விருதுநகர் | மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் உட்பட 3 பேர் உயிரிழப்பு
செய்தியாளர்: A.மணிகண்டன்
விருதுநகர் ஆமத்தூர் அருகே காரிசேரி ஊராட்சியில் உள்ள மாரியம்மன் கோயிலில் திருவிழா நடைபெற உள்ளது. இந்த திருவிழாவிற்காக மைக்செட் அமைக்கும் பணியில் அதன் உரிமையாளர் திருப்பதி ஈடுபட்டுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக மைக்செட் வயர், அருகில் இருந்த உயர் மின்னழுத்த கம்பி மீது பட்டு திருப்பதி மீது மின்சாரம் பாய்ந்துள்ளது.
இதைக் கண்ட அவரது ஏழு மாத கர்ப்பிணி மனைவி லலிதா (25) பாட்டி பாக்கியமி (65) ஆகியோர் காப்பாற்ற முயன்றுள்ளனர். அப்போது அவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்தும், கர்ப்பிணி வயிற்றில் வளரும் ஏழு மாத சிசு உட்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்களை காப்பாற்றச் சென்ற திருப்பதியின் அண்ணன் தர்மர் மற்றும் கவின் ஆகிய இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆமத்தூர் காவல் துறையினர் 3 பேரின் உடல்களையும் மீட்டு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த இருவர் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.