“இனிமேல் அதைப் பார்ப்பீர்கள்” - அதிமுகவில் இணைந்தது குறித்த கேள்விக்கு நடிகை கெளதமி ’பளீச்’ பதில்!

பாஜகவிலிருந்து விலகியிருந்த நடிகை கெளதமி அதிமுகவில் இன்று (பிப். 14) இணைந்துள்ளார்.
கெளதமி, எடப்பாடி பழனிசாமி
கெளதமி, எடப்பாடி பழனிசாமிட்விட்டர்

அதிமுகவில் இணைந்த நடிகை கெளதமி

தமிழ்த் திரையுலகில் ஒருகாலத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர், கெளதமி. இவர், தமிழ் தவிர பிற மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில், பாஜகவில் இணைந்து பல்வேறு பொறுப்புகளை வகித்துவந்த நடிகை கெளதமி, அக்கட்சியிலிருந்து சமீபத்தில் விலகினார். இந்த நிலையில், நடிகை கெளதமி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அலுவலகத்தில் சந்தித்து, இன்று (பிப்.14) அக்கட்சியில் இணைந்தார்.

அதிமுகவில்  இணைந்தது ஏன்? - கெளதமி விளக்கம்

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’அண்ணன் எடப்பாடி பழனிசாமியின் பணிகள் மற்றும் அனைவருடனும் அவர் இணைந்து கட்சியை எடுத்துச் செல்லும் செயல்கள் என அனைத்தும் என்னைக் கவர்ந்ததால் நான் அதிமுகவில் இணைந்தேன். மக்களின் சேவையை நல்லவிதமாகவும் அவர்களின் உரிமைகளை ஒவ்வொருவருக்கும் கொண்டுபோய்ச் சேர்க்கும் ஓர் சரியான அரசியல் கட்சியாக அதிமுக உள்ளது என முழு நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

கிட்டத்தட்ட பாஜவில் 25 ஆண்டுகளாக இருந்தேன் என்பது உங்கள் எல்லோருக்குமே தெரியும். சில காரணங்களுக்காக அதிலிருந்து விலகி வந்தேன். ஆனால், நல்ல காரணங்களுக்காகவும் சரியான நேரத்துக்காகவும் தற்போது அதிமுகவில் இணைந்துள்ளேன். அதிமுகவில் இணைந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.

இதையும் படிக்க: #DelhiChalo தீவிரமான போராட்டம்.. ட்ரோன் மூலம் கண்காணிக்கும் அரசு; பட்டம்விட்டு தடுக்கும் விவசாயிகள்!

”நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்” - கெளதமி

அவரிடம், ‘உங்களுடைய அடுத்தகட்ட பணிகள் எப்படி இருக்கும்’ என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், “அதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்” என்றவர் தொடர்ந்து, “ஏனென்றால் ஒருவிஷயம், நான் பெருமைக்கு என இதைச் சொல்லவில்லை. நான் இப்படித்தான் என்பதை, 30-40 வருடங்களாக நீங்களே என்னைக் கண்முன் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். பொறுப்பென்று எனக்கு ஒன்று வந்துவிட்டால், இறங்கி வேலை செய்வேன். அது எல்லோருக்குமே தெரியும். அரசியலில் என்னுடைய ஈடுபாடு இதுவரை அப்படித்தான் இருந்துள்ளது.

இனிமேலும் அப்படித்தான் இருக்கும் என்று நான் சொல்லவில்லை; இன்னும் தீவிரமாக இருக்கும் என்பதும், அது நடைபெறுவதற்கான வாய்ப்பும் சரியான இடமும் கிடைத்திருக்கிறது என நான் முழுதாக நம்புகிறேன். பாஜகவில் இருந்து ஏன் விலகினேன் என்பதை என்னுடைய அறிக்கையிலேயே தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன். மேலும் இதுகுறித்து உரிய நேரத்தில் விரிவாகக் கூறுகிறேன்” என்றார்.

அவரிடம், ’உங்களுக்கு கட்சியில் சேர அழைப்புவிடுக்கப்பட்டதா அல்லது தனிப்பட்ட விருப்பத்தின்பேரில் இணைந்தீர்களா’ எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ”உண்மையைச் சொல்ல வேண்டுமானால், எல்லாவற்றையும்விட என் மனதில் அம்மா (ஜெயலலிதா) எத்தனை வருடங்களாக இருக்கிறார் என உலகத்துக்குத் தெரியும். இது அரசியலுக்கு அப்பாற்பட்டது. அம்மா, மக்களுக்காகவே வாழ்ந்தவர். அவருக்குப் பிறகும் அதிமுகவை அழகாக நடத்திக் கொண்டுபோகும் எடப்பாடி பழனிசாமி மீதும் ஒரு நம்பிக்கை வருகிறது” என்றார்.

இதையும் படிக்க: மகள் மாகாண முதல்வர்.. சகோதரர் மீண்டும் பிரதமர்.. அதிரடி முடிவெடுத்த நவாஸ்; ஆலோசனையில் இம்ரான் கான்!

”நான் பயப்படவில்லை” - நடிகை கெளதமி

அவரிடம், ’25 வருடங்களாக இருந்த அந்தப் பாதையை விட்டுவிட்டு, இன்னொரு புதிய பயணத்திற்கு தாங்கள் வந்துள்ளீர்கள். இவ்விரண்டுக்குமான வித்தியாசம்’ என கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ”வித்தியாசம் என்னவென்பதை நான் போகப்போகப் பார்க்க போகிறேன். ஒரு பெரிய வித்தியாசம் இருக்கும் என நான் பயப்படவில்லை. ஏனென்றால் அங்கே இருக்கும் காரணமும் இங்கே இருக்கும் காரணமும் ஒன்றுதான். எல்லாமே மக்களின் சேவைதான்” என்றார்.

மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் வேளையில், சிலர் வேறு கட்சிகளுக்குத் தாவி வருகின்றனர். அந்த வகையில், கடந்த ஆண்டுகூட பாஜகவில் அங்கம் வகித்துவந்த மற்ற நடிகையும் டான்ஸ் மாஸ்டருமான காயத்ரி ரகுராமும் அதிமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: இறந்ததாகக் கருதி இறுதிச்சடங்கு.. மயானத்தில் உயிருடன் எழுந்த ஒடிசா பெண்.. பயத்தில் அலறி ஓடிய மக்கள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com