ராஜபாண்டி
ராஜபாண்டிpt

விருதுநகர்: ‘வெளிநாட்டு வேலை’ என நம்பி ஆன்லைன் மோசடி கும்பலிடம் சிக்கிய இளைஞர்- பதறும் குடும்பம்!

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர், வெளிநாட்டு வேலைக்கு சென்ற இடத்தில் ஆன்லைன் மோசடி கும்பலிடம் சிக்கிக்கொண்டு தவித்து வருகிறார். அவரை மீட்கும் பொருட்டு குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

செய்தியாளர் - கருப்பஞானியார்

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பை அடுத்த இலந்தைக்குளத்தை சேர்ந்தவர் பால்சாமி - சுப்புதாய் தம்பதியினர். இவர்களின் மகன் ராஜபாண்டி (வயது 31). கிருஷ்ணன்கோயிலில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக்.படித்து முடித்த இவர் வெளிநாட்டில் வேலை செய்ய வேண்டும் என்ற ஆசையில் மலேசியா, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று பணியாற்றினார். இந்நிலையில், ஒப்பந்தம் முடிந்து சொந்த ஊர் திரும்பிய ராஜபாண்டி, உள்நாட்டிலேயே அவருடைய கல்வித்தகுதிக்கு ஏற்றாற்போல் வேலைத்தேடினார். ஆனால் பல மாதங்கள் முயற்சித்தும், சரியான வேலை அமையாததால் மீண்டும் வெளிநாட்டு வேலைக்குச் செல்ல முடிவெடுத்துள்ளார்.

இதற்காக, ஏஜெண்டு மூலமாக தாய்லாந்து நாட்டிற்கு சென்ற ராஜபாண்டி, அங்கிருந்து வேறொரு நாட்டுக்கு சட்டவிரோதமாக கடத்திச் செல்லப்பட்டு கொத்தடிமையாக வைக்கப்பட்டிருக்கிறார் என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் பரபரப்பு புகார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து ராஜபாண்டியின் அம்மா சுப்புதாயிடம் பேசினோம்‌. அப்போது அவர் தெரிவிக்கையில், "எனது மகன் எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவன், நன்றாக ஆங்கிலம் பேசும் திறமை உடையவன். தான் படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லையே என்ற ஏக்கத்தில்தான் வெளிநாட்டிற்கு வேலைக்கு கிளம்பிச் சென்றான்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்த வெளிநாட்டு வேலை ஏஜென்ட் ரவி என்பவர் மூலமாக, தாய்லாந்து நாட்டில் ஐ.டி. கம்பெனிக்கு வேலைக்கு சென்றான். அங்கு வேலைக்கு முன்பணமாக ஒரு லட்சம் கட்டியதோடு, விசாவுக்கான செலவுத் தொகையும் நாங்களே கொடுத்தோம். இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் தாய்லாந்து நாட்டிற்கு ஏஜெண்டு மூலமாக ஐ.டி. வேலைக்கு புறப்பட்டு சென்ற எனது மகன், அங்கு தனியார் கம்பெனி ஒன்றில் நேர்முகத்தேர்வில் கலந்திருக்கிறார். அதில் வேலைக்கிடைக்காததால், என்னை தொடர்பு கொண்ட ராஜபாண்டி, 'நான் சொந்த ஊர் திரும்பப் போகிறேன்' என கூறினார். அதுதான் நாங்கள் அவனை நல்லபடியாக பார்த்து பேசிய கடைசி சம்பவம்.

ராஜபாண்டி
“இனிமேல் அதைப் பார்ப்பீர்கள்” - அதிமுகவில் இணைந்தது குறித்த கேள்விக்கு நடிகை கெளதமி ’பளீச்’ பதில்!

அதன்பின், 15 நாட்கள் ஆகியும் எனது மகனிடம் இருந்து எந்த அழைப்பும் இல்லை. ஊர் திரும்புவதாக சொன்ன மகன் அங்கிருந்து எங்கு சென்றான், என்ன ஆனான் எனத்தெரியாமல் நாங்கள் பெரும் கவலைக்குள்ளானோம். என்ன நடந்தது என தெரிந்துக்கொள்வதற்காக அவனை அழைத்துச் சென்ற ஏஜெண்ட் ரவியின் செல்போனுக்கு போன் செய்தபோது அவருடைய எண் சுவிட்ச் ஆப்பில் இருந்தது எங்களுக்கு மேலும் பதற்றத்தை அளித்தது. யாரை பார்த்து எப்படி உதவிக்கேட்பது எனத்தெரியாமல் பல நாட்கள் முட்டி மோதினோம்.

பின்னர் திடீரென ஒரு நாள் எனது மகன் ராஜபாண்டியிடமிருந்து அழைப்பு வந்தது. அதில் அவன், மிகுந்த பதற்றத்துடன் பேசினான். ஐ.டி. வேலைக்காக அழைத்துவரப்பட்டு தான் ஏமாற்றப்பட்டதாக கூறினான். தாய்லாந்து நாட்டிலிருந்து நாடு திரும்ப முயற்சிக்கும்போது மியான்மர் நாட்டில் வேறொரு கம்பெனியில் வேலை இருப்பதாக கூறி, அங்கிருந்து வேறொரு ஏஜென்ட் மூலமாக அவனை மியான்மர் நாட்டிற்கு அழைத்து சென்றிருக்கின்றனர். அங்கு மோசடி கும்பல் ஒன்றில் எனது மகனை சிக்க வைத்துவிட்டு ஏஜென்ட் தலைமறைவாகிவிட்டார் என தெரிவித்தான்.

இதைக்கேட்கையில் எனக்கு பகீரென்று இருந்தது. அவன் மியான்மர் நாட்டில் 'கெயின்' எனும் இடத்தில் சிக்கி தவிப்பதாக கூறினான். அங்குள்ள மோசடி கும்பல், எனது மகன் ராஜபாண்டியை கொத்தடிமையாக நடத்தி வேலை வாங்கி வருகின்றனர். சமூக வலைத்தளமான 'பேஸ்புக்' மூலம் தமிழ்நாட்டு இளைஞர்களை குறிவைத்து இளம்பெண்கள் போல பேசி பணம் பறிப்பதுதான் அந்த கும்பலின் வேலை.

ராஜபாண்டி
எதையாவது பேசுவோம்|திமுகவில் இணைந்த இன்னொரு நடிகை; யார் தீவிரவாதிகள்? - முதல்வர் ஸ்டாலின் ஆதரவு குரல்

இந்த மோசடியில் எனது மகனை கட்டாயப்படுத்தி ஈடுபட வைப்பதுடன், சம்பளம், சாப்பாடு என எதுவும் தராமல் கொடுமைப்படுத்தி வருகின்றனர். தினமும் அதிகாலை 4 மணிக்கு ஆரம்பிக்கும் வேலை இரவு 7:30 மணி வரை தொடர்ந்து 16:30 மணி நேரம் வரை நீள்கிறதாம். இந்த வேலையை செய்ய கட்டாயப்படுத்துகின்றனர் என என் மகன் கூறினான்.

காலை மற்றும் இரவு உணவாக ரொட்டித்துண்டும், மதிய உணவாக கஞ்சியும் வழங்கப்படுகிறதாம். வாடிக்கையாக தினசரியும் இதே உணவு வழங்கப்படுவதால் உடல் உபாதைகள் ஏற்பட்டு தற்போது மூல நோயில் சிக்கித்தவிப்பதாக என மகன் புலம்புகிறான். மேலும், மடிக்கணினியில் தொடர்ந்து 16.30 மணி நேரம் கண் விழித்திருந்து வேலை பார்ப்பதால் கண் பார்வை குறைப்பாட்டாலும் அவன் பாதிக்கப்பட்டிருக்கிறான். உடம்பு சரியில்லை என ஒரு நாள் விடுமுறை கேட்டால் கூட 'உன்னை வைத்து எனக்கு என்ன லாபம் வந்திருக்கிறது. நீ கடந்த ஒரு வாரத்தில் என்ன வேலை செய்தாய், எனக்கு என்ன சம்பாத்தியம் செய்து கொடுத்தாய்' என கேட்டு அவனை அடித்து துன்புறுத்தியிருக்கின்றனர்.

மோசடிக்காக நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் அந்த கும்பல், இளைஞர்களிடம் பேசுவதற்கு புதுப்புது ட்ரான்ஸ்லேட்டர்களை பயன்படுத்துகின்றனர். பேஸ்புக்கில் பேசும் இளைஞர்கள், சம்பந்தப்பட்ட பெண்ணை வீடியோக் காலில் நேரில் பார்க்கவேண்டும் என விருப்பம் தெரிவித்தால் அதற்கும் தயாரான ஏற்பாடுகளையும் அந்தக்கும்பல் செய்துவைத்திருக்கின்றனர். அவர்கள் விரித்த மோசடி வலையில் தமிழ்நாட்டை சேர்ந்த நிறைய இளைஞர்கள் சிக்கி இருப்பதாக எனது மகன் கூறுகிறான். இந்தநிலையில், அங்கிருந்து எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வேலை செய்யும் இடத்தில் கண்காணிப்பாளர்கள் யாரும் இல்லாத சமயமாக பார்த்து ஆன்லைன் வீடியோ கால் மூலமாக என்னிடம் பேசும் எனது மகன் இந்த விவரங்களை எல்லாம் கூறுகையில் எனக்கு அழுகையும், பயமும்தான் முட்டிக்கொண்டு வருகிறது.

ராஜபாண்டி
6லட்சம் கடனுக்காக துணை நடிகரின் மனைவி 2 மாதம் அடைத்துவைத்து கொடுமை?-பாஜக பெண் நிர்வாகியிடம் விசாரணை!

இங்க வீட்டுல அவன் ராஜா மாதிரி இருந்தான், இப்போ வெளிநாட்டுல கொத்தடிமையாக இருக்கிறான் என்பதை நினைக்கையில், உயிரோடு நாடு திரும்புவானா என்ற சந்தேகம் எழுகிறது. ஏனெனில், என்னால் இனி வேலை செய்ய முடியாது, சம்பளம் எதுவும் வேண்டாம் ஊருக்கு அனுப்பிவையுங்கள் என்று சொன்னால் கூட, ‘உன்னை ஏஜென்ட் இரண்டு லட்ச ரூபாய்க்கு எங்களிடம் விற்றுவிட்டான். ஆகவே உன்னை விட வேண்டும் என்றால் ஐந்து லட்ச ரூபாய் தர வேண்டும்’ என மிரட்டியிருக்கின்றனர். ஆகவே உணவு, உடை, தூக்கம், அடிப்படை வசதி என எதுவும் இல்லாமல் கொத்தடிமையாக வாழ்ந்து எனது மகன் ராஜபாண்டியை மீட்டு தாயகம் அழைத்து வருவதற்கு மாவட்ட நிர்வாகமும், வெளியுறவுத் துறையில் விரைந்து முயற்சிகள் செய்ய வேண்டும்” என்றார் கண்ணீருடன்.

கோரிக்கை குறித்து, மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் நம்மிடையே கூறுகையில், "பாதிக்கப்பட்ட ராஜபாண்டியின் குடும்பத்தினர் அளித்த கோரிக்கை மனுவின் பேரில் தமிழக அரசின் அயலக தமிழர் நலன் துறை மற்றும் இந்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகம் ஆகியவற்றுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மியான்மர் நாட்டில் உள்ள இந்திய தூதரகத்திற்கு ராஜபாண்டியின் விவரங்கள் அனுப்பி அவரை மீட்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. விருதுநகர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் மாணிக்கம் தாகூரின் கவனத்திற்கும் இந்த பிரச்சனை கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. அவரின் மூலமாகவும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது. மாவட்ட நிர்வாகம் சார்பிலும், மியான்மரில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கு ராஜபாண்டி பற்றிய தகவல் தெரிவிக்கப்பட்டதோடு அவரை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு போனில் பேசியிருக்கிறேன்.

ராஜபாண்டி, தங்கியிருப்பதாக சொல்லப்படும் இடத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை இருப்பதால் அவரை மீட்பதில் சின்ன தாமதம் ஏற்பட்டிருப்பதாக கூறியிருக்கின்றனர். விரைவில் ராஜபாண்டியை மீட்டு தாயகம் அழைத்து வருவதற்கு நடவடிக்கைகள் நடந்துக்கொண்டு இருக்கின்றன” என்றார்.

ராஜபாண்டி
விவசாயி சின்னத்தை பறிகொடுக்கும் நா.த.க.? அடுத்து என்ன செய்யப்போகிறது நாம் தமிழர் கட்சி?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com