகத்தில் எண்ட்ரி ஆனது விஜய்யின் கார். அவர் வந்து இறங்கியதும் தமிழ்த்தாய் வாழ்த்து, உறுதிமொழி, கொள்கை பாடல்கள் ஒலிக்கப்பட்டு நேரலை துண்டிக்கப்பட்டது. சுமார் 2 மணி நேரத்திற்கு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார் விஜய்.
தொடர்ந்து, மீண்டும் நேரலை துவங்கியபோது, 20 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது. மாநில நிர்வாகிகள் அனைவரும் வந்து தீர்மானங்களை வாசித்து முடிக்க, முதல் இரண்டு முக்கிய தீர்மானங்களை கடைசியாக வந்து வாசித்தார் விஜய். பரந்தூர் மக்கள் உட்பட விவசாயிகளின் நலன் மற்றும் உரிமைக்காகத் தமிழக வெற்றிக் கழகம் என்றும் துணை நிற்கும். கொள்கை எதிரியான பாஜகவுடனோ, பிளவுவாத சக்திகளுடனோ என்றும் கூட்டணி இல்லை என்பதுதான் அவர் வாசித்த தீர்மானங்கள்.
இந்த நிலையில்தான், டிசம்பர் வரை அடுத்தடுத்த திட்டங்களை கையில் எடுத்திருக்கிறது தவெக. அதன்படி,
ஜூலை மாதத்தில் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தை நடத்தி முடிப்பது என்று முடிவாகியுள்ளது. முன்னதாக, கடந்த ஏப்ரல் இறுதியில் கோவையில் நடத்தப்பட்ட கூட்டத்தைப் போன்று மீதமிருக்கும் மண்டலங்களில் வாக்குச்சாவடி கூட்டத்தை நடத்தி முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து,
ஐந்து மண்டலங்களாக, 120 மாவட்டங்கள், 12,500 கிளைக் கழங்களில் ஜூலை மற்றும் ஆகஸ்ட்டில் கொள்கை விளக்க பொதுக்கூட்டங்களை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. 2 கோடி உறுப்பினர்களை கட்சியில் இணைக்கும் வகையில் உறுப்பினர் சேர்க்கை முகாமை தீவிரப்படுத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த ஆண்டு அக்டோபரில் கொள்கை விளக்க மாநாடு நடத்தப்பட்ட நிலையில், வரும் ஆகஸ்ட்டில் கட்சியின் இரண்டாவது மாநில மாநாட்டை பிரமாண்டமாக நடத்தி முடிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மாநாடு முடிந்து செப்டம்பர் முதல் டிசம்பர் வரை தமிழகம் முழுவதும் மக்களை சந்திக்கும் வகையில் விஜய்யின் சுற்றுப்பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மாவட்ட நிர்வாகிகள் வேலைகளை தீவிரப்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதோடு,
கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க விஜய்க்கே முழு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோடு, விஜய்யை முதல்வர் வேட்பாளராக அறிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இப்படியாக, அடுத்தடுத்த 5 முக்கிய அஸ்திரங்களை செயற்குழு மூலம் கையில் எடுத்திருக்கிறார் விஜய். விஜய்யின் இந்த நகர்வு குறித்த உங்கள் கருத்தை கமெண்ட்டில் குறிப்பிடுங்கள்.