மதுரை | பாஜகவினர் - வழக்கறிஞர்கள் இடையே தள்ளு முள்ளு - காலணிகளை வீசியதால் பரபரப்பு
செய்தியாளர்: மணிகண்டபிரபு
அம்பேத்கரின் 135 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை அவுட் போஸ்ட் பகுதியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மதுரை வழக்கறிஞர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு, பாஜகவினருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அப்போது 100-க்கும் மேற்பட்ட பாஜக-வினர், மாலை அணிவித்து விட்டு கீழே இறங்கிய நிலையில், இருதரப்பினரும் மாறி மாறி கோஷங்களை எழுப்பினர்.
அப்போது கூட்டத்தில் காலணி ஒன்று வீசப்பட்டது. இதனையடுத்து பிரச்னை பூதாகரமான நிலையில், தொடர்ந்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்த முயன்றனர். ஆனால் இருதரப்பினர் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இந்த நிலையில், 50-க்கும் மேற்பட்ட பாஜக-வினர் சாலையில் அமர்ந்து போராட முயன்றனர். இதையடுத்து காவல்துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைத்தனர்.
இதைத் தொடர்ந்து பாஜக-வினருக்கு ஆதரவாக செயல்பட்டதாகக் கூறி தல்லாகுளம் காவல் உதவி ஆணையர் ராஜேஷை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என மதுரை மாவட்ட வழக்கறிஞர் சங்கம் மற்றும் தமிழ் புலிகள் கட்சியினர் கோஷமிட்டனர். இதனிடையே பாஜக-விற்கு ஆதரவாக காவல்துறை செயல்படுவதாகக் கூறி வழக்கறிஞர் வாஞ்சிநாதன், காவல் துறையினரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது