கும்பகோணம் | அரசு வேலை வாங்கித் தருவதாக பல லட்சம் மோசடி – ஒருவர் கைது
செய்தியாளர்: கு.விவேக்ராஜ்
கும்பகோணம் அருகே சாக்கோட்டையைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர், அமைச்சர் துரைமுருகன், எம்.பி கனிமொழி உள்ளிட்டோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை காண்பித்து ரயில்வே துறை மற்றும் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பல லட்ச ரூபாய் மோசடி செய்துள்ளார். இதையடுத்து பணம் கொடுத்தவர்கள் ராஜேஷ் தேடி வந்த நிலையில் அவர் வெளிநாடு தப்பிச் சென்றுள்ளார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு ராஜேஷ் சொந்த ஊரான கும்பகோணம் அருகே சாக்கோட்டை வந்துள்ளார்.
இதையடுத்து ராஜேஷ் வந்த தகவல் அறிந்த அவரிடம் ரயில்வே வேலைக்காக ரூ.3 லட்சம் பணம் கொடுத்து ஏமாந்த, திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் துறையூர் பகுதியைச் சேர்ந்த பிரவீன் என்பவர், ராஜேஷிடம் பணம் கேட்டு வந்துள்ளார். அப்போது பணத்தை கொடுக்க மறுத்துள்ளார். இதையடுத்து நாச்சியார்கோவில் காவல் நிலையத்தில் ராஜேஷ் மீது பிரவீன் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் ராஜேஷை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர் கும்பகோணம், திருவாரூர் மாவட்டங்களில் சுமார் 20க்கும் மேற்பட்டோரிடம் ரூ. 2 லட்சம் முதல் 10 லட்சம் வரை பணத்தைப் பெற்றுக் கொண்டு ரயில்வே மற்றும் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து ராஜேஷை கைது செய்து இரவோடு இரவாக கும்பகோணம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.