ராமேஸ்வரம்: பயன்பாட்டிற்கு வந்துள்ள புதிய பாம்பன் பாலத்தின் சிறப்புகள் என்ன? சேவைகள் என்னென்ன?
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மண்டபத்தையும் ராமேஸ்வரம் தீவையும் இணைக்கும் வகையில் புதியதாக கட்டப்பட்டுள்ள பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்துள்ளார். பழைய பாலம் அதன் உறுதித்தன்மையை இழந்ததால் ரூ.550 கோடி செலவில் புதிய பாலம் கட்டப்பட்டு, ராமநவமியான இன்று பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
புதிதாக திறக்கப்பட்டுள்ள பாலத்தின் சிறப்பு என்ன?
ராமேஸ்வரத்திற்கு செல்லும் ரயிலின் விவரம் என்ன உள்ளிட்ட தகவல்களை விரிவாக பார்க்கலாம்.
பழைய பாம்பன் ரயில் பாலத்தின் வரலாறு
புதிதாக கட்டப்பட்டிருக்கும் பாம்பன் பாலத்தின் அருகே இருக்கும் பழைய பாலத்தின் பின்னணி என்று பார்த்தால், ராமேஸ்வரத்தை மண்டபத்துடன் இணைக்கும் வகையில் 1914ஆம் ஆண்டில் இந்த ரயில் பாலம் கட்டப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சியில் பாம்பன் பகுதியில் 2,050 மீட்டர் நீளத்தில் கடலுக்கு மத்தியில் அமைந்துள்ள இந்த பாலம். நூற்றாண்டுகளை கடந்த பாம்பன் பாலம், அதன் உறுதித்தன்மையை இழந்ததால் புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது.
கடலின் நடுவே கட்டப்பட்டுள்ள புதிய பாம்பன் ரயில் பாலத்தின் - சிறப்புகள் என்ன?
புதிதாக கட்டப்பட்டுள்ள இந்த பாலம், மண்டபத்தில் இருந்து ராமேஸ்வரம் வரை 2.08 கி.மீ நீளத்திற்கு கட்டப்பட்டுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 6 மீட்டர் உயரத்தில் எழுந்து நிற்கும் பாலத்தை, 333 கான்கிரீட் அடித்தளங்கள், 101 தூண்கள், 99 இடைவெளி இணைப்புகள் தாங்கிப்பிடிக்கின்றன. அத்தோடு 72.5மீட்டர் உயர லிப்ட் அமைக்கப்பட்டுள்ளது. பாம்பன் பாலத்தின் நடுப்பகுதி 17 மீட்டர் அளவுக்கு உயரம் வரை உயரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெரிய அளவிலான கப்பல்களும் பாம்பன் பாலத்திற்கு இடையே கடந்து செல்ல முடியும்.
இரட்டை ரயில் தடங்களை அமைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய பாம்பன் பாலம்:
வெறும் 2 நிமிடங்களில் புதிய பாம்பன் பாலம் தூக்கப்படுவதால், கடலோர காவல் ரோந்து பணியை விரைவாக மேற்கொள்ள முடியும். இந்த நிகழ்வு, இந்தியாவின் பாதுகாப்பு துறையில் ஒரு முக்கியமான சாதனையாகவும் பார்க்கப்படுகிறது. நீடித்த ஆயுள், குறைந்த பராமரிப்புத் தேவைகளை கொண்ட வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள பாலம், எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ப இரட்டை ரயில் தடங்களை அமைக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
புதிய ரயில் சேவைகள் என்னென்ன?
பாலம் பயன்பாட்டிற்கு வந்ததைத் தொடர்ந்து, ராமேஸ்வரம் - தாம்பரம் விரைவு ரயில் சேவை தொடங்கப்படுகிறது. புதிய ராமேஸ்வரம் – தாம்பரம் விரைவு ரயில், தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் இயக்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு இரண்டு ரயில்கள் இயக்கப்பட இருக்கிறது. தினமும் பிற்பகல் 3.35 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் பாம்பன் எக்ஸ்பிரஸ், ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிபுலியூர், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக அதிகாலை 3.10 மணியளவில் தாம்பரம் சென்றடையும்.
அதுபோல, தினசரி மாலை 06.05 மணியளவில் தாம்பரத்திலிருந்து புறப்படும் ரயில், செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிபுலியூர், சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைபூண்டி, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம் வழியாக அதிகாலை 5.45 மணியளவில் ராமேஸ்வரம் வந்தடையும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. 18 பெட்டிகள் கொண்ட இந்த ரயில் சேவை, பழையபடி ராமேஸ்வர பயணத்தை எளிதாக்க இருக்கிறது. அப்புறம் என்ன ராமேஸ்வரத்துக்கு டிக்கெட் போட வேண்டியதுதானே..